

தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்பதற்காகவும் மகளிர் உரிமை தொகை திட்டம், விடியல் பயணம் திட்டம், புதுமைப் பெண் திட்டம், பிங்க் ஆட்டோ போன்ற பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது.
அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் கீழ், பெண்கள் பெயரில் முதல் முறையாக ஒரு மனை அல்லது வீடு வாங்கினால் அரசாங்கமே 5 லட்சம் ரூபாய் வரைக்கும் மானியம் கொடுப்பார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும். வாங்க இதுகுறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
நன்னிலம் மகளிர் நில உடமைத்திட்டம் என்பது சொந்த நிலம் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயப் பெண்களுக்கு நிலம் வாங்க உதவும் தமிழ்நாடு அரசின் திட்டமாகும்.
நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் என்ற திட்டத்தின் மூலமாக, பெண்களின் பெயரில் நீங்கள் எந்த சொத்து வாங்குவதாக இருந்தாலும் தமிழக அரசு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை) மற்றும் பதிவுக்கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நிலம் வாங்குவதற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடன் வசதியும் செய்துக் கொடுக்கப்படுகிறது.
இது TAHDCO (Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation) மூலம் செயல்படுத்தப்படுகிறது. 2004-ல் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நோக்கம் பெண்களின் பெயரில் சொத்துரிமை அதிகப்படுத்த வேண்டும் மற்றும் அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்பதாகும்.
தகுதிகள் :
* இந்த திட்டத்திற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
* குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
* விண்ணப்பத்தாரர் 18 முதல் 55 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
* விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
* விண்ணப்பிக்கும் பெண்ணின் பெயரில் சொந்தமாக நிலம் எதுவும் இருக்கக்கூடாது.
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
* அதேசமயம் நீங்கள் விதவையாகவோ, அல்லது உங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்றால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
தேவையான ஆவணங்கள் :
சாதிச் சான்றிதழ்
ஆதார் கார்டு
பான் கார்டு
குடும்ப அட்டை
வருமான சான்றிதழ்
வங்கி கணக்கு விவரம்
தொலைபேசி எண்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
நிபந்தனைகள் :
* இந்த திட்டத்தின் கீழ் வாங்கும் நிலத்தினை பெண்கள் 10 ஆண்டுகளுக்கு மற்றவருக்கு விற்பனை செய்யக்கூடாது.
* நிலத்தை விண்ணப்பிக்கும் பெண்ணின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
அந்தந்த மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தாட்கோ மாவட்ட மேலாளரை அணுகி, இந்த திட்டத்திற்கான விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.
அல்லது ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். newscheme.tahdco.com என்ற இணையதள முகவரி சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.