
தற்கொலை என்றால் என்ன? தன்னைத்தானே கொலை செய்து கொள்வதே தற்கொலை. சரி, நம்மை வேறு ஒருவர் கொலை செய்து விட்டால் அவருக்கு சட்டபடி சிறிது காலத்திற்கு தண்டனையும் அபராதமும் கிடைக்கும் இல்லையா? இவ்வளவு ஏன்? ஒருவர் ஆஸ்பத்திரியில் இறந்தால் கூட போஸ்ட்மார்ட்டம் செய்து எல்லாவிதமான பரிசோதனைகளையும் மேற்கொண்ட பிறகே பிணத்தை உரியவர் எடுத்துச் செல்ல அனுமதிக்கிறார்கள் இல்லையா?
அதாவது, அந்த நோயாளிக்கு ஏற்பட்ட மரணம் இயற்கையா அல்லது செயற்கையா என்பதை அறிந்த பிறகே மேற்கொண்டு ஆவதற்கான வழியைச் செய்கிறார்கள். ஒருவேளை அந்த நோயாளியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டால் போலீசார் விசாரணையை மேற்கொண்டு உரியவர்களுக்கு தண்டனையை வழங்குவது வழக்கம்.
ஆனால், இந்தத் தற்கொலை விஷயத்தை கையாளுவது என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயம். ஒரு நபர் ஏதாவது ஒரு காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவருக்குத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம், காதல் தோல்வியாக இருக்கலாம், பரீட்சையில் ஃபெயிலாகி இருக்கலாம், வேலை கிடைக்காமல் இருந்திருக்கலாம், உடன் படிப்பவர்களோ அல்லது வேலை செய்பவர்களோ அவரை அவமானபடுத்தி இருக்கலாம். இப்படி எத்தனையோ காரணங்கள் தற்கொலைக்கு இருக்கலாம்.
ஆனால், அதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதென்பது மிகவும் கடினமான ஒன்றாகும். நீங்கள் தற்கொலை செய்து கொள்வதால் உங்கள் தற்கொலைக்கு காரணமான நபர்களுக்கோ அல்லது தற்கொலைக்கான சம்பவத்திற்கு உடன்பட்ட நபர்களுக்கோ எந்த விளைவும் ஏற்படாது. உங்களின் தற்கொலை முயற்சியால் தண்டனையை அனுபவிப்பவர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?
உங்களுடைய பெற்றோர்களும், குழந்தைகளும், மனைவி /கணவன்மார்களும், உற்ற நண்பர்களும்தான் அதற்கான தண்டனையை வாழ்நாள் முழுவதும் அனுபவிப்பார்கள். ‘ஐயோ, அவனுக்கு /அவளுக்கு என்ன பிரச்னை இருந்தது என்று தெரியாமலேயே போய் விட்டதே, கேட்காமல் போய் விட்டோமே, நான் மட்டும் சரியாக கவனித்திருந்தால் இப்படி எல்லாம் நடக்காமல் இருந்திருக்குமே’ என்றெல்லாம் எண்ணி எண்ணி உங்களை நினைத்து அவர்கள் அழுவார்கள்.
வாழ்நாள் முழுவதும் அதற்கான தண்டனையை அவர்கள் மனதளவில் அனுபவிப்பார்கள். ஆகவே, தற்கொலை என்ற எண்ணம் உங்கள் மனதில் எப்போது லேசாக ஆரம்பிக்கத் தோன்றுமோ, அப்போதே அதை யாரிடமாவது கூறி உங்களின் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். அப்படிச் செய்யாவிட்டால் உங்களின் திடீர் தற்கொலை நடவடிக்கையால் உங்களைச் சேர்ந்தவர்கள், உங்களுக்காகப் பிறந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டி இருக்கும். ஆகவே, தற்கொலையை தவிர்த்து, அதற்கு நிரந்தரமான ஒரு முற்றுபுள்ளியை வைப்போம் என உறுதி மொழியை இந்நாளில் எடுத்துக் கொள்வோம்.