இனி அரசு மருத்துவமனைகளுக்கு நேரடியாக நன்கொடை வழங்கலாம்.100 ரூபாய் கொடுத்தாலும் 100% வெளிப்படைத்தன்மை

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ்source:hindu
Updated on

மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவைகளும் உதவிகளும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட, தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் "நலம் TN" (Nalam TN) இணையதள திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக துவங்கியது.

தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஒருங்கிணைந்த டிஜிட்டல் சுகாதாரத் தளம், பொதுமக்கள் அரசு சுகாதார சேவைகளை ஒரே இணையப்பக்கத்தின் மூலம் எளிதாகப் பெறவும், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கு நன்கொடைகளை வழங்கவும் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

புறநோயாளிகள் (OP) முன்பதிவுகளை எளிதாக்கும் வகையில், நலம் AI (NalamAI) எனும் வாட்ஸ்அப் சாட்போட் சேவை இதில் இணைக்கப்பட்டுள்ளது குறித்து பல கருத்துக்கள் வலம் வருகிறது. இணையதள வசதி அறியாத வயதானவர்களுக்கு இம்முறை பயனளிக்காது எனும் கருத்து இருப்பினும் இந்த முறைக்கு மக்களிடம் வரவேற்பும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை மாநிலக் கல்லூரி கலைஞர் அரங்கில் நடைபெற்ற "நலம் TN" இணையதள துவக்க விழாவில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் "உங்கள் வீட்டில் ஒரு திருமணமோ அல்லது பிறந்தநாள் விழாவோ எதுவாக இருந்தாலும் சிறு பங்களிப்பை அது 100 ரூபாயாக இருந்தாலும் சரி லட்ச ரூபாயாக இருந்தாலும் சரி அரசு மருத்துவமனைகளில் மேம்பாட்டிற்காக வழங்குங்கள்.எந்த மருத்துவமனைக்கு உங்கள் நன்கொடை செல்ல வேண்டும் என்பதையும் நீங்களே தேர்ந்தெடுக்க முடியும். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 100% முறையான வெளிப்படைத் தன்மை இருக்கும்" என்று கூறியிருப்பது தற்போது மக்கள் கவனத்தை கவர்ந்துள்ளது.

பணம் இருக்கும் கொடை மனம் கொண்டவர்கள் தங்கள் பிறந்த நாள் போன்ற சிறப்பு தினங்களில் தங்கள் பகுதியில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லங்கள் சென்று நிதியுதவி அளிப்பது வழக்கம். தற்போது இது போன்ற மருத்துவமனைகள் மேம்பாட்டுக்காக நன்கொடை அளிக்குமாறு மக்களிடம் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே சுகாதாரப் பராமரிப்பின் அதிக செலவானது, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஒரு பெரும் சவாலாக விளங்குகிறது. குறிப்பாக, சிகிச்சைக்கு மருத்துவமனையில் தங்குதல், அறுவை சிகிச்சை, அல்லது விலையுயர்ந்த மருந்துகள் அல்லது மருத்துவ முறைகள் தேவைப்படும்போது இது மேலும் கவலையை தருகிறது.

இந்த தருணத்தில் அவர்களது கவலைகளை போக்கி அவர்களின் நலம் காக்கும் பொருட்டு தமிழக அரசு, அரசு மருத்துவமனைகளின் வளர்ச்சியில் பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் சமூக சேவை அமைப்புகள் பங்குபெறுவதற்காக அரசு மருத்துவமனைகளுக்கு தன்னார்வ நன்கொடைகளைப் பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்களை அரசாணை மூலம் அறிவித்துள்ளது.

இதன் நோக்கம், அரசின் நிதியை மட்டுமே சாராமல், சமூகப் பங்களிப்பின் மூலம் மருத்துவ சேவைகளை மேலும் மேம்படுத்த உதவுவது என்பது கவனிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் திட்டத்துக்கு

பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், (Corporate Social Responsibility )(CSR) நிதி, அறக்கட்டளைகள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பை ஒருங்கிணைக்கவும் நன்கொடைகளை பெறும் தளமாகவே நலம்TN அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நலம் AI Whatsapp Chatbot
Nalam AI

இதன் மூலம் பெறப்படும் நிதியானது பின்வரும் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும்:

  • உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்: ICU (தீவிர சிகிச்சை பிரிவு), நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் ஆய்வகங்களை புதுப்பித்தல்.

  • நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்குதல்: எம்.ஆர்.ஐ (MRI), சி.டி ஸ்கேன் (CT Scan), வென்டிலேட்டர் (Ventilator) போன்ற உயிர்காக்கும் நவீன கருவிகளை பெறுதல்.

  • அடிப்படை வசதிகளை உயர்த்துதல்: நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கான படுக்கைகள், சக்கர நாற்காலிகள், சுத்தமான குடிநீர், கழிவறைகள் மற்றும் நவீன காத்திருப்பு அறைகளை அமைத்தல்.

  • சுற்றுப்புறத் தூய்மை: மருத்துவமனை கட்டடங்களை புனரமைத்தல் மற்றும் சுற்றுப்புறச் சுகாதாரத்தை பேணுதல்.

நன்கொடை வழங்குவது முழுக்க முழுக்க அவரவர் விருப்பம் என்பதும் எந்த அரசு மருத்துவமனைக்கு நன்கொடை வழங்க வேண்டும் என்பதை நன்கொடையாளரே தேர்வு செய்யலாம் என்பதும் சிறப்பு. மேலும் பணம் மட்டுமின்றி, மருத்துவ உபகரணங்கள் அல்லது கட்டமைப்பு வசதிகளையும் வழங்கலாம்..

நன்கொடைகள் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அனுமதியுடன் பெறப்பட்டு அரசு நிர்ணயித்த நடைமுறைகளின்படி கணக்கில் பதிவு செய்யப்படும். நன்கொடை ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அரசு விதிமுறைகளின்படி அதிகாரப்பூர்வ ரசீது வழங்கப்படும்.

மேலும் நன்கொடை பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து வெளிப்படையான பதிவுகள் மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படுத்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் அரசு மருத்துவமனைக்கு நிதி அல்லது உதவிகளை நேரில் சென்று வழங்க விரும்பினால் நீங்கள் எந்த அரசு மருத்துவமனைக்கு உதவ நினைக்கிறீர்களோ, அந்த மருத்துவமனையின் டீன் (Dean) அல்லது மருத்துவ கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து நிதியுதவி அல்லது தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கலாம்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு தானாகவே 80G வரிச் சலுகை கிடையாது என்றும் 80G சலுகை பெற, அந்த நிதி பெறும் அமைப்பு வருமான வரிச் சட்டம், 1961-ன் 80G பிரிவின் கீழ் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, நன்கொடை வழங்குவதற்கு முன், அந்த மருத்துவமனை அல்லது நிதி பெறும் கணக்கிற்கு 80G அங்கீகாரம் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஏழை எளிய மக்களின் உயிர்காக்கும் உன்னதப் பணியில் நாம் வழங்கும் 100 ரூபாய் கூடப் பெரும் மதிப்பைத் தரும் என்பதில் ஐயமில்லை!

இதையும் படியுங்கள்:
வேலை விலகிய பின் பிஎஃப் பணத்தை முழுமையாக எடுப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ்
இதையும் படியுங்கள்:
நல்ல கொழுப்பு vs கெட்ட கொழுப்பு: இதயத்தை காக்கும் உணவுத் திட்டம்!
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ்
logo
Kalki Online
kalkionline.com