

பிரபல நிறுவனமான நெஸ்லே(Nestle), குழந்தைகளுக்கான பால் பவுடர் ஃபார்முலாவை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது பலரையும் பீதி அடைய செய்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ஊட்டச்சத்து மற்றும் உணவு தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று நெஸ்லே(Nestle). சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் இன்று, உலகம் முழுவதிலும் உள்ள 86 நாடுகளில் இயங்கி வருவதுடன் குழந்தைகளுக்கான உணவுப்பொருள்களை தயாரிப்பதில் பெயர் பெற்றது.
நெஸ்லே நிறுவனம் காபி (Nescafé), சாக்லேட் (KitKat, Munch), பால் பொருட்கள் ( Milkmaid, Everyday), குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து (NanGrow, Ceregrow), காலை உணவு ( Koko Krunch), சமையல் பொருட்கள் ( Maggi) மற்றும் குளிர்பானங்கள் போன்ற பலதரப்பட்ட தயாரிப்புகளை தயாரித்து வருகிறது.
குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களை தயாரிப்பதில் முதன்மையான இந்நிறுவனம், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட சில குழந்தை உணவுப்பொருட்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
அதாவது, குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வே எங்கள் முதன்மையான முன்னுரிமை என்று தெரிவித்து, தங்கள் தயாரிப்பிலான சில பால் பவுடர்களை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.
முன்னணி வினியோகஸ்தர் வினியோகித்த ஒரு மூலப்பொருளில் தரக்குறைவு கண்டறியப்பட்டதால், அது விஷ உணவாக மாறக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டது.
நெஸ்லே, நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளான SMA, BEBA, NAN என்ற மூன்று தயாரிப்புகளிலும் Arachidonic acid (ARA) என்ற ஒரு ஆயில் சேர்க்கப்படும். அந்த ஆயிலில் bacillus cereus என்ற பாக்டீரியா உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த பாக்டீரியா உயர் வெப்பநிலையிலும் வாழக்கூடியது. இதுதான் செருலீயடு என்ற நச்சுப்பொருள் உருவாக காரணமாகிறது. இது மிகவும் ஆபத்தான நச்சுப்பொருள்.
தற்போதைக்கு இந்நிறுவனம் பிரான்ஸ், ஜெர்மனி உட்பட 25 ஐரோப்பிய நாடுகளில் நெஸ்லே பால் பவுடர் பார்முலாவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. ஏனெனில் அங்கு விநியோகிக்கப்படும் பொருட்களில்தான் இந்த நச்சுப் பொருள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு விநியோகிக்கப்பட்ட பால் பவுடர்களை திரும்பப் பெறுவதாகவும் நெஸ்லே அறிவித்துள்ளது.
நெஸ்லே பால் பவுடரில் நச்சுத்தன்மை வாய்ந்த "Cereulide" கலந்த பால் பவுடரை உட்கொண்டால் குழந்தைகளுக்கு வாந்தி, வாந்தி, அடிவயிற்றில் வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. நீண்டகால பாதிப்புகளுக்கு இது காரணமாக அமையாது என்பதால் ஏற்கெனவே குழந்தைகளுக்கு நெஸ்லே கொடுத்தவர்கள், இனி பாதிப்பு வருமோ என அச்சப்பட வேண்டாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே குழந்தைகளுக்கு நெஸ்லே பவுடர் பாலை தரவேண்டாம் என்று பெற்றோர்களுக்கு சவுதி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில், இந்தியாவில் விற்கப்படும் நெஸ்லே பொருட்கள் குறித்து கவலையும், அச்சமும் எழுந்துள்ளது. அதை தீர்க்கும் வகையில் நெஸ்லே இந்தியா வெளியிட்ட அறிக்கையில், ‘வாபஸ் பெறப்பட்ட பொருட்கள் எதுவும் இந்தியாவில் விற்கப்படவில்லை, இறக்குமதி செய்யப்படவும் இல்லை.
இந்தியாவில் விற்கப்படும் நெஸ்லே பொருட்கள், நம் நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன என்பதால் பயம் வேண்டாம். இந்திய உணவு தர நிர்ணய அமைப்பின் விதிமுறைகளின்படி தயாரிக்கப்படுகின்றன’’ என்று கூறியுள்ளது.