இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்கள் மெட்ரோ கார்டுகளை பயன்படுத்த முடியாது என்றும், அதற்கு பதிலாக வேறு ஒரு கார்டை பயன்படுத்தலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மெட்ரோ ரயில்களில் எப்போதாவது சென்று பயணிப்பவர்கள் நேரடியாக டிக்கெட் வாங்கிக்கொண்டு பயணிப்பார்கள். ஆனால், தினமும் மெட்ரோ ரயில் மூலம் பணிகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்பவர்கள் கார்டு பயன்படுத்தவர்கள். அந்த கார்டில் குறிப்பிட்ட தொகை ரீசார்ஜ் செய்து அது முடியும் வரை பயணிப்பார்கள். பின்னர் மீண்டும் ரீசார்ஜ் செய்வார்கள்.
அந்தவகையில் வரும் மார்ச் மாதம் முதல் இந்த மெட்ரோ கார்டை பயன்படுத்த முடியாது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக சிங்கார சென்னை பயண அட்டையைதான் பயன்படுத்த முடியுமாம்.
இந்த அட்டையை தனியாக வாங்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஒரே அட்டை இருந்தால் பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திற்கும் பயன்படுத்தலாம்.
இந்த கார்டை சமீபத்தில்தான் அறிமுகப்படுத்தினர். சென்னையில் ட்ராபிக் மற்றும் கூட்ட நெரிசலால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதனால் மக்கள் மெட்ரோ, மின்சார ரயில், பேருந்து போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
மெட்ரோ ரயில்கள், எம்டிசி பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்களில் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டை (என்சிஎம்சி) ஏற்கும் பிற பிளாட்பார்ம்களில் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளைப் பெறுவதற்கு ஏதுவான 'சிங்கார சென்னை' ஸ்மார்ட் கார்டை, போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சமீபத்தில் அறிமுகப்படுத்தினார்.
அப்போது மெட்ரோ ரயில் பயணத்திற்கும் பயன்படுத்தலாம் என்று சொல்லப்பட்டதே தவிர, இதனால், மெட்ரோ ரயில் அட்டை செல்லாது என்று கூறவில்லை.
ஆனால், தற்போது மார்ச் மாதம் முதல் மெட்ரோ அட்டை செல்லாது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
மெட்ரோ கார்ட்டில் இருக்கும் பேலன்ஸை முழுவதுமாக பயன்படுத்திவிட்டு அந்த கார்டை மெட்ரோ நிர்வாகத்திடமே கொடுத்துவிட்டு 50 ரூபாய் டெபாசிட் தொகையை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிங்கார சென்னை கார்டை மெட்ரோ நிலையங்களில் இலவசமாக வாங்கி கொள்ளலாம்.
இந்த சிங்கார சென்னை அட்டை மூலம் ஷாப்பிங் , ஓட்டல் பில்களை செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.