டெல்லியில் உள்ள தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விலங்கு நல ஆர்வலராகவும் அறியப்படும் நடிகை சதா, இந்த உத்தரவைக் கண்டித்து கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் தெருநாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்ததையடுத்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கைக் கையில் எடுத்தது. தெருக்களில் நாய் கடிக்கு ஆளாகி குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உயிரிழப்பது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் பிடித்து, கருத்தடை செய்து, காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
இந்த உத்தரவு குறித்து நடிகை சதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், “3 லட்சம் உயிர்களின் நிலைமை என்ன? இதற்கு நாடே வெட்கப்பட வேண்டும்!” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். 8 வாரங்களில் அனைத்து நாய்களுக்கும் கருத்தடை மற்றும் தடுப்பூசி போடுவது சாத்தியமற்றது என்றும், அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததால் அப்பாவி நாய்கள் தண்டிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தன்னைப் போன்ற விலங்கு நல ஆர்வலர்கள் சொந்தப் பணத்தைச் செலவு செய்து நாய்களுக்கு உணவு அளித்து, சிகிச்சை அளித்து வருவதாகவும், அரசு தரப்பில் எந்த உதவியும் கிடைப்பதில்லை என்றும் சதா குறிப்பிட்டார். மேலும், வளர்ப்பு நாய்களை காசு கொடுத்து வாங்குபவர்களையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். ஒவ்வொரு முறை வளர்ப்பு நாயை வாங்கும்போதும், ஒரு தெருநாயின் வாழ்வதற்கான உரிமை பறிக்கப்படுகிறது என்றும், இது போன்ற செயல்களால் தான் பல நாய்கள் தெருக்களில் பரிதாபமாக இறக்க நேரிடுகிறது என்றும் சதா கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் நடிகை சதா இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார். “தீர்ப்பு வெளியாகிவிட்டது. அமைதியாகப் போராட்டம் நடத்தியவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நாய்களைக் காப்பாற்ற இனி என்னால் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை,” என்று வருத்தத்துடன் கூறினார். “அவை அனுபவிக்கப் போகும் வேதனையை என்னால் கற்பனை மட்டுமே செய்ய முடிகிறது.
என் தலை வெட்கத்தில் குனிகிறது. என் இதயம் நொறுங்கிவிட்டது. இந்தியா போன்ற ஒரு நாட்டில் இத்தகைய ஒரு உயிரினப் படுகொலையை நான் காண்பேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. இருமுறை யோசிக்காமல் முடிவெடுக்கும் அவர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன். தயவுசெய்து இந்த உத்தரவை திரும்பப் பெறுங்கள்,” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சதாவின் இந்த உணர்ச்சிப்பூர்வமான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மறு விசாரணை கோரப்படும் என விலங்கு நல ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.