

நாட்டில் குறைந்த கட்டணத்தில் சிறந்த போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து இருக்கிறது. நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் போக்குவரத்தையே பொதுமக்கள் அதிகம் நம்பியுள்ளனர். பொதுவாக விரைவு ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய இரண்டு மாதங்களுக்கும் முன்பே முன்பதிவு தொடங்கும்.
இந்த டிக்கெட் முன்பதிவில் தற்போது புதிய நடைமுறையை இன்று முதல் அமல்படுத்துகிறது IRCTC. இதன் படி இன்று முதல் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் இணைப்பு கட்டாயம்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே இந்த அறிவிப்பு வெளியான நிலையில், இந்த புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவில் இடைத்தரகர்களை குறைக்கவும், உண்மையான பயணிக்கு ரயில் டிக்கெட் சென்றடைவதை உறுதி செய்யவும் ரயில்வே நிர்வாகம் இந்த புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது.
பயணிகளின் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் அவ்வப்போது பல்வேறு விதிமுறைகளை கொண்டு வருகிறது இந்தியன் ரயில்வே நிர்வாகம். அவ்வகையில் இனி ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குதவற்கு முன் IRCTC செயலி அல்லது இணையதளம் வாயிலாக ஆதார் இணைப்பை மேற்கொள்ள வேண்டும்.
ஆதார் இணைப்பு சரிபார்க்கப்பட்ட பிறகு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் சரியான பயணிகளுக்கு ரயில் டிக்கெட் சென்றடைவது உறுதி செய்யப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு செய்ய பயணிகளுக்கான விதிமுறைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அதாவது இவர்கள் எப்போதும் போலவே ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கடந்த ஆண்டு தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் இணைப்பை கட்டாயம் ஆக்கியது இந்தியன் ரயில்வே. இதன் மூலம் இடைத்தரகர்களைக் கட்டுபடுத்தியது IRCTC. இதே நோக்கத்தோடு தற்போது இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கும் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கி உள்ளது IRCTC.
IRCTC - ஆதார் இணைப்பு வழிமுறை:
1. முதலில் IRCTC செயலி அல்லது இணையதளத்தில் உள்நுழைந்து, Check Aadhar அல்லது Link Aadhar என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
2. பிறகு 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டதும், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும்.
3. இந்த ஓடிபி-யை உள்ளிட்டதும், IRCTC இணையதளத்தில் உங்கள் ஆதார் சரிபார்ப்பு பூர்த்தி அடையும்.
4. அதன்பின்னர் நீங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு மேற்கொள்ளலாம்.