

திபெத் எல்லையில் உள்ள நேபாளத்தில் உள்ள மலைகளுக்கு இடையில் ஓடும் ஆற்றில் எதிர்பார்க்காத வகையில் திடீரென வெள்ளம் கரைபுரண்டு எழுந்தது. இந்த வெள்ளத்தில் சிக்கி 105 இந்தியர்கள் உள்பட பல நூறு பேர் மாயமாகி உள்ளனர். 16 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் நேபாளத்தில் உள்ள ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டு இருந்த நீர் மின்நிலையத்தை மூழ்கடித்து வெள்ளம் சீறிப்பாய்வது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.
இன்று காலை திபெத்தில் இருந்து திடீரென வெள்ளம் கரைபுரண்டு எழுந்துள்ளது. இந்த வெள்ளம் போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இரும்பு பாலங்கள் அடித்து செல்லப்பட்டனர். மேலும் சில கிராமங்களை மொத்தமாக வெள்ளம் அடித்து சென்றுள்ளது. இதனால் ரசுவா மற்றும் தாடிங் மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேபோல் நுவாகோட் மாவட்டமும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேபாள ராணுவம் மீட்பு, தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கிற்கான காரணம் இதுவரை தெரிவிக்கவில்லை.
குறிப்பாக ரசுவா மாவட்டத்தில் உள்ள திமுரே பகுதியில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சியாஃப்ருபெசி என்ற பகுதியில் உள்ள வாகனங்கள், பொருட்கள் உள்ளிட்ட மக்கள் சொத்துகள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன. காத்மாண்டில் இருந்து வடகிழக்கில் திபெத் எல்லையில் இருந்து ரசுவா மாவட்டம் அமைந்துள்ளது.
இந்த வெள்ளத்தில் இதுவரை 16 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 3 ஆண்கள், ஒரு பெண் ஆவார்கள். நான்கு பேர் உடல்களும் திரிஷுலி ஆறு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி நேபாளத்தின் சுற்றுலா வாரியம் சார்பில், ‘வெள்ளத்தில் 384 சுற்றுலா பயணிகள் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதில் 291 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். இதில் 105 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். மற்ற 93 பேர் நேபாளத்தை சேர்ந்தவர்கள். நேபாள சுற்றுலா வாரியம் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது’ என்றார்.
நேபாளத்தில் தற்போது மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. ராணுவம் மற்றும் பேரிடர் படையினர் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்களை மீட்டு வருகின்றனர்.
இந்த திடீர் வெள்ளத்தால் நேபாளத்தில் (நேபாள வெள்ளம்) ஏராளமான ரோடுகள், பாலங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன.
மேலும் அப்பகுதியில் மொபைல் சேவை, மின்சார வசதி ஆகியன துண்டிக்கப்பட்டு உள்ளன. நீர்மின் மற்றும் சூரிய மின்சார திட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளான சியாப்ரு மற்றும் திமுரே ஆகிய இடங்களில் மீட்பு ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியாததால், மீட்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளம் கனமழையால் ஏற்படவில்லை என்று நேபாளத்தின் நீரியல் மற்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இது ஒரு புதிய பனிப்பாறை உருவானதாலோ அல்லது பழைய பனிப்பாறை ஒன்று உடைந்ததாலோ ஏற்பட்டிருக்கலாம் என்றும், இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே பனி ஏரி உருகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், உறுதி செய்யப்படவில்லை.
இந்த வெள்ளப் பெருக்கில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கிய 57 பேரில் 23 பேர் ராணுவ முகாமில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த திடீர் வெள்ளத்தில் 32 போலீசார் மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த எட்டு பேர் என மொத்தம் 40 பேர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூரை சேர்ந்தவர்கள் நேபாளத்தில் சிக்கியுள்ளனர். ஆனால், அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி எண்கள் அறிவிப்பு!
நேபாளம் பெரு வெள்ளத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 -க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ள நிலையில், அவர்களின் நிலை குறித்து அறிய தமிழக அரசின் அயலகத் தமிழர் துறை சார்பில் 24 மணி நேர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான உதவி எண் - 1800 309 3793
வெளிநாடு உதவி எண்கள் - +91 8069009901, 08069009901
மிஸ்டு கால் அழைப்புக்கு +91 8069009900 / 8069009900 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அந்நாட்டுப் பிரதமர் பாலேந்திர ஷாவிடம் பேசி எனது இரங்கலைத் தெரிவித்ததாக அவர் 'எக்ஸ்' (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘இந்தக் கடினமான சூழலில், நேபாளத்தில் உள்ள சகோதர சகோதரிகளுடன் இந்திய மக்கள் உறுதுணையாக நிற்கிறார்கள். இந்த பேரிடரை எதிர்கொள்ளும் நேபாளத்திற்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். நேபாளத்திற்குத் தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் எங்கள் குழுக்கள் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன’ என்று அவர் கூறினார்.