

இன்றைய சூழலில் வங்கியில் கணக்கு வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது எந்த ஒரு பணபரிவர்த்தனையும் வங்கிகள் மூலமே நடைபெறுகிறது. அதேபோல் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் எப்போதும் குறைந்தபட்ச இருப்பை வங்கியில் வைத்து இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்படி இல்லாத பட்சத்தில் வங்கிகள் அபராதமாக குறிப்பிட்ட பணத்தை பிடித்து கொள்கிறது.
இந்நிலையில் மக்களின் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் வங்கிகள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு இன்று (நவம்பர் 20-ம்தேதி)முதல் புதிய விதிமுறை அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் வங்கிக்கணக்குகளில் உள்ள பணத்தை ஆன்லைன் மூலம் மோசடி செய்வது அதிகரித்து வருவதால் அதை தடுப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி இன்று முதல் அமல்படுத்த உள்ளது.
மேலும் கீழே கூறப்பட்டுள்ள 3 வங்கிக்கணக்குகளில் ஏதாவது ஒன்று உங்களுடைய வங்கி கணக்கு போல் இருந்தால் உடனே உங்கள் வங்கி கிளையை அணுகி உங்கள் வங்கி கணக்கை மீட்க என்ன செய்யலாம் என்று கேட்டு அறிந்து கொள்வது நல்லது.
புதிய விதிகளின்படி, செயல்படாத கணக்குகள் (Dormant), செயலற்ற கணக்குகள் (Inactive), இருப்பு இல்லாத கணக்குகள் (ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்) ஆகிய மூன்று வகையான கணக்குகளும் முடக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுபோன்று நீண்ட காலமாக பரிவர்த்தனை இல்லாத வங்கிக்கணக்குகளையே விஷமிகள் மோசடி மற்றும் தவறான நடவடிக்கைகளுக்கு குறிவைக்கிறார்கள். எனவே, அத்தகைய கணக்குகளை மூடுவது பாதுகாப்பான வங்கிச் சூழலை உறுதி செய்யும். எனவே, வாடிக்கையாளர்களையும், வங்கித்துறையின் நேர்மையையும் பாதுகாக்க இத்தகைய கணக்குகள் முடக்கவும் அல்லது அவற்றின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
அதேபோல் வங்கிக் கணக்குகள், நிலையான வைப்புநிதிகள், லாக்கர்கள் மற்றும் பாதுகாப்பான உடைமைகளுக்கு வாடிக்கையாளர்கள் முன்னர் ஒரு பரிந்துரைக்கப்பட்ட நபர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், இப்போது ஒரு கணக்கில் நான்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்களைச் சேர்க்கலாம் என்று தெரிவித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட நபர்களைச் சேர்க்கும் வசதி, ஒரே நேரத்தில் (Simultaneous) அல்லது அடுத்தடுத்து (Successive) என இரு வடிவங்களில் கிடைக்கும்.
அதாவது, ஒரே நேரத்தில் பரிந்துரை (Simultaneous Nomination) என்பது அனைத்து பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கும் ஒரு பங்கு கிடைக்கும். அடுத்தடுத்து பரிந்துரை (Successive Nomination) என்பது ஒருவர் தகுதி பெற்ற பிறகு மற்றொருவர் தகுதி பெறுவார். இந்த புதிய விதிகளின் மூலம், வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் பரிந்துரைகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்று ரிசர்வ் தெளிவுபடுத்தியுள்ளது.
அந்த வகையில் புதிய பரிந்துரை விதிகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தேவையில்லாத இருப்பு இல்லாத கணக்குகளை மூடுவது நல்லது. அதேசமயம் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்குகள் தொடர்ந்து செயல்பட வேண்டுமெனில், அவ்வப்போது சிறு சிறு பரிவர்த்தனைகளைச் செய்வது கட்டாயமாகும். அந்த வகையில் செயலற்ற கணக்குகளை செயல்படுத்துவதும், பரிந்துரைகளை புதுப்பிப்பதும் வாடிக்கையாளரின் பொறுப்பு. கணக்குகளை கண்காணித்து, சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை அனுப்புவது வங்கியின் பொறுப்பு.
சிரமங்களைத் தவிர்க்க, வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்கள் கணக்குகளைத் தவறாமல் சரிபார்த்து, புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான முழு விவரங்களுக்கு நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.