
இன்றைய இளம் தலைமுறையினர் சமூக வலைதளங்களில் அதிகளவில் ரீல்ஸ் வீடியோக்களைத் தான் பார்த்து வருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரீல்ஸ் பார்ப்பதை பொழுதுபோக்காக கொண்டுள்ளனர். மேலும் சிலருக்கு ரீல்ஸ் வீடியோக்கள் தான் கவலைகளில் இருந்து விடுபடவும் துணைபுரிகிறது.
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் அறிமுகமான பின்பு, உலகம் முழுக்க மிகவும் பிரபலமாகி விட்டது. இந்நிலையில் பயனர்களை கவரும் விதமாக புதுப்புது அப்டேட்டுகளை இன்ஸ்டாகிராம் செய்து வருகிறது. அவ்வகையில் தற்போது ரீல்ஸ் பார்ப்பதில் புதிய அம்சம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.
மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இயங்கி வருகின்றன. கடந்த 2010 ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் தொடங்கப்பட்ட போது, முதலில் புகைப்படங்களை மட்டும் தான் பதிவிட முடிந்தது. பிறகு பயனர்களின் வசதிக்காக வீடியோக்களை பகிரவும், ஸ்டேட்டஸ் வைக்கவும் படிப்படியாக புதிய வசதிகள் உருவாக்கப்பட்டது.
இந்த வரிசையில் ரீல்ஸ் வீடியோக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அது உலகம் முழுவதும் உள்ள பயனர்களை வெகு விரைவிலேயே கவர்ந்தது. இந்நிலையில் பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்த ரீல்ஸ் வீடியோக்களில் ஆட்டோ ரீல்ஸ் வசதியை அறிமுகப்படுத்த இன்ஸ்டாகிராம் திட்டமிட்டுள்ளது. பொதுவாக ரீல்ஸ் பார்க்கும் பயனர்கள் அடுத்த ரீல்ஸை பார்க்க ஸ்க்ரோல் செய்ய வேண்டும். இல்லையெனில் ஒரே ரீல்ஸ் வீடியோ தான் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருக்கும்.
இந்நிலையில் ஆட்டோ ரீல்ஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டால், பயனர்கள் ஸ்க்ரோல் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. ஆட்டோமெட்டிக் முறையில் தானாகவே அடுத்த ரீல்ஸ் ப்ளே ஆகி விடும். இதனால் பயனர்களின் நேரம் மிச்சமாவது மட்டுமின்றி, வேலை செய்து கொண்டே கூட தொடர்ந்து பல ரீல்ஸ் வீடியோக்களைக் காண முடியும்.
இந்த புதிய வசதி தற்போது ஐபோன் பயனர்களுக்கு மட்டும் பீட்டா வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி ரீல்ஸ் பட்டனை கிளிக் செய்து ஆட்டோ ரீல்ஸ் ஆப்ஷனை ஆன் செய்தால், தொடர்ந்து அடுத்தடுத்த ரீல்ஸ்கள் ஓடிக் கொண்டே இருக்கும். ஆன்ட்ராய்டு மொபைல் பயனாளர்களுக்கு விரைவில் ஆட்டோ ரீல்ஸ் வசதி கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை செய்து கொண்டே ரீவ்ஸ் பார்க்கும் பலருக்கும் இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும் என இன்ஸ்டாகிராம் தரப்பில் கூறப்படுகிறது.