பஞ்சாங்கத்தில் முன்பே கணிக்கப்பட்டதா நேபாள வெள்ளப்பெருக்கு? - சமூக ஊடகங்களில் தீயாக பரவும் தகவல்..!

திபெத் மலைப்பகுதியில் பனிமலை உருகுவது குறித்து முன்பே கணிக்கப்பட்டிருந்ததாக சமூக ஊடகங்களிலும் மக்கள் மத்தியிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
பஞ்சாங்கம், நேபாள வெள்ளம்
பஞ்சாங்கம், நேபாள வெள்ளம்@PrabhuManohara3, AI Image
Updated on

‘பராபவ’ வருடத்திய பஞ்சாங்கத்தில் காத்மாண்டுவில் ஏற்படும் பாதிப்பு, திபெத் மலைப்பகுதியில் பனிமலை உருகுவது (நேபாள வெள்ளம்) குறித்து முன்பே கணிக்கப்பட்டிருந்ததாக சமூக ஊடகங்களிலும் மக்கள் மத்தியிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

கடந்த 26-ம்தேதி நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் (4.4 ரிக்டர்) காரணமாக அங்கிருந்த ஒரு பெரிய பனிப்பாறை சரிந்து விழுந்தது. இதனால் அங்கு தற்காலிகமாக உருவான ஏரி உடைந்து, நேபாளத்தின் போடேகோஷி நதியில் மற்றும் ஆறுகளில் வரலாறு காணாத சீற்றத்துடன் கோர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த நாட்டின் சீன எல்லையை ஒட்டிய பிராந்தியம் முழுவதையும் சீர்குலைத்தது.

போடேகோஷியின் கிளை நதியான லெண்டேயின் நீரோட்டத்தை பனிச்சரிவு ஒன்று தடுத்ததால் உருவான ஏரி உடைந்து இந்த காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வெள்ளம் மட்டுமின்றி பாறைகள், மண், சேறு என பெரும் பிரளயமே அங்கு ஏற்பட்டது. சுனாமி அலைகளையே மிஞ்சும் அளவுக்கு ஏற்பட்ட பெருவெள்ளம் கண் இமைக்கும் நேரத்தில் நீர்மின் நிலையங்கள், பாலங்கள், சாலைகள், செல்போன் கோபுரங்கள், வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் என அனைத்தையும் வாரிச்சுருட்டி சென்றது.

நேபாளத்தின் 8 மாவட்டங்களை புரட்டிப்போட்ட இந்த பேரிடர், ரசுவா, நுவாகோட், தடிங் ஆகிய 3 மாவட்டங்களை முழுமையாக உருக்குலைத்து இருக்கிறது. சேறும், சகதியுமாக காட்சியளிக்கும் இந்த பிராந்தியம் முழுவதும் பார்ப்போரை பதறவைக்கிறது. இமயமலையில் இருந்து அடித்து வரப்பட்ட கற்கள், மண், சேறு, சகதி அனைத்தும் பல அடி உயரத்துக்கு நிறைந்து இருக்கிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பலரும் உயிரிழந்திருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த பேரிடரில் பலியானோர் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளது. 2,500-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

போடோகோஷி ஆற்றில் மீண்டும் சேறு மற்றும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், மீண்டும் ஒரு வெள்ளம் ஏற்படலாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்குimage credit-@ravipandey2643

இந்நிலையில் நேபாளத்தில் ஆகஸ்ட் 2026-ல் வெள்ளப் பேரழிவு மற்றும் நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் என்று ‘பராபவ’ வருடத்திய பஞ்சாங்கம் மற்றும் ஜோதிடக் கணிப்புகளில் முன்பே கணிக்கப்பட்டிருந்ததாக சமூக ஊடகங்களிலும் மக்கள் மத்தியிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

பொதுவாக, தமிழ் மற்றும் வடஇந்தியப் பஞ்சாங்கங்களில் கிரகங்களின் நிலைகளை அடிப்படையாகக் கொண்டு இயற்கைச் சீற்றங்கள் குறித்த பொதுவான எச்சரிக்கைகள் விவரிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, நடப்பு ‘பராபவ’ வருடத்திய பஞ்சாங்கத்தில் குறிப்பிட்ட மாதங்களில் உலக அளவில் வட திசையிலோ அல்லது மலைப் பிரதேசங்களிலோ கடுமையான மழைப்பொழிவு, நிலச்சரிவு அல்லது பூகம்பங்கள் ஏற்பட்டு சேதங்கள் உண்டாகலாம் என்ற பொதுவான கணிப்புகள் இடம்பெற்றிருந்தன.

இதையும் படியுங்கள்:
72 மணி நேரம் தான் கெடு...நேபாளத்தை மீண்டும் பேரழிவு தாக்கும்.. பீதியை கிளப்பும் சீனா..!
பஞ்சாங்கம், நேபாள வெள்ளம்

ஜோதிட சாஸ்திரப்படி சனி, செவ்வாய், ராகு, சூரியன் ஆகிய கிரகங்களின் அசுப சேர்க்கை அல்லது சமசப்தம பார்வை (ஒன்றுக்கொன்று நேராகப் பார்ப்பது) ஏற்படும் போது உலக அளவில் பூகம்பம், பெருவெள்ளம், பனிச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும் என்று ஜோதிடத்தில் கணிக்கப்படுகிறது.

நேபாளத்தில் சமீபத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்திற்கு சில வாரங்களுக்கு முன்பே, குறிப்பிட்ட ஜோதிடர்களும் பஞ்சாங்கக் கணிப்பாளர்களும் கிரக நிலைகளை (குறிப்பாக புதன் மற்றும் செவ்வாய் பாதிப்புகள்) சுட்டிக்காட்டி இமயமலைப் பகுதிகளில் பெரிய பாதிப்பு வரலாம் என எச்சரித்ததாகப் பதிவுகள் வெளியாகி வருகின்றன.

சுத்த வாக்கிய சர்வ முகூர்த்த நேபாள பெருவெள்ளம் பற்றி இவ்வாறு பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது:-

‘விந்திய மலைக்கு வடக்கே பார்ஹஸ் பத்தியமான ரீதியாய் பராபவ வருஷ பலன்க:-

தமிழ்நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. கோவில்களின் சொத்துக்களை மீட்க நேரும்.

இமாச்சல் பிரதேசத்தின் பலன்கள்: மூணாறு, ஊட்டி, வால்பாறை, கொடைக்கானல் குளிர் அதிகமாக இருக்கும். சித்திரை மீ, வைகாசி மீ. ஆனி மீ மாதங்களில் (ம.பி) (உ.பி) ஒடிசா, காத்மாண்டு அதிகமான மழையால் பாதிப்பு. சீனா அருகில் உள்ள திபெத் மலையில் பனிமலை உருக நேரும்’ என்று கூறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 16 பேர் பலி; தமிழர்களின் நிலை என்ன? அவசர உதவி எண்கள் அறிவிப்பு!
பஞ்சாங்கம், நேபாள வெள்ளம்

இதற்கிடையே அறிவியல் வல்லுநர்கள் மற்றும் காலநிலை அமைப்புகள் (ICIMOD) இந்த இயற்கைச் சீற்றம் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே, புவி வெப்பமயமாதல் மற்றும் பனிப்பாறைகள் உருகுவதால் (Glacial Lake Outburst Floods - GLOF) இமயமலைப் பகுதியில் பேரழிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com