

பாஜகவின் (BJP) மூத்த தலைவர்களில் முக்கியமானவராக வலம் வருபவர் தான் 69 வயதான மத்திய இந்தியாவின் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி(Nitin Gadkari). இவர் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் புதிய தலைமுறையினரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறியிருப்பது தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘என்னால் முன்புபோல இப்போதெல்லாம் அதிகப்படியான பணிகளை செய்ய முடியாததால், என்னால் முடிந்த பணிகளை மட்டுமே செய்து வருகிறேன்.
இப்போது, பணியாற்றுவதில் ஈடுபாடு குறைந்துவிட்டது. கடந்த 30 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். இந்த காலகட்டத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளேன். பல விருதுகளையும் பெற்றுள்ளேன்.
ஆனால், என்னால் இப்போது முன்பைப் போல அதிகமாகப் பணியாற்ற முடியவில்லை. புதிய தலைமுறையினரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வரும் புதிய தலைமுறையினருக்கு அனுபவமிக்கவர்கள் வழிகாட்ட வேண்டிய நேரம். எனவே, மூத்த தலைமுறையினர் வழிகாட்ட, புதிய தலைமுறையினர் பொறுப்புகளை ஏற்று, பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் இந்த பேச்சு, அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலுக்கு குட்பை சொல்ல தயாராகிவிட்டாரா? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் விரைவில் மிகப் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படலாம் என்று மத்திய அரசின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே பாஜகவின் தேசிய அமைப்பில் சமீபத்தில் புதிய நியமனங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் பேச்சு தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. எனினும், அவர் உடனடியாக பதவி விலகுவார் என்பதற்கு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.
இதற்கிடையே நிதின் கட்காரியின் பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் நிதின் கட்காரியின் அலுவலகம், 'நிதின் கட்காரியின் கருத்துக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தன் அறக்கட்டளை பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்றே அவர் கூறினார். அந்தப் பணிகளை இளம் தலைமுறையினர் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றே அவர் குறிப்பிட்டார்' என தெளிவுபடுத்தியது.
அமித் ஷா, பிரல்ஹாத் ஜோஷி, மனோகர் லால், அஸ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா, ஜோதிராதித்ய சிந்தியா ஆகிய 6 மூத்த அமைச்சர்கள் 2-க்கும் அதிகமான துறைகளைக் கவனித்து வருகின்றனர்.
இவர்களின் பணிச் சுமையைக் குறைக்கும் நோக்கத்திலும், அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளும் உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, குஜராத், பஞ்சாப் ஆகிய ஆறு மாநிலங்களைக் கருத்தில் கொண்டு அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் பாஜகவில் அமைப்பு ரீதியாக நிர்வாகிகள் மாற்றம் செயயப்பட்டனர். கடந்த ஜனவரியில் பாஜகவின் தேசிய தலைவராக, நிதின் நபின் பொறுப்பேற்றது முதல், இளம் தலைமுறையினருக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும் நிதின் நபின் தனக்கு ஏற்ப கட்சியில் 65 உறுப்பினர்களை கொண்ட டீமை அமைத்தார். இதில் 51 பேர் புது முகங்கள். அதோடு அவர்கள் இளம் வயதினராக உள்ளனர்.
கட்சியின் மூத்த தலைவர்களுக்கு பெரிய அளவில் இதில் இடம் கிடைக்கவில்லை. இந்த சூழலில், தான் நிதின் கட்காரி கட்சியின் செயல்பாட்டை உணர்ந்து புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பேசியுள்ள இந்த கருத்து பேசுபொருளாகி உள்ளது.
நிதின் கட்காரி, நாக்பூரில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) மாணவர் அமைப்பு மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) மூலம் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
1995 முதல் 1999 வரை மகாராஷ்டிராவில் சிவசேனா - பாஜக கூட்டணி அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். மும்பை-புனே விரைவுச்சாலை மற்றும் பல மேம்பாலங்களை அமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தார்.
2005-ல் மகாராஷ்டிர மாநில பாஜக தலைவரானார். பின்னர் 2009 முதல் 2013 வரை பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராகப் பதவி வகித்தார். அப்போது கட்சியின் மிக இளைய தேசியத் தலைவர் என்ற பெருமை பெற்றார்.
2014 முதல் அதாவது கிட்டத்தட்ட 12 ஆண்டுகள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துதல் மற்றும் நவீன சாலைப் போக்குவரத்து கட்டமைப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.