

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பீகாரில் கடந்த சில வாரங்களாக ஜனநாயக திருவிழா களை கட்டியிருந்தது. சுமார் 1½ மாதங்களாக பீகார் தேர்தல் களம் அனல் பறந்த நிலையில், மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு கடந்த 6 மற்றும் 11-ந்தேதிகளில் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.
இது தேர்தல் முடிவுகள் மீது நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. குறிப்பாக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துடன் நடத்தப்பட்ட தேர்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளுடன் நடைபெற்ற இந்த தேர்தல் பீகாரையும் தாண்டி நாடு முழுவதும் பெரும் ஆவலை ஏற்படுத்தி இருந்தன.
பீகார் சட்டசபை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். அதாவது ஒட்டுமொத்தமாக 66.91 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இது மாநில தேர்தல் வரலாற்றில் முதல் முறையாகும். குறிப்பாக பெண்களின் பங்களிப்பு 71.6 சதவீதம் இருந்தது. அவர்களே வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகளாக இருந்தனர்.
இறுதியில் மொத்தமுள்ள 243 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி சரித்திர வெற்றி பெற்று மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. கூட்டணியில் பா.ஜனதா கட்சி 89 இடங்களை கைப்பற்றி மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது.
ஐக்கிய ஜனதாதளம் 85, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 19, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5, ராஷ்டிரீய லோக் மோர்ச்சா 4 இடங்களை கைப்பற்றி இருந்தன. இந்தத் தேர்தல் முடிவுகளால், நிதிஷ் குமார் பீகாரின் முதல்வராக 10-வது முறையாக பதவியேற்க உள்ளார். இந்திய அரசியல் வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனையாகும்.
மறுபுறம் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் இணைந்த மெகா கூட்டணிக்கு வெறும் 35 இடங்கள் மட்டுமே கிடைத்தது.
இதில் ராஷ்டிரீய ஜனதாதளம் 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் 75 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற ராஷ்டிரீய ஜனதாதளம் இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்திருப்பது அதன் தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
பொதுவாக தேர்தலின்போது வன்முறை போன்ற சம்பவங்கள் நடைபெறும். இதனால் உயிர்ப்பலி ஏற்படும் அபாயமும் ஏற்படும். வாக்குச்சாவடிகளில் இயந்திரம் வேலை செய்யவில்லை. வாக்கு அளிக்க அனுமதிக்கவில்லை. கள்ள ஓட்டு செலுத்திவிட்டனர் என குற்றச்சாட்டு எழும். இதனால் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்படும்.
ஆனால் பீகாரில் முதன்முறையாக வாக்குப்பதிவின்போது வன்முறையால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. அதேபோல் எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு என்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1985 சட்டசபை தேர்தலின்போது 63 பேர் உயிரிழந்த நிலையில் 156 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டது. அதேபோல் 2005-ம் ஆண்டு 660 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பீகார் சட்டமன்ற தேர்தலில் இந்த முறை அதிக ஓட்டுகள் நோட்டாவுக்கு போடப்பட்டு உள்ளது. தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, 243 தொகுதிகளில் பதிவான மொத்த வாக்குகளில் 6.65 லட்சம் வாக்குகள் அதாவது 1.81 விழுக்காடு நோட்டாவிற்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில், 7.06 லட்சம் வாக்காளர்கள் அதாவது 1.68 விழுக்காடு பேர் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளனர். அதேபோல் 2015-ம் ஆண்டு 9.4 லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்திருப்பது தெரியவந்துள்ளது.