இனி விவசாய அடையாள எண் தேவையில்லை.! பயிர் காப்பீட்டில் பெரிய மாற்றம்.!

Individual Crop Insurance
Crop Damage
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

தமிழ்நாட்டில் டிட்வா புயலால் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யும் காலக்கெடுவை டிசம்பர் 1 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது மத்திய அரசு. இது தவிர பயிர் காப்பீடு செய்வதற்கு விவசாய அடையாள எண் தேவையில்லை எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆண்டுதோறும் குறுவை, நவரை மற்றும் சம்பா உள்ளிட்ட பயிர் சாகுபடிகளுக்கு ‘பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போதைய சம்பா பருவத்தில் பயிர்கள் அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளன. விவசாயிகள் தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் காப்பீடு செய்வதற்கு, கடந்த செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் கனமழை காரணமாக நவம்பர் 30ஆம் தேதி வரை பயிர் காப்பீடு செய்யலாம் என காலக்கெடுவை நீட்டித்தது மத்திய அரசு.

இந்நிலையில் தமிழகத்தில் டிட்வா புயல் காரணமாக பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால், டிசம்பர் 1 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பயிர் காப்பீடு செய்வதற்கு விவசாயி பதிவின் மூலம் வழங்கப்படும் விவசாயி அடையாள எண் கட்டாயமாகும். இருப்பினும் கனமழையின் காரணமாக தற்போது பயிர் காப்பீடு செய்ய விவசாயி அடையாள எண் கட்டாயம் இல்லை என விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 4 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே பொதுமக்களுக்கு இதில் பல்வேறு குழப்பங்கள் இருந்து வரும் நிலையில், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பயிர் காப்பீட்டு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டி மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

இதன் அடிப்படையில் நவம்பர் 30-ம் தேதி வரை பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்தது மத்திய அரசு. பயிர் காப்பீடு நீட்டிக்ப்பட்ட நாட்களில் 66,000 விவசாயிகள், 1.63 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்துள்ளனர்.

நடப்பாண்டில் சம்பா நெற்பயிர் சாகுபடி 31.33 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 19.06 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு 7.95 லட்சம் விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். தமிழ்நாட்டின் மொத்த சாகுபடி பரப்பளவில் இது 61% ஆகும். கடந்த ஆண்டை விடவும் நடப்பாண்டில் 1 இலட்சம் ஏக்கர் பயிர்களுக்கு கூடுதலாக காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
தனிநபர் பயிர் காப்பீட்டை முன்னெடுக்குமா அரசு?
Individual Crop Insurance

கடந்த நவம்பர் 25ஆம் தேதி அன்று பயிர் காப்பீடு செய்வதற்கு விவசாய அடையாள எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதனால் குத்தகை முறையில் விவசாயம் செய்பவர்களும், கோயில் நிலங்களில் விவசாயம் செய்பவர்களும் பாதிக்கப்பட்டனர். ஆகையால் விவசாயிகளின் நலன் கருதி, இதற்கு விலக்கு அளிக்குமாறு தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டது.

இந்நிலையில் சம்பா பருவத்தில் விவசாயிகளுக்கு விவசாய அடையாள எண் கட்டாயம் இல்லை எனவும், பயிர் காப்பீடு செய்வதற்கு டிசம்பர் 1 வரை காலக்கெடுவை நீட்டித்தும் வேளாண்மை உழவர் நலத்துறை அறிவித்துள்ளது. மேலும் நில உரிமையுள்ள அனைத்து விவசாயிகளும் இ-சேவை மையங்களை அணுகி, விவசாய அடையாள எண்ணிற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 4 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றனர். பயிர் காப்பீட்டு திட்டத்தில் தனி நபர் காப்பீட்டை முன்னெடுக்க வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு இன்னும் தீர்வு ஏற்படாத நிலையில், மத்திய அரசு இது குறித்து ஆலோசிக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் தற்போது மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
'ஒரு கிராமம் ஒரு பயிர்' திட்டத்தின் சிறப்பம்சங்கள்!
Individual Crop Insurance