

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ (ISRO)ராக்கெட்கள், செயற்கை கோள்களைத் தயாரித்து விண்ணிற்கு அனுப்பி வருகிறது. அதோடு விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் ககன்யான் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் இத்திட்டத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக இஸ்ரோவில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து தங்களது வேலையை ராஜினாமா செய்து வருகின்றனர்.
தற்போது இஸ்ரோவில் 14,600க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களில் மட்டுமே ககன்யான் மற்றும் சந்திரயான் போன்ற முக்கிய திட்டங்களில் பங்காற்றிய 120-க்கும் மேற்பட்ட மூத்த விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் திடீரென விருப்ப ஓய்வு மற்றும் ராஜினாமா செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இஸ்ரோவில் 2012 முதல் 2024 வரை சுமார் 700 ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இஸ்ரோ ராஜினாமா செய்வதற்கான விதிகளை கடுமையாக்கியுள்ளது. குறிப்பாக ராஜினாமா செய்தவர்கள் அனைவரும் ககன்யான், சந்திராயன் உள்ளிட்ட திட்டங்களில் முக்கியமான பங்காற்றியவர்கள் என்பதுதான் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. இதனால், மத்திய விண்வெளித்துறை, இஸ்ரோவின் முக்கிய திட்டங்கள் ககன்யான் மற்றும் சந்திரயான்-3 போன்றவற்றின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதையடுத்து, முக்கியமான துறைகளில் உள்ளவர்களின் ராஜினாமா மற்றும் விருப்ப ஓய்வு கோரிக்கைகளுக்கு (VRS) மத்திய விண்வெளித்துறை அதிரடியான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குறிப்பாக ககன்யான் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் பணியாற்றும் 'குரூப் ஏ' விஞ்ஞானிகளின் விருப்ப ஓய்வு மற்றும் ராஜினாமா கோரிக்கைகளை உடனே ஏற்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2020 நவம்பரில் கொண்டுவரப்பட்ட விதியின்படி, விஞ்ஞானிகளின் ராஜினாமா கடிதங்களை ஏற்கும் அதிகாரம் இஸ்ரோவின் அந்தந்த மையங்களின் இயக்குநர்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது, அந்த அதிகாரம் பறிக்கப்பட்டு, அனைத்து ராஜினாமா விண்ணப்பங்களும் விண்வெளித் துறையின் (DoS) இறுதி முடிவுக்கே அனுப்பப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கியமாக சம்பந்தப்பட்ட திட்டங்கள் முடியும் வரை இயக்குநர்கள் இவர்களின் ராஜினாமாவை ஏற்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் மிகப்பெரிய மையமான விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் மட்டும் சுமார் 20 பேர் விலகியுள்ளனர். இதில் விண்வெளித் துறைக்கான 'ஸ்பாடெக்ஸ்' திட்ட இயக்குநர் மற்றும் சந்திரயான்3 திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த இளம் விஞ்ஞானிகள் அடங்குவர்.
பெங்களூரு யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் இங்கிருந்து சுமார் 80 விஞ்ஞானிகள் வரை ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (VSSC) இருந்தும் பலர் வெளியேறியுள்ளனர். இதில் LVM-3 ராக்கெட் திட்ட இயக்குநர் விக்டர் ஜோசப், சந்திரயான்-3 திட்ட உருவகப்படுத்துதல் பிரிவு மேலாளர் ஆதித்யா ரல்லபள்ளி உள்ளிட்ட முக்கிய நபர்களும் அடங்குவர்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் மற்றும் பல்வேறு மேம்பட்ட செயற்கைக்கோள் ஏவுதல்கள் போன்ற இந்தியாவின் லட்சியத் திட்டங்கள் அடுத்தடுத்து செயல்படுத்தப்பட உள்ள நிலையில், முக்கிய விஞ்ஞானிகள் அடுத்தடுத்து வெளியேறுவது இந்த லட்சியக் கனவைத் தகர்த்துவிடும் என்பதால் மத்திய அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.
சமீபத்தில் இந்தியாவில் விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்கள் நுழைய மத்திய அரசு அனுமதி கொடுத்தது. எனவே அது சார்ந்த ஸ்டார்ட் ஆப் நிறுவனங்கள் அதிக அளவில் தொடங்கப்பட்டு வருகிறது.
எனவே விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதால், அனுபவம் வாய்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனியார் நிறுவனங்கள் அதிக ஊதியம் மற்றும் கவர்ச்சிகரமான பொறுப்புகளை வழங்கி காத்திருக்கின்றன. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் இயக்குநர்கள் இஸ்ரோவில் இருந்து விலகி தனியார் நிறுவனங்களில் சேர அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இதற்கிடையே, தற்போது இஸ்ரோவில் இருந்து ராஜினாமா அல்லது விருப்ப ஓய்வு செய்து விட்டு வெளியேறும் விஞ்ஞானிகளில் பலர், தனியார் நிறுவனங்களில் இணைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரோவில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ராஜினாமா செய்வது அதிகரித்து வருவதற்கு, தனியார் நிறுவனங்கள் தலைமை பொறுப்புக்கு அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகளை தேடி வருவதும், அவர்களுக்கு அதிக ஊதியம் மற்றும் கவர்ச்சிகரமான பொறுப்புகளை வழங்க தயாராக இருப்பதும், காரணமாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சோமநாத் 'அக்னிகுல் காஸ்மோஸ்' (Agnikul Cosmos) என்ற விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் பார்வையாளராக (Observer) இணைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2025 ஜனவரியில் இஸ்ரோ தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பெங்களூருவில் உள்ள சாணக்கியா பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பொறுப்பேற்ற சோமநாத் தற்போது 'அக்னிகுல் காஸ்மோஸ்' இணைந்துள்ளார்.