
குருதி அல்லது இரத்தம் என்பது, உடல் உயிரணுக்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் சிறப்பான இயல்புகளைக் கொண்ட ஓர் உடல் திரவம் ஆகும். இது உடலுக்குத் தொடர்ந்து தேவைப்படும், இன்றியமையாத செந்நிற நீர்மப் பொருள். குருதியானது மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் தேவையான ஆக்சிஜன், ஊட்டச் சத்துக்கள் போன்றவற்றை உடல் கலங்களுக்கு எடுத்துச் செல்வதோடு அல்லாமல், அங்கே பெறப்படும் காபனீரொட்சைட்டு, லாக்டிக் அமிலம் போன்ற கழிவுகளை, கலங்களிலிருந்து அகற்றி எடுத்துச் செல்வதிலும் பங்கு கொள்ளும். குருதி ஓட்டத்தின் துணை இல்லாமல் உடலின் எப்பகுதியும் இயங்க முடியாது. குருதி ஓட்டம் நின்றால் உடல் இயங்குவது நின்று போய்விடும்.
குருதி என்பது சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், குருதிச் சிறுதட்டுக்கள் கொண்ட நீர்மப்பொருள். குருதியில் உள்ள திண்மப்பொருள்களின் அளவு 40% எனவும், நீர்மப்பொருள் 60% எனவும் கண்டுள்ளனர். திண்மப்பொருள்களில் சிவப்பணுக்கள் - 96%. வெள்ளை அணுக்கள் - 3%, குருதிச் சிறுதட்டுக்கள் - 1%.
மனிதரின் உடலில் சுமார் 4-5 லிட்டர் குருதி ஓடும். 72 கிலோ கிராம் எடை உள்ள ஒருவரின் உடலில் சுமார் 4.5 லிட்டரும், 36 கி.கிராம் எடை உள்ள ஒரு சிறுவனின் உடலில் சுமார் சரிபாதி அளவு குருதியும், 4 கிலோ கிராம் உடைய ஒரு குழந்தையின் உடலில் சுமார் 300 மில்லி லிட்டரும் (0.3 லிட்டர் மட்டுமே) குருதி ஓடும். எனவே சிறு குழந்தைக்கு அடிபட்டால் ஏற்படும் குருதிப்பெருக்கினால் குருதியிழப்பு ஏற்படும் போது, அது பெரிதும் தீங்கிழைக்க வல்லது.
குருதியில் A, B, AB மற்றும் O என நான்கு முக்கிய இரத்த வகைகள் அறியப்படுகின்றன. கூடுதலாக, ஒவ்வொரு இரத்த வகையிலும் ஒரு Rh காரணி அல்லது Rhesus காரணி உள்ளது. இது இரத்தச் சிவப்பணுக்களில் காணப்படும் ஒரு புரதமாகும். புரதம் இருந்தால் உங்கள் இரத்தம் RhD நேர்மறை (+) ஆகவும், புரதம் இல்லையென்றால் RhD எதிர்மறை (-) ஆகவும் இருக்கலாம்.
உங்களுக்கு A, B, AB அல்லது O வகை உள்ளதா என்பது உங்கள் இரத்த சிவப்பணுக்களில் உள்ள எதிரியாக்கிகளின் (Antigens) வகையைப் பொறுத்தது. எதிரியாக்கிகள் என்பது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வெளியிலிருந்து தாக்கக்கூடியவைகளுக்கு எதிராக, பிற பொருளெதிரிகளை (Antibodies) உருவாக்கத் தூண்டும் ஒன்றாகும். உதாரணமாக, A வகை இரத்தத்தை வகை செய்ய வேண்டியிருந்தால், உங்கள் இரத்த சிவப்பணுக்களில் A வகை ஆன்டிஜென்களும், உங்கள் பிளாஸ்மாவில் B எதிர்ப்பு பிற பொருளெதிரிகளும் உள்ளன.
பொதுவாக, O வகை இரத்தமுடையவர்கள், O, A, B மற்றும் AB வகை என்று அனைவருக்கும் தானம் செய்யலாம். A வகை இரத்தமுடையவர்கள் A மற்றும் AB வகையினருக்கு மட்டுமேத் தானம் செய்ய முடியும். B வகை இரத்தமுடையவர்கள் B வகையினருக்கு தானம் செய்ய முடியும். AB இரத்தமுடையவர்கள் AB வகையினருக்கு மட்டுமேத் தானம் செய்ய முடியும்.
Rh புரதம் உள்ளவர்களுக்கு மட்டுமே Rh+ பாசிட்டிவ் இரத்தத்தைத் தானம் செய்ய முடியும், மேலும் Rh- நெகட்டிவ் இரத்தத்தை நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் என்று இருவருக்கும் தானம் செய்ய முடியும். இதன் காரணமாக, O வகை இரத்தமுடையவர்களை "உலகளாவிய நன்கொடையாளர்" என்று அழைக்கிறார்கள்.
அனைத்து சிவப்பு மற்றும் வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளையும் நீக்கினால் எஞ்சியிருப்பது பிளாஸ்மா ஆகும். உலகளாவிய பிளாஸ்மா நன்கொடையாளர் AB வகையினரே. மேலும், இது இரத்தத்தின் கலவையில் 55% ஆகும். உடல் நலமுடையவர்கள் எளிதில் இரத்த தானம் செய்யலாம். இது எந்தத் தீங்கும் செய்யாது, மேலும் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற உதவும். O வகை இரத்தம் யாருக்கும் பயன்படுத்தக்கூடியது என்பதால், மருத்துவமனைகளில் எப்போதும் பற்றாக்குறையாகவே இருக்கும். உலக மக்கள் தொகையில் சுமார் 42% பேர் O+ வகை இரத்தத்தைக் கொண்டுள்ளனர், ஆனால் 3% பேர் மட்டுமே O- நெகட்டிவ் வகையைக் கொண்டுள்ளனர்.
உலக மக்கள் தொகையில் O + வகை இரத்தமுடையவர்கள் - 42%, A + வகை இரத்தமுடையவர்கள் - 31%, B + வகை இரத்தமுடையவர்கள் - 15%, AB + வகை இரத்தமுடையவர்கள் - 5%, O - வகை இரத்தமுடையவர்கள் - 3%, A - வகை இரத்தமுடையவர்கள் -2.5%, B - வகை இரத்தமுடையவர்கள் - 1%, AB + வகை இரத்தமுடையவர்கள் - 0.5% என்று இருக்கின்றனர்.
சில நேரங்களில் ஒரு தாயின் இரத்தம் குழந்தையின் இரத்தத்துடன் பொருந்தாத போது பிரச்சினைகள் ஏற்படலாம். தாயின் Rh காரணி எதிர்மறையாக இருந்து, குழந்தை நேர்மறையாக இருக்கும் போது பிரச்சினைகள் எழுகின்றன. பொதுவாக, தாயின் இரத்தமும் குழந்தையின் இரத்தமும் கருவுற்றிருக்கும் காலத்தில் கலக்காது, ஆனால், இது பிரசவத்தின் போது நிகழலாம். இதன் பொருள் தாயின் இரத்த வகைக்கு எதிராக பொருளெதிரிகள் (Antibodies) உருவாகலாம். மேலும், இது தாயினுடைய அடுத்தக் கருவுறுதலைப் பாதிக்கலாம்.
உங்கள் இரத்த வகையை அறிந்து கொள்வது உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பத்திற்கும், உங்கள் சமூகத்திற்கும் முக்கியம். உங்களிடம் அரிதான இரத்த வகை இருந்தால் அல்லது உலகளாவிய தானம் செய்பவராக இருந்தால், தானம் செய்வதைக் கருத்தில் கொள்ளுங்கள். ஒரு குடும்ப உறுப்பினருக்கு இரத்த மாற்றம் தேவைப்பட்டால், உங்கள் இரத்த வகைகள் பொருந்தினால், நீங்கள் இரத்த தானம் செய்வதன் மூலம் அவர்களின் உயிரைக் காப்பாற்றலாம்.