

டெல்லி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு மருத்துவச் சேர்க்கை தொடர்பான வழக்கை விசாரித்துவிட்டுக் கலையும்போது, 19 வயது இளைஞரின் குரல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதனை தொடர்ந்து அந்த 19 வயது இளைஞன் ‘10 நிமிடங்கள் கொடுங்கள் சார்’ என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் நடத்திய அவன் நடத்திய வாதம் இப்போது நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்ததுடன் அந்த 10 நிமிடம் அவரது வாழ்க்கையை மாற்றியது. யார் அந்த இளைஞர், உச்சநீதிமன்றத்தில் அவர் அப்படி என்ன வாதத்தை வைத்தார் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம் வாங்க...
மத்திய பிரதேசம் ஜெபல்பூரை சேர்ந்த 19 வயது இளைஞர் அதர்வா சதுர்வேதி. மருத்துவ படிப்பு மீது ஆர்வம் கொண்ட அதர்வாவிற்கு தனியார் மருத்துவமனை கல்லூரியில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான EWS கோட்டாவின் கீழ் MBBS இடத்தை பெற முடியவில்லை.
தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டை நீட்டிக்கும் கொள்கையை அரசு அமல்படுத்தாதது அதற்கு காரணமாக அமைந்தது. ஒருமுறை இல்லை.. இரண்டு முறை இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வில் அதர்வா சதுர்வேதி தேர்ச்சி பெற்றார். இரண்டாவது முறை 530 / 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ஆனால் மத்தியப் பிரதேச அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் EWS இடஒதுக்கீட்டை அமல்படுத்தாததால் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இதற்கு எதிராக ஜபல்பூர் உயர்நீதிமன்றத்தில் அதர்வா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கிலும் கூட அதர்வா வழக்கறிஞர் துணை இல்லாமல் நீதிமன்றத்தில் சொந்தமாக தானே வாதடினார். அங்கு அதர்வாவுக்கு சாதகமாகத் தீர்ப்பு வரவில்லை என்றாலும், மாணவன் அதர்வாவின் சாமர்த்திய பேச்சை கவனத்த நீதிபதி ‘நீங்கள் ஒரு வழக்கறிஞராக வேண்டுமே தவிர, மருத்துவராக அல்ல. தவறான துறையில் இருக்கிறீர்கள்’ என்று கூறியுள்ளார். ஆனால் பாராட்டு கிடைத்தாலும் அதர்வாவிற்கு அங்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காததால், மனம் தளராமல் அதர்வா உச்சநீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. ஆன்லைன் வாயிலாக அதர்வா தானே ஆஜராகி தனது வாதங்களை முன்வைத்தார்.
மாணவனின் வாதத்தைக் ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தனர்.
இந்திய அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ், உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, சதுர்வேதிக்கு மருத்துவ சீட் வழங்க உத்தரவிட்டது. ஒரு வார காலத்திற்குள் அதர்வாவிற்கு 2025-26 கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் தற்காலிக சேர்க்கை வழங்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் மாநில அரசிற்கும் உத்தரவிடப்பட்டது.
தனியார் கல்லூரிகள் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றவில்லை என்றால், அவற்றைப் பூட்டிவிடுங்கள் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் காட்டமாக தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் மாணவன் அதர்வாவை வியந்து நீதிபதி பாராட்டினர்.
அதர்வா சதுர்வேதி பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகள் இரண்டிலும் தேர்ச்சி பெற்றாலும், மருத்துவத்தையே அவர் தேர்ந்தெடுத்தார்.
அதர்வாவின் தந்தை மனோஜ் சதுர்வேதி ஒரு வழக்கறிஞர்தான். கொரோனா காலத்தில் நீதிமன்றங்கள் வீடியோ கான்பரன்சிங் முறையில் இயங்கியபோது, அவரது தந்தை வீட்டில் இருந்தபடியே வாதிட்டார். அதைப் பார்த்தே அதர்வா சதுர்வேதி நீதிமன்றத்தில் எப்படி வாதிட வேண்டும் என்பதை கற்றுள்ளார்.
பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவன் தனி ஒரு ஆளாக உச்சநீதிமன்றத்தில் வாதாடி வென்ற சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இளைய தலைமுறையில் ஆன்லைனிலேயே மூழ்கி கிடக்கும் நிலையில் இந்த மாணவனின் செயலையும், தைரியத்தையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.