

உறவுகளை அழைத்து பிரம்மாண்டமாக திருமணம் செய்ய வேண்டும் என்பதே பலருடைய விருப்பமாக உள்ளது. இதற்காக பொதுமக்கள் பலரும், பல ஆண்டுகளாக சேர்த்து வைத்த அத்தனை பணத்தையும் திருமணத்தில் செலவிடுகின்றனர். மேலும் சிலர் திருமணத்திற்கு கடன் வாங்கியும் செலவு செய்கின்றனர்.
குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால், திருமணத்திற்கான செலவும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் திருமண செலவு மட்டும் 8% உயர்ந்து வருவதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்நிலையில் எதிர்பாராத விபத்து அல்லது அவசர மருத்துவ சிகிச்சை அல்லது காலநிலை மாற்றத்தால் ஒரு திருமணத்திற்கு தடை ஏற்படும் போது, நாம் செய்த செலவுகள் லட்சக்கணக்கில் வீணாகி விடும்.
இம்மாதிரியான நேரத்தில் பொதுமக்களுக்கு கை கொடுக்கும் வகையில், தற்போது திருமண காப்பீடு திட்டம் (Wedding Insurance) நடைமுறைக்கு வந்துள்ளது.
சராசரியாக இந்தியாவில் ஒரு திருமணத்தை நடத்த, நடுத்தர குடும்பங்கள் 10 முதல் 20 லட்சம் ரூபாய் வரை செலவு செய்கின்றன. சில குடும்பங்களின் வசதிக்கு ஏற்ப இந்த திருமண செலவும் அதிகரிக்கிறது. மேலும் சில குடும்பங்கள் திருமணத்திற்காக ரூ.15 லட்சம் வரை கடன் வாங்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இன்றைய நவீன காலகட்டத்தில் பல்வேறு முறைகளில் திருமணங்கள் பிரம்மாண்டமாக நடக்கின்றன.
திருமண பேச்சுகள் வரும்போது, நம்முடைய திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்ற கனவு பலருக்கும் எழுந்து விடுகிறது. இதனால் தான் திருமண செலவுகளும் அதிகரிக்கின்றன. இந்நிலையில் பல லட்சங்கள் செலவு செய்து நடக்கும் திருமணத்திற்கு, சில ஆயிரங்கள் செலவில் காப்பீடு எடுப்பதில் தவறில்லை என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.
காப்பீடு ஏன் முக்கியம் என்பதை கொரோனா காலகட்டம் ஏற்கனவே நமக்கு உணர்த்திவிட்டது. அதற்கேற்ப கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மருத்துவ காப்பீடுகள், பொதுமக்கள் மத்தியில் அதிக அளவில் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எதிர்பாராத நிகழ்வுகளால் திருமணம் நின்று போகும் நிலையில், திருமண காப்பீடு திட்டம் உங்களுக்கு கை கொடுக்கும்.
திருமண காப்பீட்டுத் திட்டத்தின் படி, ரூ.7,000 பிரீமியம் செலுத்தினால் ரூ.10 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். அதே போல் ரூ.55,000 பிரீமியம் செலித்தினால், ரூ.1 கோடி வரை காப்பீடு கிடைக்கும்.
மணமக்கள் அல்லது அவர் தம் பெற்றோர்களுக்கு விபத்து நேரிடுவது, மோசமான வானிலை மற்றும் இயற்கை பேரிடர்கள் நிகழ்வதால் திருமணம் நின்று போவது, திருமணத்தின் போது தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த ஆவணங்கள் காணாமல் போவது, திருமண மண்டபத்தில் உள்ள பொருட்கள் சேதமடைவது உள்ளிட்ட பல காரணங்களுக்கு திருமண காப்பீடு கிடைக்கும்.
திருமணத்திற்கான பட்ஜெட் மற்றும் திருமணம் நடக்கும் இடம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, திருமண காப்பீட்டுத் திட்டத்திற்கான பிரீமியம் வேறுபடும். மேலும் காப்பீட்டு நிறுவனங்கள் பல்வேறு விதிமுறைகளை வகுத்து இருப்பதால், திருமண காப்பீடு எடுக்கும் போது பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.