மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரின் தாக்குதலால் கணவர் வேலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டால், மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை என்று சமீபத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..
கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டால், உடனே மனைவி, கணவரிடம் பராமரிப்பு தொகை கேட்பது வழக்கம். ஆனால் தனக்கு போதிய வருமானம் இல்லை என்று கூறி, பராமரிப்பு தொகை கொடுக்க முடியாது என்று கணவர்கள் சொல்வதுண்டு. இது போன்ற நேரங்களில் மனைவி நீதிமன்றம் மூலம் நிவாரணம் தேடிக்கொள்வது வழக்கம்.
உத்தர பிரதேசத்தில் கணவனின் வருமானத்தை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் முடக்கியதால், அவருக்கு ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரை சேர்ந்தவர் டாக்டர் வேத் பிரகாஷ் சிங். ஓமியோபதி மருத்துவரான இவருக்கும், இவரது மனைவி வினீதாவுக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம், வினீதாவின் சகோதரர் மற்றும் தந்தை ஆகியோர் மருத்துவமனைக்குள் புகுந்து டாக்டர் வேத் பிரகாஷை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவரது முதுகுத் தண்டுவடத்தில் குண்டு பாய்ந்து ரத்தம் கொட்டிய நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போதிலும் பிரகாஷ் சிங்கிற்கு முன்பு போல பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், மனைவி வினீதா தனது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த குஷிநகர் குடும்பநல நீதிமன்றம், ‘இந்த வழக்கின் சூழ்நிலையைப் பார்க்கும்போது, மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்க முடியாது’ என்று தீர்ப்பளித்து கடந்த 2025 மே 7ம் தேதி தள்ளுபடி செய்தது
இந்த உத்தரவை எதிர்த்து வினீதா அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி லட்சுமி காந்த் சுக்லா, அனைத்து ஆவணங்களையும், மருத்துவ அறிக்கைகளையும், வழக்கின் பின்னணியையும் ஆராய்ந்த பிறகு, கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தார்.
மேலும் மருத்துவ அறிக்கையில், கணவரின் முதுகுத்தண்டில் இன்னும் ஒரு குண்டுத்துகள் சிக்கியுள்ளதை கவனத்தில் எடுத்துக்கொண்டது. அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்தால், முடக்கம் (paralysis) ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாகவும், அதனால் அவர் சீராக உட்காரவும் முடியாத நிலை, வேலை செய்யவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டது.
இதன் அடிப்படையில் நீதிபதி லட்சுமி காந்த் சுக்லா தனது தீர்ப்பில், ‘கணவனின் வருமானத்தை ஈட்டும் திறனை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரே முடக்கியுள்ளனர். தவறு செய்தவர்களே அதிலிருந்து ஆதாயம் தேட அனுமதிக்க முடியாது. இது மிகப்பெரிய அநீதிக்கு வழிவகுக்கும். இந்திய சமூகத்தில் பொதுவாக ஒரு கணவன் தனது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்குவது கடமை என்றாலும், அது அவரது வருமானத்தைப் பொறுத்தே அமையும். இந்த வழக்கில் கணவர் உடல் ரீதியாகவே வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளார். அதற்கு நேரடி காரணம் மனைவியின் குடும்பத்தினரின் தாக்குதல்தான் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த வழக்கில் மனுதாரரின் குடும்பத்தினரே கணவனின் வருமானத்தை அழித்துள்ளதால், அவருக்கு ஜீவனாம்சம் கோர உரிமை இல்லை’ என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்..
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடியான தீர்ப்பு சமூக வலைதளத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.