மே 1 முதல் என்னென்ன மாறப்போகுது? மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க..!

மே 1-ம்தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள முக்கிய மாற்றங்கள் பற்றியும், அவை உங்கள் நிதி நிலையை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.
May month Restrictions
May month RestrictionsAI Image
Updated on

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் இந்தியாவில் பல விதிமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் மே 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்களை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

சிலிண்டர் விலை :

ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியன்று சிலிண்டர் விலை மாறும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது.

தற்போது சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.928.50 ஆகவும், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.2,246.50 ஆகவும் உள்ளது. எனவே மே மாதத்தில் சிலிண்டர் விலை மாற்றப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

ஏனெனில் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பைச் சரிசெய்ய இந்த விலை உயர்வு அவசியமாகக் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்! சென்னையில் எகிறிய சிலிண்டர் விலை!
May month Restrictions

வரும் மே 4-ம்தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ₹25 முதல் ₹28 வரை உயரும் என்று பரவி வரும் சில செய்திகளை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மறுத்துள்ளது. இருப்பினும், மாதந்தோறும் நடக்கும் வழக்கமான மாற்றங்களின்படி சிலிண்டர் விலையில் சிறிய அளவில் ஏற்றம் இருக்கக்கூடும் என்பதே தற்போதைய களநிலவரமாக உள்ளது.

சிலிண்டர் புக்கிங் விதிகளில் மாற்றம் :

ஏற்கனவே நகரங்களில் 25 நாட்களுக்கு ஒரு முறையும் கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு ஒரு முறை தான் சிலிண்டர் புக்கிங் செய்ய முடியும் என்கிற விதி இருந்து வருகிறது. அதேபோல் சிலிண்டர் சப்ளையில் வெளிப்படை தன்மையை கொண்டு வர OTP அடிப்படையிலான டெலிவரி முறை 100% கட்டாயப்படுத்தப்பட உள்ளது. ஒரே முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கேஸ் இணைப்புகள் இருந்தால் அவற்றை இணைக்க அல்லது ஒன்றை ரத்து செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. போலி இணைப்புகளை கண்டறிந்து நீக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டப் பயனாளிகள் மற்றும் மானியம் பெறுவோர் ஆதார் அடிப்படையில் செய்திருக்க வேண்டியது அவசியம்.

எரிவாயு கள்ளச்சந்தையைக் கட்டுப்படுத்துவதும், மானியங்களும் சிலிண்டர்களும் சரியான வாடிக்கையாளர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதும் இந்த மாற்றங்களின் முக்கிய நோக்கமாகும்.

சிங்கார சென்னை அட்டை :

சிங்கார சென்னை அட்டை என்பது சென்னை மெட்ரோ ரெயில் மற்றும் மாநகரப் பேருந்துகளில் தடையற்ற, ரொக்கமற்ற பயணத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய பொது போக்குவரத்து அட்டை (NCMC) ஆகும். இது எஸ்பிஐ (SBI) உடன் இணைந்து வழங்கப்படுகிறது. இந்நிலையில், வரும் மே 1 முதல், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தனது பழைய பயண அட்டைகளை முழுமையாக நிறுத்திவிட்டு, சிங்கார சென்னை அட்டைக்கு மாறத் திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம், பயணிகள் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் (மெட்ரோ, பேருந்து, புறநகர் ரெயில்) ஒரே அட்டையைப் பயன்படுத்தித் தடையற்ற பயணத்தை மேற்கொள்ள முடியும்.

எனவே வரும் மே 1-ம்தேதி முதல் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்யவும், மெட்ரோ வாகன நிறுத்தங்களை பயன்படுத்தவும், பயணிகள் தங்களது பழைய அட்டையில் மீதமுள்ள தொகையை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் செல்போன் செயலி மூலம் பெறப்படும் எஸ்.வி.பி.பாஸ் அல்லது தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு மாற்றி கொள்ளுமாறு மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டுக்கு புதிய விதிமுறைகள்:

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது வரும் மே 1-ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதில் சூதாட்டம் இல்லாத சாதாரண விளையாட்டுகளுக்கு பதிவு அவசியமில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் ‘இ-ஸ்போர்ட்ஸ்’ விளையாட்டுக்களுக்கு கட்டாய பதிவு அவசியம். அரசு தன்னிச்சையாகவோ அல்லது தேவைப்படும் போதோ சில விளையாட்டுகளை கண்காணிக்க இந்த விதிகள் உதவும். பயனாளர் பாதுகாப்பு அம்சங்களும் இதில் உறுதி செய்யப்பட்டுள்ளன. இச்சட்டம் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வழிவகை செய்கிறது.

SBI வங்கியில் 2 புது ரூல்ஸ் :

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), எஸ்பிஐ கிரெடிட் கார்டை (SBI Credit Card) பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வரும் மே 1-தேதி முதல் சில முக்கியமான மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளது.

BPCL SBI அட்டை கட்டண விலக்கு: BPCL SBI கிரெடிட் கார்டின் ரூ.499 வருடாந்திரக் கட்டணம், வரும் மே 1-ம்தேதி முதல் ஆண்டுச் செலவு ரூ.1 லட்சத்தை எட்டினால் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்; இது முன்பு நிர்ணயிக்கப்பட்ட ரூ.50,000 என்ற வரம்பிலிருந்து உயர்த்தப்பட்டுள்ளது. சுருக்கமாக செல்வதென்றால், அதே கட்டண தள்ளுபடி பலனை பெற, வாடிக்கையாளர் இனிமேல் ஆண்டுக்கு இரு மடங்கு அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

தாமதக் கட்டண (Late Fee) திருத்தம்: கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைக்கான அபராதக் கட்டண முறை மாற்றப்பட்டுள்ளது. ரூ.100 முதல் ரூ.500 வரையிலான நிலுவைக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும், மற்றும் ரூ.500 முதல் ரூ.1000 வரையிலான நிலுவைக்கு அபராதம் ரூ.400-லிருந்து ரூ.500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் உங்கள் நிலுவைத் தொகை ரூ.1,000-ஐ தாண்டினால், தாமதக் கட்டணங்களில் எந்த மாற்றமும் இருக்காது.

கடைசி தேதிக்குள் குறைந்தபட்ச நிலுவை தொகையையாவது செலுத்த தவறும் வாடிக்கையாளர்களுக்கு, தாமத கட்டணம் விதிக்கப்படும் என்றும் தொடர்ச்சியாக இரண்டு பில்லிங் சுழற்சிகளுக்கு இந்த குறைந்தபட்ச கட்டணத்தை வாடிக்கையாளர் செலுத்தத் தவறும்பட்சத்தில், கூடுதலாக ரூ.100 அபராதம் சேர்க்கப்படும் என்று கூறியுள்ளது. அதுமட்டுமின்றி நீங்கள் நிலுவை தொகையை செலுத்தும் வரை ஒவ்வொரு மாதமும் இந்த கூடுதல் தாமத கட்டணம் தொடரும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பரிசுப் புள்ளிகள் காலாவதியாதல்: 'கேஷ்பேக்' (Cashback) சலுகைகள் மூலம் பெறப்படும் பரிசுப் புள்ளிகள், அந்தத் தொகை கணக்கில் வரவு வைக்கப்பட்ட 90 நாட்களுக்குள்ளும்; 'உடனடித் தள்ளுபடி' (Instant Discount) சலுகைகள் மூலம் பெறப்படும் புள்ளிகள் 120 நாட்களுக்குள்ளும் காலாவதியாகிவிடும்.

HDFC வங்கி SMS கட்டணம் :

HDFC வங்கி தனது SMS சேவைகளுக்கான புதிய கட்டணங்களை மே 1-ம்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. வங்கி பரிவர்த்தனைகளின் பொழுது பாதுகாப்பு கருதி வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணிற்கு SMS அனுப்பப்பட்டிருக்கிறது.

தற்போது ஒரு குறுஞ்செய்திக்கு 20 காசுகளுடன் GST வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் இதனை வரும் மே 1 முதல் ஒரு SMS-க்கு 15 காசுகளாக குறைக்கப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்:
SBI வாடிக்கையாளர்களே உஷார்.. மத்திய அரசு கொடுத்த அலெர்ட்..!
May month Restrictions

அதேபோல் மாதம் 100 SMS அலர்ட்டுகளுக்கு இதுவரை ரூ.20+ GSTயும் செலுத்தியந்த நிலையில் இனிவரும் காலங்களில் அது 15 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மின்னஞ்சல் மூலம் பெறப்படும் அலர்ட்டுகளுக்கு கட்டணம் கிடையாது என்றும், அது முற்றிலும் இலவசமாக இருக்கும் என்றும் HDFC வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

வங்கிப் பரிவர்த்தனைகளில் மாற்றம் :

வரும் மே 1-ம்தேதி முதல் ஒவ்வொரு டிஜிட்டல் பரிவர்த்தனையும் அதிகப் பாதுகாப்பாக இருப்பதற்காக இரு காரணி அங்கீகாரம் (2FA) கடுமையாகச் செயல்படுத்தப்படவிருக்கிறது. அதாவது, யூபிஐ, நெட் பேங்கிங் அல்லது கார்டு மூலம் பணம் செலுத்தும் போது OTP நம்பர், PIN நம்பர் அல்லது பயோமெட்ரிக் சரிபார்ப்பை மீண்டும் செய்ய வேண்டியிருக்கும். கார்டு இல்லாத பணப் பரிவர்த்தனைகள் இனி இலவசப் பரிவர்த்தனை வரம்பில் கணக்கிடப்படும். இந்த வரம்பை மீறினால் 17 ரூபாய் முதல் 21 ரூபாய் வரை கட்டணம் விதிக்கப்படும்.

பான் கார்டு விதிமுறைகள்:

அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகள் மீதான தனது கண்காணிப்பை அரசு இப்போது கடுமையாக்குகிறது. ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்திற்கு மேல் பணம் டெபாசிட் செய்யும் அல்லது எடுக்கும் நபர்களுக்கு பான் எண் வழங்குவது கட்டாயமாக்கப்படும். முன்னதாக, இந்த வரம்பு தினசரி அடிப்படையில் கண்காணிக்கப்பட்ட நிலையில் இப்போது ஆண்டுதோறும் கண்காணிக்கப்படும்.

EPFO விதிகளில் புதிய மாற்றம் :

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனமான EPFO மே மாதம் முதல் புதிய நடைமுறைகளை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது PF கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் PF பணத்தை எடுக்க ஆன்லைனில் விண்ணப்பித்து மாத கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
EPFO 3.0 : இனி வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டாம்! - 3 நாட்களில் செட்டில்மென்ட்..!
May month Restrictions

இந்த பணத்தை UPI அல்லது ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி EPFO 3.O மூலம் கொண்டு வரப்படும் என்று சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நடைமுறை வரும் மே மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com