
உலகின் டாப் பணக்காரர்கள் லிஸ்ட்டில் 18வது இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரும், ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரும், பிரபல தொழிலதிபராகவும் வலம் வருகிறார். இவரது மனைவி நீடா அம்பானி. இவர் மும்பை இந்தியன்ஸ் (கிரிக்கெட்) அணியின் இணை உரிமையாளர், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளை நிர்வகித்து வருகிறார். இவர் அம்பானி வணிக சாம்ராஜ்யத்திற்குள் ஒரு முக்கிய சக்தியாகவும், ஒரு தொலைநோக்கு பார்வையாளராகவும் உருவெடுத்துள்ளார்.
அம்பானி குடும்பம் என்றாலே பிரமாண்டத்திற்கு பேர் போனவர்கள் தான். தாங்கள் அணியும் ஆடை அணிகலன்கள் முதல் செல்லும் கார்வரை ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
நீடா அம்பானி பெரும்பாலும் விலை மதிப்புள்ள பொருட்களையே விரும்புவார். அப்படி நீடா அம்பானி அணியும் சேலை, நகைகள் என்று பல பொருட்கள் அதிக கவனத்தை ஈர்க்கும். அதேபோல் இவர் ஒரு நிகழ்ச்சிக்கு அணிந்த நகையை மற்றொரு நிகழ்ச்சிக்கு அணியமாட்டார். தான் பயன்படுத்தும் பொருட்களில் தனித்துவம் இருப்பதையும் அவர் விரும்புவாராம். இவர் பயன்படுத்தும் வெளிநாட்டு பிராண்டட் பைகள், செருப்புகள், பர்ஸ்கள் என அனைத்திலும் ஆடம்பரம் தெரியும். இவ்வளவு ஏன் நீடா தினமும் குடிக்கும் டீயின் விலையே பல லட்ச ரூபாயாம்.
அந்த வகையில் நீடா அம்பானி, பேஷன்களை உருவாக்குவதில் பெயர் பெற்றவர். வணிகத்தில் அவரது திறமையான செயல்பாடுகள் கவனம் பெற்றுள்ளன. அவர் பயன்படுத்தும் ஆடம்பரமான பொருட்களும் அவ்வப்போது நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகத் தவறவிடுவதில்லை.
அந்தவகையில் தற்போது, நீதா அம்பானி வாங்கியுள்ள சொகுசு கார் இணையத்தில் பேசுபொருளாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் பெரும் பணக்காரரும், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவருமான நீதா அம்பானி, நாட்டின் மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படும் ஒரு சொகுசு காரை வாங்கியுள்ளார். அந்த காரின் விலை ரூ.100 கோடி என்ற தகவல் தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது நீதா அம்பானி, ரூ.100 கோடி மதிப்புள்ள Audi A9 Chameleon காரை வாங்கியுள்ளதாகவும், இந்த காரின் தனித்துவமான அம்சங்கள் மற்றும் அட்வான்ஸ் தொழில்நுட்பங்கள், ஆட்டோமொபைல் உலகில் தற்போது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி அவரது கணவரான அம்பானியின் காரின் விலையை விட இது அதிகம் என்பது கூடுதல் தகவல்.
இந்த Audi A9 Chameleon கார் நிறத்தை மாற்றும் திறன்களைக் கொண்டது என்றும் இதன் ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் தனது நிறத்தை மாற்றிக்கொள்ளும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தான் இந்த காரின் சிறப்பு அம்சமாகும். இந்த கார் மணிக்கு 250 கிமீ வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டது. மேலும், பூஜ்ஜியத்திலிருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் மூன்றரை வினாடிகளில் எட்டிவிடும் என்றும் கூறப்படுகிறது.
நீதா அம்பானி வாங்கியுள்ள Audi A9 Chameleon கார் உலகிலேயே 11 பேரிடம் மட்டும்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நீதா அம்பானியிடம் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் VIII EWB, மெர்சிடிஸ்-மேபேக் S600 கார்ட், ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் மற்றும் BMW 7 சீரிஸ் போன்ற பல உயர் ரக சொகுசு கார்கள் உள்ள நிலையில் தற்போது 100 கோடி ரூபாயில் Audi A9 Chameleon வாங்கி இந்தியாவிலேயே தன்னிடம் தான் விலை உயர்ந்த கார்கள் உள்ளது என்பதை இதன் மூலம் காட்டியுள்ளார்.