

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தியாவில் பல இடங்களிலும் விநாயகர் சிலை தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மும்பையைச் சேர்ந்த ஒரு பகுதியில் மட்டும் மிகவும் விலை உயர்ந்த விநாயகர் சிலை ஒவ்வொரு வருடமும் தயாரிக்கப்படுகிறது. அத்துடன் அதற்கான காப்பீடும் பல கோடிகளில் எடுக்கப்படுகிறது.
66 கிலோ தங்கம், 335 கிலோ வெள்ளி நகைகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் மும்பையின் GSB விநாயகர் சிலை ரூபாய் 703 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் காணிக்கையாகக் கொடுத்த தங்கம், வெள்ளி நகைகளால் அலங்கரிக்கப்படும் இந்த மகா கணபதி, விநாயகர் சதுர்த்தி நாளில் காட்சியளிக்க உள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மும்பையில் ஜிஎஸ்பி சேவா மண்டல் சார்பாக வெள்ளி, தங்க நகைகள் மற்றும் விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்ய உள்ளதால் விநாயகர் சிலை 703 கோடி ரூபாய்க்கு காப்பீடு எடுத்துள்ளனர். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் இனமும் 40 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி விநாயகர் சதுர்த்தியை பிரம்மாண்டமாக நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி வருகின்ற 14ம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. மகாராஷ்டிராவின் மும்பையில் எப்பொழுதுமே விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில், மும்பையின் கிங்ஸ் சர்க்கிள் பகுதியில் ஜி எஸ் பி சேவா மண்டல் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடும். அதேபோல் இந்த வருடமும் அங்கு பிரம்மாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வருகின்ற 12ஆம் தேதி நடைபெறுகிறது. 72 வது ஆண்டாக நடைபெறப் போகும் இந்த விழாவைத் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கொண்டாடப்படும். அதாவது 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
பொதுமக்கள் காணிக்கையாக அளித்த 66 கிலோ தங்கம் மற்றும் 335 கிலோ வெள்ளி ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட உள்ளது. அதிக மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் விலைமதிப்புள்ள நவரத்தின கற்கள் பயன்படுத்தப்படுவதால், அதற்கான பாதுகாப்பை கருத்தில் கொண்டு விநாயகர் சிலை 703.27 கோடி ரூபாய்க்கு காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூபாய் 474 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்ட நிலையில், இந்த வருடம் கிட்டத்தட்ட அது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது இந்த ஆண்டு காப்பீட்டுத் தொகை ரூ.703 கோடியே 27 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் விலைமதிப்பற்ற ரத்தினக் கற்களுக்கு இந்தக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விழாவுக்கு வரும் பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உயிருக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த விழாவில் பங்கேற்கும் தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்களுக்கும் சேர்த்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கு வரும் ஒவ்வொரு பக்தரின் பாதுகாப்பிற்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிப்பது தங்களின் கடமை என்று அந்த மண்டலின் செய்தித் தொடர்பாளர் அமித் பை கூறியுள்ளார்.
அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கான தனிநபர் விபத்து காப்பீடு, விழா பந்தல் மற்றும் பாதிப்புகளுக்கான காப்பீடு இதில் அடங்குகிறது. விழாவிற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதால் இந்த காப்பீடு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வருகிற 12-ஆம் தேதி இரவு 8 மணிக்கு 'விராட் தர்ஷன்' என்ற நிகழ்ச்சியின் மூலம் பக்தர்களுக்கு முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட உள்ளது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இம்முறை காகிதப் பயன்பாட்டைக் குறைத்து, காகித ரசீதுகளுக்கு பதிலாக டிஜிட்டல் முறையில் ரசீதுகள் வழங்கப்பட உள்ளது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.