

தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்கள் வாங்க அசல் குடும்ப அட்டை தேவையில்லை; கார்டின் மென்பிரதி (Soft Copy) அல்லது அட்டை எண் மற்றும் கைரேகையைப் பயன்படுத்தி அருகிலுள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம் என அமைச்சர் வெங்கடரமணன் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் ரேஷன் கடைகள் வாயிலாக, மலிவு விலையில் உணவுப் பொருட்கள் மாதம்தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 38,438 ரேஷன் கடைகளும், சுமார் 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்களும் உள்ளனர். ரேஷன் கார்டு மூலம் பொருட்கள் மலிவு விலையிலும் இலவசமாகவும் வழங்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அரசின் மற்ற திட்டங்களின் கீழ் உதவி பெறுவதற்கும் ரேஷன் கார்டு அவசியம்.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் வாயிலாக இலவசமாக, ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 20 கிலோ அரிசி, 3 கிலோ கோதுமையும் வழங்கப்படுகிறது. அதேபோல் 500 கிராம் சர்க்கரையும், துவரம் பருப்பு 1 கிலோவும், 1 லிட்டர் பாமாயில் மலிவு விலையில் கொடுக்கப்படுகிறது. ரேஷன் கார்டில் இருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்பவே இலவச அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களும் விநியோகம் செய்யப்படுகிறது.
இதற்கிடையே சமீபகாலமாக ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கும்போது, சில குடும்ப அட்டைதாரர்களுக்கு கைரேகை (பயோமெட்ரிக்) பதிவு ஆகாததால் பொருட்களை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக முதியவர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் விரல் ரேகைகள் தேய்ந்துபோனவர்களிடையே இந்தப் பிரச்சினை அதிகமாகக் காணப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
இதற்குத் தீர்வு காணும் வகையில் தற்போது ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு இனி அசல் குடும்ப அட்டையை (Ration Card) நேரில் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், கார்டின் மென்பிரதி அல்லது அட்டை எண் மட்டுமே போதுமானது என்றும் உணவுத் துறை அமைச்சர் திரு. வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் 2026-27ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது மானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது. அதில் உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ரேஷன் கடையில் கைரேகை பதிவு விழவில்லை என்றால், பதிவு கருவிழி (Iris) அங்கீகாரம், ஒரு முறை கடவுச்சொல் (OTP) அல்லது குடும்பத்தில் உள்ள வேறு நபரின் கைரேகையைப் பயன்படுத்திப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் கைரேகை வராதவர்களுக்காக முகம் மூலம் அடையாளம் காணும் (Face Authentication) புதிய முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நியாய விலைக்கடைகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கைவிரல் ரேகை, கண் கருவிழி அங்கீகரிப்பில் நிலவும் சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு முதற்கட்டமாக ரூ. 59 லட்சம் செலவில் முக அங்கீகார வசதி( ஃபேஸ் ஆதென்டிகேஷன்) கூடிய விற்பனை முனைய இயந்திரம் ரூ.59 லட்சம் செலவில் முதற்கட்டமாக 150 நியாய விலைக்கடைகளுக்கு வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏடிஎம் (ATM) இயந்திரத்தில் கணக்கு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்திப் பணம் எடுப்பது போல, ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை எண்ணைக் கூறினாலே போதுமானது. அங்குள்ள கைரேகைச் சரிபார்ப்பு (Biometric / Live Scan) மூலமாகப் பயனாளி உறுதி செய்யப்பட்டு உடனடியாகப் பொருட்கள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி பொதுமக்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் மட்டும் தான் பொருட்களை வாங்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. பணி நிமித்தமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெளியூர் மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும் பொதுமக்கள், தங்களுக்கு அருகில் உள்ள எந்தவொரு ரேஷன் கடையிலும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
பொதுமக்கள் லைசென்ஸ் மற்றும் ஆதாரை தங்களது ஸ்மார்ட்போனில் வைத்திருப்பதைப் போல, இனிமேல் ரேஷன் கார்டின் மென்பிரதியையோ (Soft Copy) அல்லது அட்டை எண்ணையோ ஸ்மார்ட்போனில் வைத்திருந்தால் போதுமானது. ரேஷன் கார்டு கையில் இல்லை என்பதற்காகப் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் திரும்பிச் செல்ல வேண்டிய அவசியம் இனிமேல் இருக்காது என்றும் அவர் விளக்கமளித்தார்.
பொதுமக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே சட்டமன்றம் வாயிலாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.