
குறைந்த செலவில், விரைவில் செய்யக்கூடிய உணவுகளில் முதல் இடத்தில் இருப்பது ஆம்லெட். ஆம்லெட் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. உணவிற்கு சைடிஷ் எதுவும் இல்லை என்றாலும் ஒரு ஆம்லெட் இருந்தால் போதும்; உணவு தானாக வயிற்றுக்குள் சென்று விடும்.
சைவம் மற்றும் அசைவம் சாப்பிடுபவர்களில் முக்கால்வாசி பேருக்கு முட்டை விருப்பான உணவாகவே உள்ளது. வசதி இல்லாத ஏழை எளிய மக்களுக்கு முட்டை இருந்தால் போதும்; அதில் ஒரு ஆம்லெட் போட்டு அவர்களது உணவை திருப்தியுடன் முடித்துக்கொள்வார்கள்.
பெரிய ஹோட்டல்கள், தெருக்கடைகள் தொடங்கி இல்லத்தரசிகள் வரை அனைவரின் மெனுவிலும் தினமும் சாப்பிடும் வழக்கமான உணவு பட்டியலில் ஆம்லெட்டிற்கு கண்டிப்பாக இடம் உண்டு. வீட்டில் 2, 3 சைடிஷ் இருந்தாலும் ஒரு ஆம்லெட் போடு என்று கூறும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அந்த வகையில் அனைவருக்கும் விருப்ப உணவாக இருந்து வரும் நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் ஆம்லெட் குறித்து வந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ப்ளைன் ஆம்லெட் விலை குறித்த பதிவு பலரையும் அதிர்ச்சியடைய செய்திருப்பது மட்டுமல்லாமல் சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தி உள்ளது.
5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் ப்ளைன் ஆம்லெட்டின் விலையை பார்த்து, இணையதள பயனர்கள் அது முட்டை விலையா இல்ல, ஹோட்டலுக்கும் சேர்த்து விலையா என கலாய்ந்து வருகின்றனர்.
பெங்களூரை சேர்ந்த கிரண் ராஜ்புத் என்ற நபர் 5 ஸ்டார் ஹோட்டலுக்கு சென்று ப்ளைன் ஆம்லெட் ஒன்றை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அவர் சாப்பிட்டு முடித்தவுடன் ப்ளைன் ஆம்லெட்டுக்கு வந்த பில்லை பார்த்த அவருக்கு மயக்கமே வந்து விட்டது. மயக்கம் வரும் அளவிற்கு அந்த பில்லில் என்ன இருந்தது என்று யோசிக்கிறீங்களா?
அதாவது அவர் சாப்பிட்ட ஒரு ப்ளைன் ஆம்லெட்டின் விலை ரூ.800ம் மற்றும் அதற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டியும் போடப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் அந்த ஹோட்டல் பில் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் அவருடைய ஆதங்கத்தையும் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் பல்வேறு தரப்பினர் இடையே சிறந்த சாப்பாட்டின் விலைகள் நியாயமானதா அல்லது சுரண்டக்கூடியதா என்ற சூடான விவாதத்தைத் தூண்டியது.
சிறிய ஹோட்டல்கள் மற்றும் ரோட்டுக்கடையில் ஒரு ஆம்லெட் ஜிஎஸ்டி இல்லாமல் ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு முட்டையின் விலை ரூ. 10 என்று வைத்துக்கொண்டாலும் ரூ.800 + 18% ஜிஎஸ்டி போட்டிருப்பது அநியாயம் என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் சில பயனர்கள், ஆடம்பர ஹோட்டலில் நீங்கள் வாங்குவது சமூக அந்தஸ்தை மட்டுமே, ஆம்லெட் அல்லது உணவுகளை கிடையாது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
மற்றவர்கள் வரிவிதிப்பின் தாக்கத்தை சுட்டிக்காட்டி, ஹோட்டல் உணவகங்கள் சேவை பிரிவின் கீழ் வருவதால், அவற்றை அதிக ஜிஎஸ்டி விகிதங்களுக்கு உட்பட்டதாக விளக்கினர்.
இன்று ஸ்டார் ஹோட்டல்களில் உணவு சாப்பிடுவதை பலரும் கௌரவமாக கருதுகின்றனர். இதனால் அவர்கள் எவ்வளவு விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு தேவை கௌரவம் மட்டுமே, பணம் அல்ல. ஆனால் இதில் பாதிக்கப்படுவது என்னவோ ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் தான்.