

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது புதிய திட்டங்களைத் தீட்டுவதில் மட்டும் இல்லை; தீட்டப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு எப்படிப் பயன்படுகின்றன என்பதில்தான் அடங்கியிருக்கிறது. ஆனால், அதற்கு நேர்மாறாக, மக்கள் வரிப்பணத்தில் பல கோடிகள் செலவழித்து, கட்டி முடிக்கப்பட்டு இன்று ஒரு பயணி கூட இல்லாமல் 'பேய்க் கோட்டையாக' காட்சியளிக்கிறது மத்திய பிரதேசத்தின் நிஷாத் போரா (Nishatpura) ரயில் நிலையம். இது இந்திய ரயில்வேயின் நிர்வாக குளறுபடிக்கு ஒரு ஆகச்சிறந்த உதாரணம்.
மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபால், மத்திய இந்தியாவின் மிக முக்கியமான ரயில்வே ஜங்ஷன் ஆகும். நாளுக்கு நாள் போபால் மற்றும் ராணி கம்லாபதி (Rani Kamlapati) ரயில் நிலையங்களில் பயணிகள் நெரிசல் அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்த நெரிசலை குறைக்கவும், இந்தூர் (Indore) மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து வரும் ரயில்களை எளிதாக கையாளவும் போபாலின் 5-வது ரயில்வே முனையமாக 'நிஷாத் போரா' தேர்ந்தெடுக்கப்பட்டது.
புதிய ஐலேண்ட் பிளாட்பாரம் (Island Platform), இரண்டு பக்கமும் அகலமான தண்டவாளங்கள், எலக்ட்ரானிக் சிக்னல் அமைப்புகள், நவீன டிக்கெட் கவுண்டர், பயணிகளுக்கான ஓய்வறைகள் என சகல வசதிகளும் ₹6 கோடி செலவில் அங்கே உருவாக்கப்பட்டு, 2023-ம் ஆண்டே தயாரானது.இந்த விவகாரத்தின் உச்சகட்ட வேடிக்கையான முரண் (Irony) என்னவென்றால், இந்த நிஷாத் போரா ரயில் நிலையம் போபாலின் பிரதான ஜங்ஷனில் இருந்து வெறும் 1.5 கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது.
இந்தூர் மற்றும் பிற நகரங்களில் இருந்து வரும் ரயில்கள் போபால் ஜங்ஷனில் பிளாட்பாரம் காலியாக இல்லை என்றால்,இதே நிஷாத் போரா ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில்தான் கொண்டு வந்து நிறுத்தப்படுகின்றன. பயணிகள் ஜன்னல் வழியே தங்களுக்குச் சேர வேண்டிய போபால் ஜங்ஷன் வெறும் 1.5 கி.மீ தூரத்தில்தான் இருக்கிறது என்பதை பார்ப்பார்கள். பிளாட்பாரமும் கண்ணுக்கு எதிரே அழகாக இருக்கும்.
ஆனால், அங்கே ஸ்டேஷன் இன்னும் பயன்பாட்டுக்கு வராததால், பயணிகள் கீழே இறங்கவோ, ஏறவோ அனுமதி இல்லை! "அருகே இருந்தும் போக முடியவில்லையே" என்று பயணிகள் ரயிலுக்குள்ளேயே தவித்துப் புழுங்கும் கொடுமை இன்றுவரை தொடர்கிறது.
வழக்கமாக ஒரு ரயில் நிலையம் திறக்கப்பட்டால் அங்கே மனிதர்களின் சத்தமும், ரயில்களின் ஹார்ன் ஒலியும் கேட்க வேண்டும். ஆனால், இந்த ₹6 கோடி நவீன நிலையத்திலோ மனித அரவமே இல்லை.
இதற்கான காரணங்கள்:
முறையான ஒப்புதல் இல்லை: ரயில் நிலையத்தைக் கட்டி முடித்த பிறகும், அங்கே ரயில்கள் நின்று செல்வதற்கான முறையான ஒப்புதலை (Time-table Stoppage Approval) ரயில்வே நிர்வாகம் இன்னும் வழங்கவில்லை.
பணியாளர்கள் இல்லை: நிலையத்தை இயக்க வேண்டிய ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் வழங்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் என ஒருவர்கூட இன்னும் நியமிக்கப்படவில்லை.
ரயில்கள் நிற்காத, ஊழியர்கள் இல்லாத ஒரு இடத்திற்குப் பயணிகள் எப்படி வருவார்கள்? இதனால், பகல் நேரத்தில் ஆடுகளும் மாடுகளும் மேயும் இடமாகவும், இரவு நேரத்தில் கும்மிருட்டில் மூழ்கிக் காட்சியளிக்கும் 'பேய் ஸ்டேஷனாகவும்' (Ghost Station) இந்த நிஷாத் போரா மாறியுள்ளது.
ரயில்வே அமைச்சகம் என்ன செய்து கொண்டிருக்கிறது?
₹6 கோடி மக்கள் வரிப்பணத்தில்கட்டப்பட்ட ஒரு பொதுச் சொத்து, கறையான் அரித்துப் பாழாகிக் கொண்டிருக்கும் போது, ரயில்வே அமைச்சகம் (Railway Ministry) என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழாமல் இல்லை.இதன் பின்னணியில் இருப்பது அப்பட்டமான அதிகாரத்துவ மந்தநிலை (Red Tapism). ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் (CRS) இறுதிப் பரிசோதனைச் சான்றிதழும், ரயில்களின் கால அட்டவணையில் இந்த நிறுத்தத்தைச் சேர்ப்பதற்கான கோப்புகளும் டெல்லியில் உள்ள ரயில்வே வாரியத்தின் மேசைகளில் நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தன.
உள்ளூர் அதிகாரிகள், "எங்களுக்கு மேலிடத்திலிருந்து இன்னும் எந்த உத்தரவும் வரவில்லை" என்று கைகளைக் விரித்துக் கொண்டிருந்தார்கள். தற்போது இது ஊடகங்களில் பெரிய விவாதப் பொருளாக மாறிய பிறகே, அமைச்சகம் லேசாக அசைந்து கொடுத்து கோப்புகளைத் தூசி தட்டத் தொடங்கியுள்ளது.
சுமார் 140 கோடி மக்கள் வாழும் நம் நாட்டில், ஒருபுறம் ரயில்களில் டிக்கெட் கிடைக்காமல் லட்சக்கணக்கான பயணிகள் படியில் தொங்கிப் பயணம் செய்கிறார்கள். மறுபுறம், கண்ணுக்கு எட்டிய தூரத்தில் போபால் ஜங்ஷன் இருக்கும்போதே, ₹6 கோடி மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட ஒரு நவீன ரயில் நிலையம், பயன்பாடே இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது.
நிஷாத் போரா வெறும் ஒரு ரயில் நிலையம் அல்ல; அது நமது திட்டமிடல் அமைப்பில் உள்ள ஓட்டைகளின் குறியீடு. இது போன்ற நிர்வாக அலட்சியங்கள் எப்போது மாறுமோ, அப்போதுதான் நாட்டின் உண்மையான வளர்ச்சி சாத்தியமாகும்!