சர்வதேச விண்வெளி நிலையத்தை கடலில் மூழ்கடிக்க நாசா திட்டம்! பேராபத்தில் பாயிண்ட் நெமோ?

2028-ல் தொடங்கும் ஆபத்தான 'தற்கொலை மூழ்கல்'; ஹைட்ராசின் நச்சு எரிபொருளால் கடல்வாழ் உயிரினங்கள் அழியும் அபாயம்!
The International Space Station
The International Space Station Image credit: NASA
ச. நாகராஜன்

மங்கையர் மலர், தினமணி, தினமணி சுடர், ஆனந்தவிகடன், குமுதம் பக்தி ஸ்பெஷல், மாலைமலர், தினபூமி, Hindu உள்ளிட்ட 46 இதழ்களில் 6000க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர். இதுவரை வெளியான புத்தகங்கள்; Pustaka - 139 புத்தகங்கள் (Paper back, Digital Printed books) Nilacharal - 61 புத்தகங்கள் (Digital books) (FROM LONDON) சென்னை விநாயகா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம் உள்ளிட்ட பதிப்பகங்களின் வெளியீடு 19 புத்தகங்கள் மொத்தம் 219 புத்தகங்கள்.

Updated on: 

பன்னாட்டு விண்வெளி நிலையத்தைக் கடலில் விழச் செய்யும் நாஸாவின்(NASA) திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பூமியின் மேலே தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கும் இந்த விண்வெளி நிலையத்தைப் பல்வேறு நிலைகளின் மூலம் செயலிழக்கச் செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.. முதலில் 2028ம் ஆண்டு பூமியின் இயற்கையான ஈர்ப்பு சக்தியின் மூலம் இதைக் கீழே இறங்க செய்யும். பிறகு 2029ம் ஆண்டு இதை கடலில் மூழ்கடிக்க செய்யும்.

ஆனால் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் இது பற்றிக் கவலை தெரிவித்துள்ளனர். வாஷிங்டனில் உள்ள ஓஷியன் ஃபவுண்டேஷன் என்னும் கடல்பாதுகாப்பு அமைப்பு உலகின் தட்பவெப்ப நிலையைச் சீராகப் பாதுகாக்கவும் கடலுக்கும் மனிதனுக்கு உள்ள உறவைச் சீராகப் பராமரிக்கவும் இயங்கி வருகிறது.இப்படி கடலில் விண்வெளி நிலையத்தை மூழ்கடிப்பது பல சிக்கல்களை ஏற்படுத்தும். இதை நாஸா கண்டுகொள்ளவில்லை என்கிறார் இந்த நிறுவனத்தின் தலைவரான மார்க் ஸ்பால்டிங். (Mark Spalding).இது பற்றிப் பல அமைப்புகளும் தெரிவிக்கும் கவலையை அமெரிக்க அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

இந்த விண்வெளி நிலயத்தை பாயிண்ட் நெமோ (Point NEMO) என்ற இடத்தில் அமுத்தி ஆழ்த்தி விடுவது என்பதே திட்டம் என்கிறது அரசு. பாயிண்ட் நெமோ என்பது தென் பசிபிக் கடலில் உள்ள ஒரு பகுதி. இது மனிதர்களால் அணுகப்படாத ஒரு பகுதியாகும்.ஆரம்பத்திலிருந்தே இந்த விண்வெளி நிலையம் ஏராளமான தொழில்நுட்பப் பிரச்சினைகளைச் சந்தித்து வந்திருக்கிறது. இதில் காற்றுக் கசிவுகள் (வெடிப்புகள்) ஏற்பட்டன; குளிர்சாதன அமைப்பில் (Cooling system) கசிவு ஏற்பட்டது; ஒருவிதமான விசித்திர நாற்றமும் வெளிப்பட ஆரம்பித்து அனைவரையும் வியப்படைய வைத்தது.

space junk)
space junk

பாயிண்ட் நெமோவின் சிறப்பு (Point Nemo Significance): இது வெறுமனே மனிதர்கள் இல்லாத பகுதி மட்டுமல்ல, கடலில் எந்த ஒரு நிலப்பரப்பிலிருந்தும் சுமார் 2,688 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மிக ஆழமான பகுதி. அதனால் தான் விண்வெளி அமைப்புகள் இதை "விண்கலங்களின் மயானம்" (Spacecraft Cemetery) என பயன்படுத்துகின்றன.

அதிவேகத்தில் இது பயணிப்பதால் விண்வெளியில் சுழன்று வரும் நூற்றுக்கணக்கான செயலற்ற விண்கலங்களின் பாகங்கள் மோதும் அபாயமும் இதற்கு உண்டு.

ஆகவே 2028ம் ஆண்டு வரை கூட இது விண்வெளியில் தாக்குப் பிடித்து இருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.கடலுக்குள் பாயும் இந்த ‘தற்கொலை முழுகல்’ பாதுகாப்பான ஒன்று தானா என்று மக்கள் தங்கள் சந்தேகத்தைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் நீரும், காற்றும் மாசுபடாதா என்பதே இவர்களின் கேள்வி.

சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் முக்கிய கவலையே விண்கலத்தில் மீதமிருக்கும் 'ஹைட்ராசின்' (Hydrazine) போன்ற ஆபத்தான நச்சு எரிபொருட்களும், கதிரியக்க பொருட்களும் கடலில் கலந்து கடல்வாழ் உயிரினங்களை பாதிக்கும் என்பது தான்.

பல ஆண்டுகளாகவே ரஷ்யா, பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து பல டன்கள் கழிவுப்பொருட்களைப் பசிபிக் கடலில் ‘ஸ்பேஸ்கிராப்ட் சிமெட்ரி’ (Spacecraft cemetery) என அழைக்கப்படும் விண்கலக் கல்லறையில் போட்டு வருகிறது. இதேபோல தென்பசிபிக் கடலிலும் விண்கலக் கழிவுகள் போடப்பட்டு வருகின்றன. இது ஒருபுறமிருக்க, ரஷ்யாவின் 'மிர்' (Mir) விண்வெளி நிலையம் மற்றும் சீனாவின் 'டியான்காங்–1' (Tiangong-1) புரோட்டோடைப் விண்கலம் ஆகியவை தங்கள் ஆயுளைக் கடல் நீரில்தான் முடித்துக் கொண்டன. முன்னதாக, அமெரிக்காவின் 'ஸ்கைலேப்' (Skylab) விண்வெளி நிலையம் 1979-ஆம் ஆண்டு கட்டுப்பாடின்றி பூமியில் விழுந்தது. இதன் சிதறிய பாகங்கள் ஆஸ்திரேலியாவின் தென்பகுதி கடற்கரையோரப் பகுதிகளில் விழுந்தன.

இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது, சமீப காலத்தில் கடலில் மூழ்கடிக்கப்படவுள்ள பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் 500 டன் கழிவை உலகம் தாங்குமா? தென்பசிபிக் கடல் பிராந்தியத்தில், யாருமே அணுகாத 'பாயிண்ட் நெமோ' என்று அழைக்கப்படும் பகுதியில் கட்டுப்பாடான செயல்திட்டத்தின் மூலமாக இந்த 500 டன் கழிவுகள் போடப்படும் என்பது உலகத்தைப் பயமுறுத்தும் செய்தியாகவே பார்க்கப்படுகிறது.

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Source Link : https://www.space.com/space-exploration/international-space-station/nasa-wants-to-dump-the-iss-in-the-sea-experts-say-the-plan-raises-serious-concerns-for-ocean-health?

இதையும் படியுங்கள்:
மாணவர்கள் ஷாக்.. இனி மதிய உணவில் முட்டைக்கு பதில் சோயா பன்னீர்..?
The International Space Station
logo
Kalki Online
kalkionline.com