

அலுவலக வேலைகளில் ஈடுபடும் சிலர் சாப்பிடுவதை மறந்தும் கூட வேலை செய்கின்றனர். இதனால் பலருக்கும் உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. நேரத்திற்கு உணவை எடுத்துக் கொள்வது, நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். ஆனால் பெரும்பாலான ஊழியர்கள், வேலையில் மூழ்கி விட்டால் நேரத்திற்கு உணவை எடுத்துக் கொள்வதே இல்லை.
இதற்கெல்லாம் தீர்வு காணும் விதமாக ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் ஒரு புதிய கருவியைக் கண்டுபிடித்துள்ளார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர். இந்த ஏஐ கருவி வயிற்றில் இருந்து வரும் சத்தத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றவாறு உணவை தானாகவே ஆர்டர் செய்துவிடும்.
கர்நாடக மாநிலம் மங்களூரில் சோஹன் எம்.ராய் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் உரிமையாளராக இருப்பதோடு, சமூக வலைதளங்களில் தொழில்நுட்பம் சார்ந்த வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். இவர் தனது வேலைகளில் மும்முரமாக ஈடுபடும்போது, பசியையும் பொருட்படுத்தாமல் சாப்பிடவும் மறந்து விடுவார்.
இதுவே நாளடைவில் வாடிக்கையாகி விட்டதால், பசி மறத்துப் போனதால் இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நேரத்திற்கு உணவை எடுத்துக் கொள்ளவும், பசியின் போது உடனே சாப்பிடவும் சோஹன் எம்.ராய் ஏஐ உதவியுடன் ஒரு புதிய கருவியைக் கண்டுபிடித்துள்ளார். இந்த அதிநவீன கருவிக்கு இவர் ‘மாம் (MOM)’ எனவும் பெயரிட்டுள்ளார்.
வயிற்றில் ஏற்படும் சத்தத்தை அடிப்படையாகக் கொண்டு பசி எடுக்கும் நேரத்தை இந்தக் கருவி அறிந்து கொள்ளும். இந்த நேரத்தில் மனிதர்களின் உதவியின்றி மாம் கருவி தானாகவே ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்து விடும்.
மாம் கருவி குறித்து சோஹன் எம்.ராய் கூறுகையில், “முழுக்க முழுக்க 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் உருவான மாம் கருவியில் ஒலிவாங்கி மற்றும் ஸ்டெதஸ்கோப் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இந்தக் கருவியை வேலை செய்யும் போது வயிற்றில் பொருத்திக் கொண்டால், பசி எடுக்கும் நேரத்தில் வயிறு எழுப்பும் சத்தத்தை மிகவும் துல்லியமாகக் கண்டறிந்து விடும். பின்னர் ஆன்லைனில் கணினியில் உள்ள ஏஐ மென்பொருளுக்குத் தகவலை அனுப்பும்.
இந்த மென்பொருள் வயிற்றில் இருந்து வரும் சத்தத்தை ஆய்வு செய்து, அது பசிக்கான சத்தம் தானா என்பதை உறுதிப்படுத்தும். அதன் பிறகு ஆன்லைன் உணவு செயலி மூலம் உணவை ஆர்டர் செய்து, வீட்டிற்கே வரவழைத்து விடும். வயிற்றில் இருந்து வரும் சத்தம் குறைவாக இருந்தால் சிற்றுண்டியும், அதிகமாக இருந்தால் மீல்ஸ் மற்றும் பிரியாணி போன்ற முழு உணவையும் ஆர்டர் செய்யும் வகையில் மாம் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
சோஹன் எம்.ராய் ஒரு நாள் முழுக்க சாப்பிடாமல் இருந்து, மாம் கருவிக்கு தனது வயிற்றுச் சத்தத்தைப் பதிவு செய்து பயிற்சி அளித்தார். இந்த மாம் கருவி குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தன்னைப்போல் வேலையில் மூழ்கி சாப்பிட மறக்கும் பணியாளர்களின் உடல்நலனைப் பாதுகாக்கும் முயற்சியில் சோஹன் எம்.ராய் வெற்றியைப் பெற்றதோடு, பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.