

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கன்னியாகுமரி, தென்காசி , நெல்லை, தூத்துக்குடி உள்பட தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனிடையே, நெல்லை மாவட்டத்தின் சேரன்மகாதேவி, மேலச்செவல், பிராஞ்சேரி, சொக்கலிங்கபுரம், கோபாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வாழை மரங்களை பயிரியிட்டிருந்தனர். தற்போது அந்த வாழைகள் குலை தள்ள தொடங்கி இருந்தது.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து இன்று காலை பலத்த சூரை காற்று வீசியது. இந்த சூரைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் குலை தள்ள தொடங்கி இருந்த அதாவது அறுவடைக்கு தயாராக இருந்த ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான வாழைமரங்கள் அப்படியே அடியோடு சாய்ந்துள்ளது.
ஒரு வாழை மரத்திற்கு ரூ.100 முதல் ரூ.125 வரை என லட்சக்கணக்கான ரூபாய் செலவிட்டுள்ள அப்பகுதி விவசாயிகள் வாழைமரங்கள் அடியோடு சாய்ந்ததால் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்துள்ளனர். மேலும் இதனால் தங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தங்களின் இந்தப் பாதிப்பை முழுமையாக நிவர்த்தி செய்ய இயலாது என்றாலும், தங்களது வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த வருவாய் துறை அதிகாரிகள் சூறைக்காற்றில் சாய்ந்த வாழையை கணக்கெடுப்பும் பணியை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.