

பிஎஃப் சந்தாதாரர்கள் இனி பணம் எடுக்கவும், கணக்கை மாற்றவும் அலுவலகங்களுக்கு அலைய தேவையில்லை. மென்பொருள் மூலம் கோரிக்கைகளை தானாகவே தீர்க்கும் புதிய முறையை EPFO அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வேலை மாறும்போது பழைய பிஎஃப் தொகை தானாகவே புதிய கணக்கிற்கு மாற்றப்படும் மற்றும் 5 லட்சம் வரையிலான முன்பணத்தை வெறும் 3 நாட்களில் பெற முடியும்.
வருங்கால வைப்பு நிதி (Provident Fund - PF) என்பது இந்திய அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனப் பணியாளர்களின் ஓய்வுக்கால சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். பணியாளரின் அடிப்படைச் சம்பளத்தில் இருந்து 12% பிடித்தம் செய்யப்பட்டு, அதே அளவுக்கு நிறுவனமும் செலுத்தி இந்த நிதியில் முதலீடு செய்கிறது. மத்திய அரசு வருங்கால வைப்பு நிதி முதலீடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தை நிர்ணயிக்கிறது.
அந்த வகையில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (PF) ஒரு பெரும் ஆதரவாக உள்ளது. அவசர காலங்களில் PF பணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தற்போது, ஆன்லைன் மூலம் PF பணத்தை எடுக்க 7 முதல் 10 நாட்கள் வரை ஆகிறது. ஆனால், நேரடி முறையில் பணத்தை எடுக்க ஒரு மாதம் வரை கூட ஆகலாம். இருப்பினும், மத்திய அரசு இப்போது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ( EPFO ) சந்தாதாரர்களுக்கு, ஏடிஎம் மற்றும் UPI கட்டணச் செயலிகள் மூலமாகவே நேரடியாகத் தங்கள் PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும் வசதியை வழங்கவுள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, EPFO அமைப்பின் புதிய மொபைல் செயலியான 'EPFO 3.0' அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தனது சேவைகளை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ஒரு முக்கிய சீர்திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது. இனி தகுதியான PF கணக்குகளில் இருந்து பணம் எடுக்க விண்ணப்பித்தால், மூன்றே நாட்களுக்குள் பணம் செட்டில் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, மேனுவல் சரிபார்ப்புகள் மற்றும் நடைமுறைச் சிக்கல்களால் PF பணம் கைக்கு வர நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்ட நிலையில், தற்போது அமலுக்கு வந்துள்ள இந்த புதிய மாற்றம் சந்தாதாரர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
மேலும் இந்த புதிய நடைமுறை துரிதமாகச் செயல்படுத்துவதை உறுதி செய்ய, EPFO கடுமையான விதியைக் கொண்டுவந்துள்ளது. புதிய விதிகளின்படி, தேவையான அனைத்து ஆவணங்களும் நடைமுறைகளும் பூர்த்தி செய்யப்பட்ட பின்னரும், நியாயமான காரணங்கள் இன்றி, வருங்கால வைப்பு நிதி (PF) திரும்பப் பெறுதல், ஓய்வூதியம் அல்லது காப்பீட்டுக் கோரிக்கை 20 நாட்களுக்குள் தீர்க்கப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட ஆணையர் அல்லது அதிகாரி பொறுப்பேற்க வேண்டும். அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அத்தகைய சந்தர்ப்பங்களில், தாமதமான காலத்திற்கான பலன் தொகையின் மீது ஆண்டுக்கு 12% தண்டனை வட்டி விதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் முக்கியமாக, இந்த வட்டியை EPFO நிதியிலிருந்து அல்லாமல், பொறுப்புள்ள அதிகாரியின் சம்பளத்திலிருந்து வசூலிக்கலாம்.
குறிப்பாக தேவையான தகுதிகள் மற்றும் கேஒய்சி விவரங்கள் சரியாக உள்ள கணக்குகளுக்கு மட்டுமே இந்த 3 நாள் செட்டில்மென்ட் வசதியானது பொருந்தும் என்றும் கூடுதல் சரிபார்ப்பு தேவைப்படும் கணக்குகளுக்கு கூடுதல் காலமாகும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
சேவைகளை எளிமையாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, விண்ணப்பங்களைச் சரிபார்த்துப் பணம் வழங்கும் ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பை EPFO உயர்த்தியுள்ளது. இதற்கு முன்பு ரூ.1 லட்சமாக இருந்த இந்த வரம்பு, தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போதைய விதிகளின்படி, EPF உறுப்பினர்கள் தங்கள் தேவைகள் மற்றும் தகுதியின் அடிப்படையில் தங்கள் PF இருப்புத் தொகையில் 75 சதவீதம் வரை எடுக்கலாம். மருத்துவ அவசரநிலை, திருமணம், கல்வி, வீடு கட்டுதல் அல்லது வேலையின்மை போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் PF பணத்தை எடுக்க நினைப்போருக்கு இந்த வேகம் பெரும் உதவியாக இருக்கும். குறிப்பாக, ஆதார் இணைக்கப்பட்ட UAN எண் மற்றும் சரியான வங்கி விவரங்கள் உள்ளவர்களுக்குக் காத்திருப்பு காலம் பெருமளவு குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் PF கணக்கில் இருந்து முன்பணமாக பணம் எடுக்கும் விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஓர் ஆண்டுக்கு பணம் எடுக்கும் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதியான இருப்பு தொகையில் 100 சதவீதம் வரை முன்பணமாக எடுத்து கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஊழியர் மற்றும் நிறுவனம் செலுத்திய பங்களிப்பு தொகைகளும் அடங்கும். எனினும் உறுப்பினர்கள் தங்களது கணக்கில் உள்ள மொத்த பங்களிப்பில் குறைந்தபட்ச 25 சதவீதத்தை இருப்பாக வைத்திருக்க வேண்டியது கட்டாயம்.
இந்த 3 நாள் அதிவேக செட்டில்மென்ட் திட்டத்தின் கீழ் பலன் பெற, EPF உறுப்பினர்கள் தங்களின் கணக்கில் பின்வரும் விவரங்களைச் சரியாக வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும்... அவை...
* உங்களது UAN எண் ஆக்டிவாக இருக்க வேண்டும்.
* UAN எண்ணுடன் ஆதார் எண் கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
* பான் கார்டு மற்றும் தற்போதைய வங்கி கணக்கு விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
* சுயவிவரக் குறிப்புகள் (KYC)முழுமையாக முடிந்திருக்க வேண்டும்.
* OTP சரிபார்ப்புக்கு வசதியாக, வங்கிக்கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
அதேபோல் ஒரு ஊழியர் ஐந்து ஆண்டுகள் பணியை நிறைவு செய்துவிட்டுத் தனது PF தொகையை எடுத்தால் அதற்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. இந்த ஐந்து ஆண்டு கால அளவு ஒரே நிறுவனத்தில் தான் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று இல்லை. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றிய காலத்தையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
புதிய திட்டங்களின் முக்கிய நோக்கம் டிஜிட்டல் சேவைகளை வலுப்படுத்துவதாகும். EPFO உறுப்பினர்கள் அலுவலகங்களுக்குச் செல்லாமலேயே அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் அணுகுவதை சாத்தியமாக்குவதே இதன் குறிக்கோள்.
வரும் காலங்களில் PF பணத்தை UPI மூலமாகவோ அல்லது ATM கார்டுகள் மூலமாகவோ நேரடியாக எடுக்கும் அதிநவீன டிஜிட்டல் வசதிகளையும் கொண்டுவர EPFO திட்டமிட்டு வருகிறது.