

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்க எதிராக, உண்மையாக போராடுவோர், தங்கள் போரட்ட தளத்தை ஹைஜாக் (Hijack) செய்ய நினைப்பவர்களை அடையாளம் காண வேண்டும் என்று வி தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
நீட் போராட்டம் :
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் என்னும் இடத்தில் கரப்பான்பூச்சி ஜனதாக் கட்சியினரின் (சிஜேபி) ஆதரவுடன் மாணவர்களும், இளைஞர்களும் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்ற மாணவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீச்சு நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் பாதுகாப்பு காரணமாக 16 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
ஆயினும், கலைந்து செல்லாமல் மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கூடியிருப்பதாக சிஜேபி தெரிவித்ததுள்ளது. தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றத் தவறினால், மேலும் பல மில்லியன் பேர் போராட்டத்தில் இணைவார்கள் என அக்கட்சியின் நிர்வாகி அஷுதோஷ் ரங்கா கூறியுள்ளார்.
இதற்கிடையே மாணவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சியினர் நேற்று (ஜூலை 21) பிரதமர் மோடியின் வீட்டுக்கு முன்னால் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் பாஜக தலைவரும், வி தி லீடர்ஸ் அமைப்பின் தலைவருமான அண்ணாமலை பதிவிட்டிருக்கிறார்.
போராடும் மாணவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீட் விசாரணைக்கு தொடர்பில்லாதவர்கள் தற்போது போராட்ட மேடையில் உள்ளனர் என்று மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உண்மையாக போராடுவோர், தங்கள் போரட்ட தளத்தை ஹைஜாக் (Hijack) செய்ய நினைப்பவர்களை அடையாளம் காண வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
மாணவர்களுக்கும், அவர்களை வழிநடத்துபவர்களுக்கும் இதில் ஒரு பொறுப்பு உள்ளது. ஒரு போராட்டம் பல வாரங்கள் நீடிக்கும் போது, சுயநலம் கொண்ட நபர்கள் களத்தில் புகுந்து, போராட்டத்தின் தொடக்கக் கோரிக்கைகளுக்குச் சற்றும் தொடர்பில்லாத கருத்துகளைப் பேசுவது அல்லது தங்களின் சொந்த நோக்கங்களுக்காகப் போராட்டத்தை முழுமையாகத் திசைதிருப்ப முயல்வது இயல்பு. நீங்கள் மௌனமாக இருந்து, இந்தச் சுயநலவாதிகள் தங்களின் நோக்கங்களை நிறைவேற்ற அனுமதித்தால், நீங்கள் உங்களின் முதன்மை லட்சியத்திலிருந்து விலகிவிடுவீர்கள். தயவுசெய்து அதற்கு இடம் கொடுத்துவிடாதீர்கள்! என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் மாணவர் சேர்க்கையில் ஒரு சீரான தன்மையைக் கொண்டுவந்ததாலும், பின்தங்கிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எனும் தங்கள் கனவை நனவாக்க உண்மையான வாய்ப்பை வழங்கியதாலும், நீட் (NEET) தேர்வை நான் தனிப்பட்ட முறையில் கடந்த பல ஆண்டுகளாக ஆதரித்து வந்துள்ளேன் என்றார்.
ஜனநாயகத்தில் போராட்டம் என்பது அடிப்படை உரிமை. இருப்பினும், இங்கு எழும் முக்கியமான கேள்வி இதுதான். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு தற்போது வரை மத்திய பாஜக அரசு பொறுப்பேற்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, பாஜக தலைமையிலான மத்திய அரசு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது? என்று வினவியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் 3 முறை நீட் வினாத்தாள் கசிந்துள்ளது. இதற்கு இதுவரை மத்திய அரசு பொறுப்பேற்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை போராடும் மாணவர்களின் நியாயமான கல்வி மற்றும் தேர்வு முறை குறித்த கவலைகளைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு உடனடியாக மாணவர்களுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்றும் அவர்களின் கவலைகளுக்கு விரைவான தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
‘ஒரு நாட்டின் உண்மையான வலிமை இளைஞர்கள். நமது கல்வி முறையின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை மீது மாணவர்கள் நம்பிக்கை இழந்தால், நாம் நமது நாட்டின் எதிர்காலத்தையே ஆபத்துக்குள்ளாக்குகிறோம்’ என்று பதிவிட்டிருக்கிறார்.