
இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் பலவிதமான வேலைகளை மிக எளிதில் செய்ய முடிகிறது. அனைத்து துறைகளிலும் ஏஐ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், விவசாயத்திலும் இதனைப் பயன்படுத்த தொடங்கி விட்டனர் ஆராய்ச்சியாளர்கள். இதன்படி ஓட்டுநரே இல்லாமல் ஏஐ உதவியுடன் டிராக்டரைப் பயன்படுத்தி நிலத்தை உழும் அரிய கண்டுபிடிப்பை பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் (PAU) கண்டுபிடித்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று தானியங்கி முறையில் பல்வேறு கண்டுபிடிப்புகள் உலகிற்கு அறிமுகமாகியுள்ளன. அவ்வகையில் தானியங்கி முறையில் இயங்கும் டிராக்டர் விவசாயிகளுக்கு நிச்சயமாக ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
இன்று காளை மாடுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்ட நிலையில், நிலத்தை உழுவதற்கு விவசாயிகள் பெரும்பாலும் டிராக்டரைத் தான் நம்பியுள்ளனர். அதிலும் விவசாயிகள் அனைவரிடத்திலும் டிராக்டர்கள் இருப்பதில்லை. தேவைப்படும் போது வாடகைக்கு டிராக்டரைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஓட்டுநரே இல்லாத டிராக்டரை லூதியானாவில் இருக்கும் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் கண்டுபிடித்து சாதனைப் படைத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவால் இயங்கும் இந்த டிராக்டருக்கு நிலத்தை உழ வேண்டும் என்ற கட்டளையை மட்டும் யாரேனும் ஒருவர் வழங்கினால் போதும். பிறகு தானியங்கி முறையில் மிகச் சரியாக நிலத்தை உழுது விடும். இதனால் விவசாயிகளுக்கு நேரம் மிச்சமாவதோடு, அந்த நேரத்தை வேறு ஏதேனும் வேலைகளில் செலவிடலாம்.
வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் சிறுசிறு மாற்றங்களைச் செய்து ஆராய்ச்சியாளர்கள் இந்த அதிநவீன டிராக்டரை கண்டுபிடித்துள்ளனர். இந்த வசதியை விவசாயிகள் தங்களுடைய டிராக்டரில் பொருத்திக் கொள்ள ரூ.4 இலட்சம் வரை செலவாகும் என பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுதவிர ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் நெல் நாற்று நடவு இயந்திரத்தையும் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் நிழலில் இருந்து கொண்டே ரிமோட் மூலம் நாற்று நடவை மேற்கொள்ள முடியும்.
பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர். சத்பீர் கோசல் கூறுகையில், “தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்பத்தில் சென்சார் மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுவொரு சிறப்பு வாய்ந்த தானியங்கி ஓட்டுநர் உதவி தொழில்நுட்பம். ஒருமுறை புரேகிராம் செய்துவிட்டு, கட்டளையிட்டால் இந்தத் தொழில்நுட்பம் விவசாய நிலத்தை சரியாக உழுது விடும். இதனை விவசாயிகள் பழைய மற்றும் புதிய டிராக்டர்களில் மிக எளிதாக பொருத்திக் கொள்ள முடியும்” என்று அவர் தெரிவித்தார்.
பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் பிரிவு இயக்குநர் அஜ்மீர் தத் கூறுகையில், “அதிநவீன தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட இந்த டிராக்டர் நிலத்தைத் துல்லியமாக உழுது விடும் என்பதால், விவசாயிகளுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். அதோடு இந்த முறையில் தேவைப்படும் டீசலின் அளவு கணிசமாக குறையும் என்பதால் விவசாயிகளுக்கு செலவும் மிச்சமாகும்” என்று அவர் தெரிவித்தார்.
விவசாயத் துறையில் இந்த கண்டுபிடிப்பு வெகு விரைவிலேயே பிரபலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அதிநவீன கண்டுபிடிப்புகள் விவசாயத்தின் தரத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் நேரத்தை மிச்சப்படுத்தவும் உதவுகின்றன.