

எரிமலை வெடிப்பு என்பது உலகில் எப்போதாவது நிகழும் ஓர் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியளவில் எத்தியோப்பியாவில் உள்ள ஹெய்லி குப்பி என்ற எரிமலை வெடித்துச் சிதறியது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகவே காட்சி அளித்தது. மேலும் எரிமலை வெடிப்பிலிருந்து உருவான புகை மேகம் பல்வேறு நாடுகளை நோக்கி நகர்ந்தது. குறிப்பாக நேற்று அதிகாலை 5 மணியளவில் புகை மேகமும், சாம்பலும் வானில் பரவி நகரத் தொடங்கியது.
எரிமலை வெடிப்பால் உருவான புகை மேகம், நேற்று இரவு 11 மணியளவில் இந்தியாவின் வடமேற்கு பகுதிகளைக் கடந்து சென்றது. எரிமலை சாம்பல் இந்தியாவில் நுழைந்த நிலையில், இப்போது தலைநகர் டெல்லியை எட்டியுள்ளது. இதனால் வழக்கத்தை விட அதிக இருள் சூழ்ந்து டெல்லி காணப்பட்டது. மேலும் குஜராத், ராஜஸ்தான், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்தப் புகை மேகம் பரவத் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், எரிமலை வெடிப்பால் பரவும் புகைமேகமும் காற்று மாசுபாட்டை அதிகரித்து விடுமோ என மாநில அரசு அச்சம் கொண்டுள்ளது. இருப்பினும் புகை மேகமும், சாம்பலும் 10 கிலோமீட்டர் உயரத்திற்கு மேலே இருக்குமானால், அவை காற்று மாசுபாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எரிமலை புகைமேகமும், சாம்பலும் ஒரு சில மணி நேரங்கள் வரை மட்டுமே வானில் நீடிக்கும். ஆகையால் இதனால் வட இந்திய மாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகரிக்காது எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம். எரிமலை சாம்பலானது, இந்தியாவை நோக்கி 100 - 120 கி.மீ. வேகத்தில் வருகின்றன. எரிமலை சாம்பலால் வானம் வழக்கத்தை விட இருண்டு காணப்படும் எனவும், இன்று இரவு 7:30 மணியளவில், இந்தியாவை விட்டு விலகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
ஆனால் இந்தப் புகை மேகம் வட இந்தியாவில் விமானப் போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் ஏற்பட்டுள்ள புகை மண்டலம் காரணமாக ஏற்கெனவே கேரளாவில் இருந்து துபாய் சென்ற விமானம் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது.
இந்நிலையில் விமானிகளுக்கு விமானப் போக்குவரத்துத் துறையின் இயக்குநரகம் அவசர ஆலோசனை ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
இந்த ஆலோசனையில், “எரிமலையில் இருந்து வெளியான சாம்பல், கண்ணாடியைப் போல மிகக் கூர்மையான சிலிகேட் துகள்களைக் கொண்டுள்ளது. இந்த சாம்பல் விமானத்தின் இன்ஜினுக்குள் போய் விட்டால், உதிரி பாகங்கள் அனைத்தையும் சிதைத்து விடும். இதனால் சில நேரங்களில் இஞ்சினே ஆஃப் ஆகி விடும். ஆகையால் எரிமலை சாம்பல் பரவி உள்ள வான்வெளிப் பகுதிகளில் குறிப்பிட்ட உயரம் வரை விமானத்தை விலக்கி இயக்க வேண்டும்” என எசசரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.