

சர்க்கரை நோயாளிகள் சக்கரையின் அளவை கட்டுப்படுத்த பல்வேறு உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் மருத்துவரின் பரிந்துரைப்படி, அவ்வப்போது உடலில் ரத்த சர்க்கரையின் அளவை பரிசோதிப்பர். இதனால் அவர்களுக்கு கணிசமான தொகை செலவாகும். இந்நிலையில் சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும் விதமாக மிகக் குறைந்த செலவில் ரத்த சக்கரையை அளவிடும் அதிநவீன கருவியை கண்டுபிடித்துள்ளனர் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள்.
சென்னை ஐஐடி பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக அவ்வப்போது பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து, மகத்தான கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறைந்த செலவில் பல்வேறு கருவிகளைத் தயாரிப்பதே சென்னை ஐஐடி-யின் முக்கிய குறிக்கோளாகும். அவ்வகையில் தற்போது சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும் விதமாக புதிய கண்டுபிடிப்பை அறிமுகம் செய்துள்ளது சென்னை ஐஐடி.
இந்தியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 10.1 கோடி பேர், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கையில், அவர்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை செலவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நோயாளிகளின் பரிசோதனை செலவுகளை குறைக்க சென்னை ஐஐடி ஒரு புதிய சாதனத்தை கண்டுபிடித்துள்ளது.
சென்னை ஐஐடி-யில் உள்ள மின்னணு பொருட்கள் மற்றும் மெல்லியப்பட ஆய்வகத்தில், சுவாமிநாதன் பரசுராமன் அவர்களின் தலைமையின் கீழ் ஆராய்ச்சியாளர்கள் ரத்த சர்க்கரையை கண்டறியும் சாதனத்தை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த சாதனத்திற்கு காப்புரிமையையும் சென்னை ஐஐடி பெற்றுள்ளது.
இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கண்டறியப் பயன்படுத்தப்படும் ரத்த கண்காணிப்பு கருவியானது, ஒருசில வரைமுறைகளுடன் அதிக செலவு கொண்டதாக இருக்கிறது. இது ஏழை மற்றும் எளிய மக்களுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும். அதோடு, இந்தக் கருவிகளின் மூலம் எடுக்கப்படும் மாதிரிகளில் உள்ள சர்க்கரை அளவைத் தெரிந்து கொள்ள அதிநவீன சாதனங்களும், திரைகளும் தேவைப்படுகின்றன.
இந்நிலையில் மிக குறைந்த செலவில் சென்னை ஐஐடி இரத்த சர்க்கரையை கண்டறியும் கருவியை கண்டுபிடித்துள்ளது. மேலும் இந்த சாதனம் துல்லியமான அளவீடுகளைக் கொடுப்பதால் அதிக நம்பகத்தன்மை கொண்டதாகவும் உள்ளது.
ஒருமுறை ரத்த மாதிரியை எடுத்த பிறகும் கூட, இந்த சாதனத்தை மீண்டும் பயன்படுத்த முடியும். குறைந்த சக்தி கொண்ட திரைகளின் மூலம் சர்க்கரை அளவை பார்த்துக் கொள்ளலாம். மேலும் இதில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நுண்ணிய ஊசிக்காண தொலை உணர்வு அமைப்பும் உள்ளது.
உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே இந்த சாதனம் தயாரிக்கப்பட்டு இருப்பதால், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் மருத்துவ தொழில்நுட்ப சாதனங்களைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.