பணத்தை விட 'உடல்நலமே' பெரிய செல்வம்... அமைச்சர் நிதின் கட்கரி கற்ற பாடம்!

Minister Nitin gadkari and exercise and diet food
Minister Nitin gadkari and exercise and diet food
Published on

த்திய அமைச்சர் நிதின் கட்கரியின் உடல் எடை கொரோனா காலத்திற்கு முன்பு 135 கிலோவாக இருந்தது. ஆனால், அது தற்போது 89 கிலோவாகக் குறைந்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு, அவர் தனது எடையில் 46 கிலோவைக் குறைத்துள்ளார். இது ஊடகங்களில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. அதிகாலை 1 மணி முதல் 7 மணி வரை மட்டுமே உறங்கும் அவர், தினமும் இரண்டரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வதாகக் கூறியுள்ளார்.

கொரோனா காலத்தில் அவருடைய நண்பர்கள் பலர் உயிரிழந்தனர். அதற்குப் பிறகுதான், அவர் தனது உடல்நலனில் அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றாடப் பயிற்சிகளும் உணவும்

இவரின் அன்றாட உடற்பயிற்சிகளில் பிராணாயாமம், உடலை நீட்டும் பயிற்சிகள் (Stretching), தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் ஆகியவை அடங்கும். ஒரு பயிற்சியாளரின் வழிகாட்டுதலில் இந்தப் பயிற்சிகளைச் செய்து வரும் அவர், தன் உணவில் தினமும் ஒரு முறை மட்டுமே அரிசி சாதம் எடுத்துக் கொள்வதாகவும், அனைத்து விதமான எண்ணெய் உணவுகளையும் தவிர்த்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். புரதம் (Protein) மற்றும் நார்ச்சத்து உள்ள உணவுகளுக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

இது நாம் அனைவரும் கூர்ந்து கவனித்து, நம் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய ஒரு முக்கியமான செயலாகும்.

உடல் செயல்பாட்டின் அவசியம்

நமது வயது என்னவாக இருந்தாலும், உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இருப்பது ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ உதவும். இதற்கு வலுவான அறிவியல் சான்றுகள் பல உள்ளன. தொடர்ந்து உடல் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு இதய நோய், பக்கவாதம், நீரிழிவு நோய், புற்றுநோய், அகால மரணம், கீல்வாதம், இடுப்பு எலும்பு முறிவு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. மேலும், முதியவர்கள் கீழே விழுதல், மனச்சோர்வு, அல்சைமர் நோய் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளும் பெருமளவு குறைவதாக மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இன்றைய காலக்கட்டத்தில் தொழில்நுட்பம் நம் வாழ்க்கை முறையை மிகவும் எளிதாக்கியுள்ளது. இதனால் நாம் அன்றாடம் நமது உடல் ஆற்றலைக் குறைவாகவே பயன்படுத்துகிறோம். பல பெரியவர்கள் ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்தபடியே நேரத்தைச் செலவிடுகிறார்கள். இத்தகைய 'உட்கார்ந்த வாழ்க்கை முறை' (Sedentary Lifestyle) ஒரு 'அமைதியான கொலையாளி' என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்விற்கான வழிமுறைகள்

ஆரோக்கியமான உடல்நலத்திற்குப் போதுமான தூக்கம், சத்தான உணவு மற்றும் முறையான உடற்பயிற்சி ஆகியவை மிக அவசியம்.

  • தூக்கம்: இரவு நேரங்களில் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் சென்று, குறிப்பிட்ட நேரத்தில் எழுவதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

  • தவிர்க்க வேண்டியவை: மாலை நேரங்களில் மின்னணு இயந்திரங்கள் (Mobile, Laptop), தேநீர் மற்றும் காபி பயன்பாட்டைத் தவிர்ப்பது நல்லது.

  • மனநலம்: படுக்கச் செல்வதற்கு முன் மனதை லேசாக வைத்துக் கொள்ள வேண்டும். தூங்க முயற்சிக்கும்போது நமது மூச்சை ஆழ்ந்து கவனித்தால், இயற்கையாகவே நல்ல தூக்கம் வரும்.

  • நடைப்பயிற்சி: நடைப்பயிற்சி செல்லும்போது சரியான அளவிலான காலணிகள் மற்றும் உடைகளை அணிய வேண்டும். வாகன நெரிசல் இல்லாத பகுதிகளில் நடப்பது சிறந்தது.

எச்சரிக்கை: அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு!

உடற்பயிற்சி செய்யும்போது உடலில் வலியையோ, மூச்சுத் திணறலையோ உணர்ந்தால் பயிற்சியை உடனே நிறுத்திவிட வேண்டும். உடல் எடையைக் குறைப்பதற்காக உணவை அளவுக்கு அதிகமாகக் குறைப்பதோ, உடலை வருத்திப் பயிற்சி செய்வதோ நல்லதல்ல.

தீவிரமாக உடற்பயிற்சி செய்யும்போது இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இத்தருணங்களில் மிக அரிய வகையான 'வால்சல்வா ரெடினோபதி' (Valsalva Retinopathy) எனும் கண் சார்ந்த நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக அழுத்தத்துடன் வேலை செய்யும்போதும், உடற்பயிற்சியின் போதும் காற்றை உள்ளிழுப்பதும் வெளியே விடுவதும் சீராக இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
டாக்டர் வீட்டுக்கே போகாமல் இருக்க இந்த ஒரு அரிசி வீட்டில் இருந்தால் போதும்!
Minister Nitin gadkari and exercise and diet food

முக்கிய குறிப்பு: மூச்சை நிறுத்திப் பிடித்துக்கொண்டு எந்தவொரு உடற்பயிற்சியையும் செய்யக்கூடாது. கை, கால் நடுங்குவது அல்லது தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகப் பயிற்சியை நிறுத்த வேண்டும்.

உடல் ஆரோக்கியமே (Importance of health) உண்மையான செல்வம். ஆனால், அதுவும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான்!

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com