

அந்தக்கால மன்னர்கள் முதல் இக்கால அரசியல்வாதிகள் வரை கோட்டையை பிடிக்கவேண்டும் என்பதே குறிக்கோளாக வைத்துள்ளனர். தமிழ்நாடு சட்டமன்றம் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலகம் சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ளது.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டையான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கிபி 1640 ஏப்ரல் 23ஆம் தேதி புனித ஜார்ஜ் நாளன்று கட்டி முடிக்கப்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் கிபி 1600 ஆம் ஆண்டு வாக்கில் வணிகம் செய்வதற்கு வசதியாக கடற்கரை நகரங்களில் தங்கி வணிக நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் வணிகத்தை நிலை நிறுத்த முதலில் ஆந்திராவில் உள்ள துறைமுக நகரமான மசூலிப்பட்டினத்தை தேர்வு செய்தனர். ஆனால் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லாததால் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வணிகம் மேற்கொள்ள மதராசபட்டினத்தை தேர்ந்தெடுத்தனர்.
அதன் விளைவாக ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்ட் பிரான்சிஸ் டே என்பவர் புலிகாட் முதல் சாந்தோம் வரை விஜயநகர மன்னர் வேங்கடப்பர் அவரது சகோதரர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்த பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர் சாந்தோமுக்கு வடக்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மீனவ கிராமத்தில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முறைப்படி வேங்கடப்பரிடம் பேச்சுவார்த்தை நடத்தி 600 பவுண்டு வாடகைக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து 2.5 லட்சம் ரூபாய்க்கு 1640 ல் ஆங்கிலேயர்கள் மிகப்பெரிய கோட்டையையும் துறைமுகத்தையும் கட்டி புனித ஜார்ஜ் கோட்டை என பெயர் சூட்டினார்.
இக்கோட்டை தவிர்க்க முடியாத அங்கமாக மாறியதால் அதனைச் சுற்றி புதிய குடியேற்ற பகுதிகள் முளைத்தன. இதன் காரணமாக ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையிடமாக கி.பி. 1641 ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டை மாறியது.
விரைவாக வளர்ச்சியடைந்த ஜார்ஜ் கோட்டையின் பாதுகாப்புக்காக 6 மீட்டர் உயரத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வளாகத்தில் புனித மேரி ஆலயம் 1678 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு வித்திட்ட ராபர்ட் கிளைவ் திருமணம் இங்குதான் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
1695 ஆம் ஆண்டு பிரான்சிஸ் டே கட்டிய `போர்ட் ஹவுஸ்` கட்டிடம் இடிக்கப்பட்டு அலுவலகங்கள்,ஆளுநர் இல்லம், அடுக்கு மாடி கட்டிடங்கள் போன்றவை ஆங்கிலேய அதிகாரிகள் தங்குவதற்காக கட்டப்பட்டன.
புனித ஜார்ஜ் கோட்டையை 1764 ல் பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலேயர்களுடன் போரிட்டு வென்றனர். அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுக் காரர்களிடமிருந்து கோட்டையை கைப்பற்றி அதனைச் சுற்றி அகழி வெட்டி 20 அடி உயரத்திற்கு கோட்டை சுவர்கள் எழுப்பி பாதுகாப்பை பலப்படுத்தினர்.
பிரெஞ்சுகாரர்களால் 1758-59 காலகட்டத்தில் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளான கோட்டை 1783-ல் புனரமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டு பீரங்கி படைகள், ஆங்கிலேய படை வீரர்கள் நிறுத்தப்பட்டு எதிரி களிடமிருந்து பாதுகாக்கப்பட்டது.
ஆனால் இவ்வளவு பாதுகாப்பையும் மீறி சுதந்திரப் போராட்ட வீரரான பாஷ்யம் ஆர்யா 1932 ஜனவரி 26-ல் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த 140 அடி கொடிக் கம்பத்தில் யூனியன் ஜாக் என்ற ஆங்கிலேயக் கொடியை கீழே இறக்கி இந்திய தேசிய கொடியை பறக்க விட்டார். அந்த வீர தீர செயலுக்கு பிறகு 1947 ஆகஸ்ட் 15 முதல் புனித ஜார்ஜ் கோட்டையில் இந்தியாவின் மூவர்ணக்கொடி பட்டொளி வீசி இன்றளவும் பறக்கிறது.
சுமார் 107 ஏக்கர் பரப்பளவில் பரந்திருக்கும் புனித ஜார்ஜ் கோட்டையில் முதலில் ஏற்றிய இந்திய தேசியக்கொடி அருங்காட்சியகத்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தவிர புனித ஜார்ஜ் கோட்டையில் முக்கிய கட்டிடங்களான வெல்லஸ்லி இல்லம், கிளைவ் மாளிகை, புனித மேரி ஆலயம், டவுன் ஹால், பாரக்ஸ் கட்டடம், கோட்டை அருங்காட்சியகம் போன்றவை பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பப்படும் சட்டமன்ற நிகழ்ச்சிகள் புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்று வருகிறது.
சென்னையின் தோற்றத்திற்கும் இந்தியாவின் சுதந்திர வரலாற்றிற்கும் பாலமாக இருக்கும் புனித ஜார்ஜ் கோட்டையின் 380 ஆண்டுகால பிரமாண்டமான பயணத்தை ஒரே பதிவில் எளிதாகப் புரிந்து கொள்ள உதவும்.