
நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் தற்போது அரட்டை செயலி மிகவும் பிரபலமாகி வருகிறது. வாட்ஸ்அப்புக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட அரட்டை செயலி, ஒரு இந்திய செயலி என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் தமிழ்நாட்டைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சோஹோ (ZOHO) நிறுவனத்தின் செயலி தான் அரட்டை. ஏற்கனவே வெளிநாட்டு பொருட்களை தவிர்த்து விட்டு, இந்தியத் தயாரிப்புகளை பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அவ்வகையில் இந்திய தயாரிப்பாளர் அரட்டை செயலியை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாட்ஸ்அப் போனால் என்ன, அரட்டை செயலியை பயன்படுத்தலாமே என்று டெல்லியில் உள்ள ஒரு பெண் மருத்துவருக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை செய்துள்ளது. இந்தியத் தயாரிப்பான அரட்டை செயலியை பயன்படுத்தலாமே என்ற உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை, தற்போது பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
தலைநகர் டெல்லியைச் சேர்ந்த பெண் மருத்துவர் ராமன் குந்த்ரா, சமீபத்தில் சட்டப்பிரிவு 32-ன் கீழ் ரிட் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதன்படி தனது வாட்ஸ்அப் கணக்கு முடுக்கப்பட்டு விட்டதாகவும், அதனை மீட்டு தர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
பெண் மருத்துவர் தாக்கல் செய்த வழக்கானது சந்தீப் மேத்தா, விக்ரம் நாத் மற்றும் சஞ்சீவ் கண்ணா உள்ளிட்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், வாட்ஸ்அப் செயலி முடக்கம் மற்றும் பயன்பாடு உள்ளிட்டவை அரசியலமைப்புச் சட்ட உரிமையின் கீழ் வராது எனத் தெரிவித்தனர்.
மேலும் வாட்ஸ்அப் உள்ளிட்ட தனியார் நிறுவன சமூக வலைதள செயலிகளை பயன்படுத்தும் போது, அந்நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட வேண்டியது அவசியமாகும். ஆகையால் தேர்வு ஏதும் பிறப்பிக்க இயலாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
விசாரணை நீதிபதியான சந்தீப் மேத்தா, வாட்ஸ்அப் போனால் என்ன, அரட்டை செயலியைப் பயன்படுத்தலாமே என பெண் மருத்துவருக்கு அறிவுரை செய்தார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் அரட்டை செயலியை பரிந்துரை செய்தது, பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதோடு அரட்டை செயலிக்கு இது ஒரு நேர்மறையான கருத்தைப் பிரதிபலிப்பதால், இச்செயலியை பயன்படுத்தும் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களாகும்.
சமீப காலமாக இந்திய பொருட்களுக்கு 50% வரியை அமெரிக்கா விதித்திருப்பதால், இந்தியப் பொருட்களை பயன்படுத்துமாறு பிரதமர் மோடி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் தான் அரட்டை செயலைக்கு பொதுமக்கள் முக்கியத்துவம் தரத் தொடங்கினர். கடந்த ஒரு மாதத்தில் அரட்டை செயலியை பல லட்சக்கணக்கான இந்தியர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.