

இந்தியாவை பொறுத்தவரை கடந்த 7 வருடங்களாக ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி 2 அடுக்குகளாக மாற்றப்பட்டன. அத்துடன் பல்வேறு பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி விகிதங்களிலும் மாற்றம் செய்யப்பட்டன. குறிப்பாக சில உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
மேலும், ஜிஎஸ்டி வரி குறைப்பு கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ்,
மருந்துகள் மற்றும் பல்வேறு உபகரணங்கள் முதல் ஆட்டோமொபைல்கள் வரை சுமார் 375 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் குறைந்துள்ளது.
அந்த வகையில் 90 சதவீதப் பொருட்களுக்கு, வரிச்சலுகை மற்றும் வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இன்னும், 10 சதவீத பொருட்களுக்கு, வரி குறைப்பும், சலுகையும் அளிக்கப்படவில்லை.
அந்த வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களான சாதாரண ரொட்டி, சப்பாத்தி, ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டா, பன்னீர், பால், பன்னீர், பீட்சா, பிரட் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
ஆனால் அதேசமயம் இட்லி, தோசை, புட்டு, இடியாப்பம் மாவு போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்காமல் 5 சதவீத ஜிஎஸ்டி வரி தொடரும் என்று அறிவிக்கப்பட்டதால் சாமானிய மக்களும், வியாபாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் இட்லி பாக்கெட் மாவுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
வடமாநில உணவுகளாக சப்பாத்தி, பரோட்டாவுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள சூழலில், தென்னிந்தியர்கள் விரும்பி சாப்பிடும் இட்லி, தோசை, இடியாப்பம் ஆகியவை 5 சதவீதம் ஜிஎஸ்டி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதற்கு பலரும் ஏன் இந்த பாராபட்சம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இட்லி மாவு ஒரு நாளில் கெட்டுப்போய் விடும் என்பதால் 5 சதவீதத்தில் இருந்து அதற்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று உணவுப்பொருள் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
அதேபோல் காகிதத்திற்கு, 18 சதவீதமும், ஆனால் காகிதத்தில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்கு, 5 சதவீதமும் ஜிஎஸ்டி வரியும் உள்ளது. எனவே காகிதத்திற்கு, 5 சதவீதமாக ஜிஎஸ்டி வரியை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சிலில் வலியுறுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வரித்துறை கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இட்லி, தோசை பல குடும்பங்களின் அன்றாட உணவாக உள்ளது. வட இந்தியாவில் சப்பாத்தி அத்தியாவசிய உணவாகக் கருதப்படுவது போல, தென்னிந்தியாவில் இட்லி, தோசை உள்ளன. ஆனால், இவற்றுக்கு வரி விதிப்பது நியாயமற்றது, என உணவக உரிமையாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
வடக்கு மற்றும் தென்னிந்திய உணவுகளுக்கு இடையில் இந்த வரி விதிப்பில் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.