
உலகில் பொதுவாக மனிதர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட இரத்த வகையைக் கொண்டிருப்பார்கள். இதில் A, B, AB மற்றும் O உள்பட மொத்தம் 47 வகையான இரத்த வகைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு மேற்கண்ட இரத்த வகைகளில் எதுவுமே இல்லாத நிலையில், புதுமையான இரத்த வகையைக் கொண்டிருக்கிறார். பல கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பின் இந்த உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு பெண்ணிற்கு மட்டும் புதிய இரத்த வகை இருப்பது மருத்துவ உலகில் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது இரத்த வகையை மருத்துவர்கள் சோதனை செய்த போது O+ என முடிவு கிடைத்தது. இருப்பினும் மற்ற O+ இரத்த அலகுகள் எதுவும் இவரது இரத்த அலகுடன் பொருந்தவில்லை. இதனால் குழப்பமடைந்த மருத்துவர்கள் அப்பெண்ணின் இரத்த மாதிரியை பெங்களூரில் உள்ள ரோட்டரி டிடிகே இரத்த மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கோலார் பெண்ணின் இரத்த மாதிரியை பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தியதோடு, மேம்பட்ட செரோலாஜிக்கல் சோதனைகளையும் செய்தது ரோட்டரி டிடிகே இரத்த மையம். இதன் முடிவில் அவரது இரத்தம் ‘பேன்ரியாக்டிவ்’ என கண்டறியப்பட்டது. மேலும் இந்த இரத்தம் வேறு எந்த இரத்த மாதிரியுடனும் பொருந்தவில்லை என்பதையும் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்தது.
இந்நிலையில் அப்பெண்ணுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய இரத்த மாற்றம் தேவைப்படாது என்பதை உணர்ந்து, மருத்துவர்கள் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர்.
ரோட்டரி டிடிகே இரத்த மையத்தில் பணிபுரியும் மருத்துவர் அங்கித் மாத்தூர், அரிய வகை இரத்த வகை குறித்து விளக்கினார். அவர் கூறுகையில், “கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் மட்டுமின்றி அவருடைய குடும்பத்தினரது இரத்த மாதிரிகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, இங்கிலாந்து நாட்டின் பிரிஸ்டலில் உள்ள சர்வதேச இரத்தப் பரிசோதனை மையத்திற்கு அனுப்பினோம்.
கிட்டத்தட்ட 10 மாதங்கள் விரிவான சோதனைகளுக்குப் பிறகு, மருத்துவ உலகில் இதுவரை கண்டறியப்படாத இரத்தக் குழு ஆன்டிஜென் கண்டறியப்பட்டது. அவ்வகையில் இது குரோமர் இரத்தக் குழு வகையின் ஒரு பகுதியாகும். இந்த புதிய இரத்த வகையின் தோற்றத்தை அங்கீகரிக்கும் வகையில், இதற்கு ‘கிரிப் (CRIB)’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் CR என்பதை குரோமர் இரத்தக் குழுவையும், IB என்பது இந்தியா மற்றும் பெங்களூருவையும் குறிக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.