
இந்தியாவில் பலரும் சமையலுக்கு எல்பிஜி கேஸ் சிலிண்டரைத் தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இயற்கை எரிவாயுவை குழாய்களின் மூலம் வீட்டிற்கே கொண்டு வரும் திட்டத்தை மத்திய அரசு மும்முரமாக செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் தமிழ்நாட்டிலும் சில இடங்களில் கொண்டு வரப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் அடுத்த 18 மாதங்களுக்குள் 20,000 வீடுகளுக்கு இயற்கை எரிவாயுவை (PNG) அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இதற்கான கட்டண விவரங்களும் தற்போது வெளியாகியுள்ளன.
THINK Gas நிறுவனம் சென்னையில் இதுவரை 5,500 வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்பைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் தற்போது GST மற்றும் OMR உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் 20,000 இணைப்புகளைக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது. திருப்போரூர், தையூர், சோழிங்கநல்லூர் மற்றும் தாழம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 60% இணைப்பு கொடுக்கப்பட உள்ளது.
இயற்கை எரிவாயு இணைப்புக்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தாலும், மக்கள் மத்தியில் ஆர்வம் குறைவாக இருப்பது தான் இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாமல் போவதற்கு முக்கிய காரணம். ஆன்லைன் உணவு விநியோகம் மற்றும் கேண்டீன்களை பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவதால், இயற்கை எரிவாயு இணைப்புக்கு முக்கியத்துவம் தர மறுக்கின்றனர்.
மேலும் குழாய் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையிடம் அனுமதி பெற தாமதமாவது போன்ற பல்வேறு நெருக்கடிகளை எரிவாயு நிறுவனங்கள் எதிர்கொள்கின்றன.
இதுகுறித்து THINKS Gas எரிவாயு நிறுவனத்தின் காஞ்சிபுரம் மண்டலத் தலைவர் எம்.திருக்குமரன் கூறுகையில், “சென்னையின் முக்கிய சாலைளில் வால்வுகள் மற்றும் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதால், மிக எளிதாக வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பைக் கொடுக்க முடியும். மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 28 மீட்டர் வரை குழாய் இணைப்பை ஏற்படுத்தி தர முடியும்.
எங்களின் தொழில்நுட்ப குழு அடுப்புடன் குழாய்களை இணைத்து, 90nm (LPG) பர்னரை வெறும் 15 நிமிடத்திற்குள் 110nm (PNG) பர்னராக மாற்றி விடுவார்கள். பதிவு முதல் குழாய்களை நிறுவுவது வரை தொழில்நுட்ப குழுவிற்கு ஒருநாள் வரை ஆகும். இதற்கான மொத்த செலவு ரூ.7,000 தான். மேலும் இதில் பல வகையான கட்டண விருப்பங்கள் உள்ளமையால், பொதுமக்கள் அவர்களுக்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளலாம். தற்போதைய LPG விலையைக் காட்டிலும் PNG விலை 4% முதல் 5% வரை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது” என அவர் தெரிவித்துள்ளார்.
இயற்கை எரிவாயு குழாய் இணைப்புக்கும் மானியம் அளிக்கப்பட்டால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எரிவாயு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு இடத்திலும் இயற்கை எரிவாயு குழாய் இணைப்பை ஏற்படுத்த 45 நாட்கள் வரை தான் காலக்கெடு உள்ளது. ஆகையால் ஒற்றை சாளர அனுமதியை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.