சொத்து மீது நமக்கு இருக்கும் உரிமையை நிலைநாட்டிக்கொள்ள ஆவணங்களே அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றன. ஒரு சொத்து யாருக்கு உரிமை என்பதை அரசாங்கத்தின் மூலமாக உறுதிப்படுத்திக்கொள்ளும் ஆவணமே பத்திரம் ஆகும். ஆனால், ஒரு குறிப்பிட்ட நிலத்தைத் தற்போதைய உரிமையாளருக்கு முன்பு, யாரிடமிருந்தது யார் வாங்கினார்கள் என்பதை முழுமையாக அறிந்து கொள்ளக்கூடிய ஆவணம் தாய்ப்பத்திரம். இது, மூலப்பத்திரம் என்றும் அழைக்கப்படும்.
அந்த வகையில், வீடு அல்லது நிலம் வாங்கும்போது மிகவும் முக்கியமான ஆவணமாக கருதப்படும் தாய் பத்திரம் என்பது அந்த சொத்தின் முதல் உரிமையாளர் யார், அவருக்கு அந்த சொத்து எப்படி வந்தது என்பதைக் காட்டும் அடிப்படை ஆவணம்.
நாம் இப்போது ஒரு சொத்து வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நாம் இன்னொருத்தருக்கு அந்தச் சொத்தை விற்றால், நாம் முதலில் வாங்கிய பத்திரம் தற்போது தாய் பத்திரம் என்றாகிவிடும்.
இந்த தாய் பத்திரம் மூலம்தான் சொத்தை உங்களுக்கு விற்பனை செய்தவருக்கு, அந்த சொத்து எப்படி வந்தது என்பதை உறுதி செய்ய முடியும். தாய்பத்திரம் தொலைந்துவிட்டது என்று யாரேனும் சொன்னால், அந்த சொத்தில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
அதனால் நீங்கள் வாங்கும் சொத்தை விற்பனை செய்ய நினைத்தால் தாய் பத்திரம் அவசியம் தேவைப்படும். வங்கிக்கடன் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கும் தாய் பத்திரத்தின் தேவையும் இருக்கும். இருந்தாலும் நீங்கள் வாங்கும் சொத்துக்கு தாய் பத்திரம், அத்தனை எளிதில் அப்படியே கிடைத்துவிடும் என்று சொல்லமுடியாது.
பட்டா உள்ளிட்ட ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும்போது அந்த மனை, யாரிடம் இருந்து எப்படி உங்களுக்கு வந்தது என்பதை நிரூபிக்க வேண்டி இருக்கும்பட்சத்தில், நகல் தாய் பத்திரம் உதவிகரமாக இருக்கும்.
இது பல ஆண்டுகள் பழமையானதாக இருப்பதால் காணாமல் போகும் வாய்ப்பும் அதிகம். ஒருவேளை தாய் பத்திரம் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும், ஆன்லைன் & ஆஃப்லைன் விண்ணப்பிப்பது எப்படி? என்று பார்க்கலாம்.
தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள STAR 3.0 போன்ற திட்டங்களால், தாய் பத்திரம் முதல் பத்திரப்பதிவு வரை பல சேவைகள் ஆன்லைனில் எளிதாக செய்ய முடியும். அந்த வகையில் தமிழகத்தில் பெரும்பாலான அரசு துறைகள் தற்போது ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் நேரடியாக அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் பல சேவைகளை வீட்டிலிருந்தே பெற முடிகிறது. பத்திரப்பதிவு துறையில் தற்போது வந்ததுள்ள ஆன்லைன் வசதியின் மூலம், பத்திர அலுவலகம் செல்லாமலேயே அனைத்து சேவையையும் பெற முடியும்.
தாய் பத்திரம் தொலைந்துவிட்டால் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
* https://tnreginet.gov.in என்ற தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான தளத்திற்கு சென்று Certified Copy / View Document என்பதை கிளிக் செய்து, மாவட்டம், SRO, பத்திர எண், ஆண்டு ஆகியவை உள்ளிட வேண்டும்.
* Search செய்து Apply for Certified Copy தேர்வு செய்து, இறுதியாக கட்டணம் செலுத்தி PDF நகலை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
* ஆன்லைன் மூலம் தாய் பத்திரம் பெறுவதற்கு பதிவு செய்யப்பட்ட பத்திர எண், பதிவு செய்யப்பட்ட ஆண்டு, பதிவு அலுவலகம் (SRO) போன்றவை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
* ஆனால் அதேசமயம் மிகவும் பழமையான 100 அல்லது 200 வருடங்களுக்கு முந்தைய தாய் பத்திரங்களை ஆன்லைனில் எடுக்க முடியாது. நேரில் சென்று தான் விண்ணப்பிக்க முடியும்.
தாய் பத்திரம் தொலைந்து போனால் முதலில் செய்ய வேண்டியவை
* உங்களுடைய தாய் பத்திரம் தொலைந்து விட்டால் எந்த ஊரில் பத்திரம் தொலைந்ததோ, அந்த ஊரிலுள்ள காவல் நிலையத்தில் உடனே பத்திரம் எப்படி, எப்போது தொலைந்தது என்பதை தெளிவாக குறிப்பிட்டு, விரிவான புகாரைப் பதிவு செய்யவும்.
* புகாருக்கான ஒப்புகை ரசீதைப் பெற வேண்டும், அதில் காவல் அதிகாரியின் கையொப்பம், காவல் நிலைய முத்திரை ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
* ஆரம்பத்தில் காவல்துறையினர் உங்களை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் தேடச் சொல்லலாம். பத்திரம் இன்னும் கிடைக்கவில்லை என்றால், ஒரு F.I.R. பதிவு செய்து FIR அறிக்கையையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
* நீங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காணாமல் போன பத்திரம் குறித்தும், பத்திரத்தை யாராவது கண்டெடுத்து ஒப்படைக்கிறார்களா? என்பது குறித்தும் காவல்துறை ஆராயும்.
* ஆவணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், காவல் நிலையத்தில் உள்ள பொறுப்பாளரைச் சந்தித்து, பத்திரத்தின் முக்கியத்துவத்தை விளக்கி, கண்டுபிடிக்க முடியாத சான்றிதழைக் (Non Tracable) கோரவும்.
* Non Tracable சான்றிதழுடன், வழக்கறிஞரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். வழக்கறிஞர் பத்திரத்தை காணவில்லை, என்பது குறித்து தமிழ், ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் செய்யுங்கள்.
* நாளிதழிலில் விளம்பரம் செய்து 15 நாட்களுக்குள் பத்திரம் கிடைக்கும் பட்சத்தில் வழக்கறிஞர் அதை உங்களிடம் ஒப்படைப்பார். அதேசமயம், பத்திரம் கிடைக்காவிட்டால், பத்திரத்தின் நகலை (Certified copy) சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பெற்று, விளம்பரம் செய்த பத்திரிகையுடன் இணைக்கப்பட்ட சான்றிதழை வழக்கறிஞர் தருவார். அதை நீங்கள் பெற்று, சம்பந்தப்பட்ட சொத்தினை பிரச்சனையில்லாமல் அனுபவிக்க முடியும்.
சுருக்கமாக சொல்வதென்றால் நோட்டரி உறுதி மொழி பத்திரம், பத்திரிகை விளம்பரம் நகல், காவல்நிலையத்தில் புகார் செய்த மனு, FIR, NOT TRACABLE சான்றிதழ் உள்ளிட்ட இந்த 6 ஆவணங்களும் உங்கள் கையில் இருந்தால்தான், நீங்கள் பெற்றிருக்கும் ‘நகல் பத்திரம்’(Certified copy), தொலைந்துபோன ஒரிஜினல் ஆவணங்களுக்கு பதிலாக பயன்படுத்த முடியும் என்பதை மறக்க வேண்டாம்.
இதெல்லாம் அடிப்படையான வழிமுறைகள் என்றாலும், இதுகுறித்து மேலும் உங்களுக்கு தேவையான விவரங்களை அறிந்து கொள்ள உங்கள் வழக்கறிஞர் அல்லது காவல்துறையினரிடம் அணுகி பெற்றுக்கொள்ளலாம்.
சரியான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும், பாதுகாப்பான ஆவணக் கையாளுதல் நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும், சொத்து உரிமையாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளலாம் மற்றும் எதிர்கால சிக்கல்களைத் தவிர்க்கலாம்.