

நாடு முழுவதும் பெரிய நகரங்களை இணைக்கும் வகையில் சுமார் 170-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது அமரும் வகையிலான வந்தே பாரத் ரயில்களே இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தற்போது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை இயக்கவும் இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது.
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களில் RAC டிக்கெட் வசதி கிடையாது என்றும், இதில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.960 என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பிரத் ரயில் அசாமின் கவுஹாத்தி முதல் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா வரை இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்க இருக்கிறார்.
அதிவேக பயணத்தை உறுதி செய்யும் வகையில், நாட்டில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பயன்பாட்டிற்கு வந்த நாள் முதல், வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையொட்டி வந்தே பாரத் ரயில்களின் பெட்டிகளை அதிகரிக்கவும், படுக்கை வசதி கொண்ட ரயில்களை அறிமுகப்படுத்தவும் ரயில்வே வாரியம் திட்டமிட்டது.
இதன்படி தற்போது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இம்மாதம் 17ஆம் தேதி பயன்பாட்டிற்கு வர உள்ளது. பொதுவாக விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது RAC என்ற வசதி இருக்கும். இந்த RAC டிக்கெட் ஒருவருக்கு ஒதுக்கப்பட்டால், அந்த பயணிக்கு பகுதியளவு இருக்கையை உறுதி செய்யும். இந்நிலையில் புதிதாக வரவுள்ள படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலில் இந்த RAC வசதி கிடையாது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலில் மிகக் குறைந்த கட்டணமாக 400 கிலோமீட்டருக்கான கட்டணம் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணம் அந்தந்த பெட்டியைப் பொறுத்து அமையும். முதல் வகுப்பு ஏசி பெட்டியில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,520, இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,240 மற்றும் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.960 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் விரைவு ரயில்களில் இருப்பதைப் போன்ற பகுதியளவு இருக்கையை உறுதி செய்யும் RAC டிக்கெட் வந்தே பாரத் ரயிலில் கிடையாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதி அறிமுகப்படுத்தப்பட இருப்பது பயணிகளுக்கு சவுகரியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் ரயில் தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நகரங்களுக்கு வந்தே பாரத் திரையில் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கூடிய விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களின் வசதி, நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.