

வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டியது அவசியம். அப்படி குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கத் தவறினால், வங்கிகளால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாதாரண சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கத் தவறும் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்க கூடாது என மக்களவையின் மனுக்கள் மீதான குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
நாட்டில் உள்ள பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வங்கியைப் பொறுத்தும் இந்த இருப்புத் தொகையின் அளவு மாறுபடுகிறது.
இந்நிலையில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை சிலர் பராமரிக்காத காரணத்தால், அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக பல்வேறு புகார்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் இதற்கு முடிவு கட்டும் வகையில் மக்களவையின் மனுக்கள் மீதான குழு தீர்க்கமான முடிவை எடுத்து, மத்திய அரசிற்கு வலுவான பரிந்துரை ஒன்றை செய்துள்ளது.
குறைந்தபட்ச இருப்பு தொகை விவகாரம் குறித்து மக்களவையின் மனுக்கள் மீதான குழு தெரிவிக்கையில், “சாதாரண வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க தவறும் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் இது பொது மக்களுக்கு பல்வேறு சிரமத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது ஏற்கனவே பெரும்பாலான குடிமக்கள் கடன் வலையில் சிக்கி தவிக்கும் நிலையில், இந்த அபராதத்தை தடுக்க வேண்டியது அவசியம்.
குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கு வங்கிகள் விதிக்கும் அபராதத்தை தடுக்கும் வகையில், ஒரு சீரான கொள்கையை மத்திய அரசின் நிதி குழுவும் ரிசர்வ் வங்கியும் உருவாக்க வேண்டும். இதுபோன்ற அபராதங்களை விதிப்பதற்கு பதிலாக, அதிக சேமிப்புத் தொகையை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரிவார்ட் பாயிண்ட்ஸ் வழங்குதல், கூடுதல் வட்டி மற்றும் கட்டண சலுகைகள் போன்றவற்றை வழங்கி, வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கலாம்.
இது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைப்பதோடு, சேமிப்பில் அதிக பலன்கள் கிடைக்கவும் வழிவகுக்கும். மேலும் கூடுதல் வட்டி கிடைக்கும் என்பதால், பொதுமக்கள் பெரும்பாலும் வங்கி கணக்குகளில் சேமிக்க தொடங்க அதிக வாய்ப்புள்ளது.
இது போன்ற நேர்மறையான திட்டங்களின் மூலம், மத்திய அரசு பொதுமக்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும்” என மனுக்கள் மீதான குழு அறிவுரைத்துள்ளது.
குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிப்பது, கிராமப்புற மக்களுக்கு கடும் சவாலை ஏற்படுத்தி வரும் நிலையில் மக்களவையின் மனுக்கள் மீதான குழு வழங்கிய அறிவுரை, பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
இதன் காரணமாக மத்திய அரசு விரைவில் நல்முடிவை எடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கு விதிக்கப்படும் அபராதம் நீக்கப்பட்டால், அது மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படும்.
இருப்பினும் மக்களவையின் மனுக்கள் மீதான குழு வழங்கிய அறிவுரையை, மத்திய அரசு இயக்குமா அல்லது நிராகரிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.