
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் படையெடுத்து வருவார்கள். எங்கிருந்தோ இருமுடி சுமந்து வந்து ஐயப்பனை வெறும் நொடி பொழுது மட்டுமே பார்க்க முடியும் என அனைவரும் நினைத்திருப்பார்கள். கூட்ட நெரிசலில் ஐயப்பனை சரியாக பார்க்க கூட முடியாமல் கடந்து செல்பவர்களும் இருக்கிறார்கள். இந்த சிரமத்தை போக்க தேவசம் போர்டு திட்டமிட்டுள்ளது. அது என்னவென்று பார்க்கலாம் வாங்க..
மாசி மாத பூஜைகளுக்காக ஐயப்பன் கோயில் நடை கடந்த 12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நடை திறந்த அன்று முதலே ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். 4 மணி நேரத்திற்கும் அதிகமாக பக்தர்கள் காத்திருக்கிறார்கள். வழக்கமாக மாத பூஜை நடைபெறும் நாட்களில் இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். ஆனால் பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக இரவு 11 மணிக்குத்தான் நடை சாத்தப்படுகிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு நிமிடத்திற்கு இத்தனை பக்தர்கள் என கணக்கு வைத்து 18 படிகளில் ஏற்றப்பட்டு வருகிறார்கள். அதற்கு பின்பும் மேம்பால கியூவில் காத்திருந்தால் தான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
ஆனால் வரும் மார்ச் மாதம் முதல் மாற்றம் ஏற்பட போகிறது. அதாவது மார்ச் 14ஆம் தேதி முதல் பக்தர்கள் 18ஆம் படி ஏறிய உடன் தரிசனம் செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனி பக்தர்கள் 18ஆம் படி ஏறிய பின்னர் இடது புறமாக சென்று நடை மேம்பாலத்தில் ஏற வேண்டிய அவசியம் இல்லை.
இந்த புதிய திட்டம் மூலம் 15 மீட்டர் தூரம் வரை நடந்து சென்றபடியே ஐயப்பனை பக்தர்கள் கண்கார தரிசனம் செய்து, வணங்க முடியும். ஒவ்வொரு பக்தரும் சுமார் 30 விநாடிகள் வரை ஐயப்பனை தரிசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். இரு வரிசைகளில் இடது பக்கம் உள்ள வரிசை சற்ற உயரமாகவம், வலது பக்கம் உள்ளது சற்ற தாழ்வாகவும் இருக்கும். இரு வரிசைகளிலும் நிற்கும் பக்தர்கள் சேர்ந்து நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பு இதனால் தவிர்க்கப்படும். வடக்கு வாசல் வழியாக இருமுடி இல்லாமல் வரும் பக்தர்கள் ஏற்கனவே உள்ள முதல் வரிசையில் சென்று தரிசிக்க முடியும்.
இந்த புதிய திட்டத்திற்கு சபரிமலை தந்திரிகள் அனுமதி வழங்கி உள்ளனர். கோயிலின் தாந்த்ரீக விதிகளை பாதிக்காத வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளதால் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். கேரள ஐகோர்ட்டும் இதற்கு அனுமதி வழங்கி உள்ளது. இந்த அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.