

தமிழக சட்டசபை கடந்த மாதம் 5-ம்தேதி தொடங்கிய நிலையில் இன்று வரை தினமும் துறைவாரியாக மானியக் கோரிக்கை தொடர்பான விவாதங்கள், நடைபெற்று வரும் நிலையில், இதில் புதிய அறிவிப்புகளும் வெளியிபிடப்பட்டு வருகிறது.
இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி தமிழ்நாட்டிற்கு சென்னையில் புதிய தலைமை செயலகம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
தற்போதுள்ள தலைமைச் செயலகம் 2 கட்டடங்களில் இயங்கி வருகிறது. 2 கட்டிடங்களில் 6000 பேர் பணியாற்றும் நிலை உள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் 30க்கும் மேற்பட்ட துறைகள் செயல்படுகின்றன.
அதிகாரிகளின் எண்ணிக்கையும் பொறுப்புகளும் அதிகரித்து வருகின்றன. எனவே ஒருங்கிணைந்த புதிய தலைமைச் செயலகம் அமைய வேண்டும் என்பது இன்றியமையாதது என்று அவர் கூறினார்.
புனித ஜார்ஜ் கோட்டையானது கிழக்கிந்திய கம்பெனியால் கடந்த கிபி 1640 ஆம் ஆண்டு சென்னையில் வணிக செயல்பாட்டுக்காக வாங்கப்பட்ட நிலத்தில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1644 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 1652 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அதிகாரபூர்வத் தலைமையிடமாகத் திகழ்ந்த புனித ஜார்ஜ் கோட்டை, சுதந்திரத்துக்குப் பிறகு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
ஏறத்தாழ 400 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசின் நிர்வாக மையமாகவும் மாநிலத்தின் பாரம்பரியத்தின் அடையாளமாகவும் திகழ்ந்து வருகிறது.
சுமார் 107 ஏக்கர் பரப்பரளவைக் கொண்ட இந்த வளாகத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் பயன்பாட்டுக்காக வெறும் 4 ஏக்கர் மட்டுமே இருக்கிறது.
மேலும் இந்த வளாகம் 2 லட்சத்து 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தக் கட்டடங்களில் 30-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் அரசு செயலர்கள், அலுவலர்கள், 6,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
எனவே இந்த இடப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. ஆனால் பின்னாளில் அந்த கட்டிடம் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டதால் தற்போது தலைமைச் செயலகம் தொடர்ந்து கோட்டை வளாகத்திலேயே செயல்பட்டு வருகிறது.
புனித ஜார்ஜ் கோட்டை தமிழ்நாடு அரசின் நிர்வாக வரலாற்றின் பெருமைமிக்க அடையாளமாக விளங்கி வந்தாலும், தமிழ்நாட்டின் எதிர்கால நிர்வாக வளர்ச்சிக்கும், திறன்மிக்க நிர்வாகத்திற்கும், உலக தரத்திலான பொது நிர்வாக உள்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கிலும் ஒருங்கிணைந்த புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பது இன்றியமையாதது.
இந்த புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் அனைத்து அரசு துறைகளையும் ஒரே வளாகத்தில் கொண்டு வந்து ஒருங்கிணைக்கப்படும். தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்று வர வசதிகள் மற்றும் பசுமை கட்டிட தர நிலைகளுக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும்.
அடுத்த நூற்றாண்டுகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய நவீன வசதிகளுடன் கூடிய கட்டட வளாகம் சென்னையில் 20 லட்சத்து சதுர அடி பரப்பளவில் ரூ. 1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.