கேரளா வயநாட்டில் சிலர் இளைஞர்களிடம் வங்கி கணக்கை வாடகைக்கு கேட்டு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி சதி வலையில் சிக்க வைத்துள்ளனர்.
டிஜிட்டல் உலகில் விதவிதமான ஏமாற்று முறைகளை பயன்படுத்தி மக்களின் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். தற்போது கேரளாவில் நடந்த இந்த முறையில், அவர்களுக்கே தெரியாமல் அவர்களை ஒரு பார்ட்னர் போல் பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதுடன் சாதாரண மக்களிடம் பல லட்சங்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளனர். இந்த முறையின் பெயர் Mule Account Scams என்றழைக்கப்படுகிறது.
அதாவது ஒருவரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கை, பணம் கொடுத்து வாங்குவது அல்லது வாடகைக்கு எடுப்பதுதான் முள் கணக்கு மோசடி. இந்த மோசடியில் ஈடுபடும் நபர்கள், வங்கிக் கணக்கின் அசல் உரிமையாளரிடம் இருந்து, பாஸ்புக், ஏடிஎம் கார்டு, செக் புக், மற்றும் கணக்குடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் போன்றவற்றை முழுமையாகப் பெறுகின்றனர். அதன் பிறகு, இந்த வங்கிக் கணக்குகள் பல்வேறு நிதி மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், மோசடியானது அசல் வங்கிக் கணக்கு உரிமையாளரை மட்டுமே அடையாளம் காட்டும்.
வய்நாடு மாவட்ட சைபர் குற்றத் தடுப்புப் பிரிவின் ஆய்வாளர் ஷாஜு ஜோசப் கூறுகையில், “இதுவரை வயநாடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு வங்கிகளில் 500-க்கும் மேற்பட்ட முள் கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகரிக்கக்கூடும்" என்று குறிப்பிடுகிறார். மேலும், கலெக்டரேட் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் மட்டும் 32 முள் கணக்குகள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மோசடியில் சிக்கும் இளைஞர்கள், ஒரு வங்கிக் கணக்கிற்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை பெற்று, எளிதாகப் பணம் சம்பாதிக்க முடியும் என நம்புகின்றனர். இந்த பணத்தைப் பயன்படுத்தி ஆடைகள், மொபைல் போன்கள் வாங்குவது அல்லது மற்ற தேவைகளுக்காக செலவிடுகிறார்கள். இதில் சிலர் போதைப்பொருள் வாங்குவதற்கும் இந்தப் பணத்தைப் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
"இந்த மோசடியின் பின்விளைவுகளை அறிந்திருந்தும், விரைவாகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இளைஞர்கள் இதில் ஈடுபடுகின்றனர். சிலருக்கு, ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் கமிஷனும் வழங்கப்படுகிறது" என ஆய்வாளர் ஷாஜு ஜோசப் தெரிவித்தார்.
சமீபத்தில், கம்பலக்காடு பகுதியைச் சேர்ந்த 27 வயது இஸ்மாயில், நிதி மோசடி வழக்கில் நாகாலாந்து காவல்துறையால் கைது செய்யப்பட்டு கோஹிமாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதேபோல, 28 வயது முகமது ஃபானிஷ் என்பவரும், தனது கணக்கில் ரூ.58,000 பரிவர்த்தனை செய்ததற்காக டேராடூன் காவல்துறையால் குற்றவியல் வழக்கை எதிர்கொள்கிறார். மேலும், மடக்கிமலை பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரின் வங்கிக் கணக்கில் ரூ.32 லட்சம் மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த முள் கணக்குகள், மத்திய கிழக்கு நாடுகளிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் கேரள மக்களால் இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த வங்கிக் கணக்குகளுக்கு வரும் பணம் உடனடியாக டாலர்களாக மாற்றப்பட்டு, மற்ற கணக்குகளுக்கு மாற்றப்படுகின்றன. இதனால், முள் கணக்குகள் மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனைகள், தேசவிரோத அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படலாம் என காவல்துறை அச்சப்படுகிறது.
தாங்கள் ஒரு பெரிய குற்றத்தில் சிக்கியிருக்கிறோம் என்பதை காவல்துறை தங்கள் வீட்டைத் தேடி வரும்போதுதான் இளைஞர்கள் உணர்கிறார்கள்.