

நாட்டில் பொதுமக்களுக்கு முக்கியமான தனிநபர் அடையாள அட்டையாக ஆதார் கார்டு உள்ளது. இருப்பினும் ஆதார் கார்டில் பெரும்பாலும் பலரது தகவல்கள் பிழையாகவே உள்ளது. அதோடு முகவரி திருத்தம், கைபேசி எண்ணை இணைத்தல், கைரேகை மற்றும் கருவிழிகளை பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெறுவதில் பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்களுக்கு உதவும் வகையில் அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் அரசு கேபிள் டிவி நிறுவனங்களில் நிரந்தர ஆதார் மையங்களை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் கூடுதலாக 50 நிரந்தர ஆதார் மையங்களையும், 79 பள்ளி முகாம்களையும் அமைத்துள்ளது தமிழக அரசு. இந்த ஆதார் மையங்கள் எல்காட் நிறுவனத்தின் சார்பில் தற்போது அமைக்கப்பட்டுள்ளன.
எல்காட் நிறுவனம் மற்றும் அரசு கேபிள் டிவி நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து, இதுவரை தமிழ்நாட்டில் 587 நிரந்தர ஆதார் சேவை மையங்களை இயக்கி வருகின்றன. இதில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மட்டும் 327 நிரந்தர ஆதார் சேவை மையங்களை நடத்தி வருகிறது. தற்போது கூடுதலாக அமைக்கப்பட்ட 50 மையங்களையும் சேர்த்தால் மொத்தமாக 637 நிரந்தர ஆதார் மையங்கள் தமிழ்நாட்டில் இயங்குகின்றன.
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையைச் சேர்ந்த தமிழ்நாடு மின்னணு நிறுவனம் இதுவரை 266 நிரந்தர ஆதார் சேவை மையங்களை நடத்தி வருகிறது. தற்போது 50 சேவை மையங்கள் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் இந்த எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது.
புதிய ஆதார் பதிவு, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், தொலைபேசி எண்களை இணைத்தல், கருவிழி மற்றும் கைரேகை பதிவு செய்தல் மற்றும் புகைப்படத்தை பதிவு செய்தல் உள்ளிடட அனைத்து சேவைகளும் இந்த மையங்களில் வழங்கப்படுகின்றன. திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரை நிரந்தர ஆதார் சேவை மையங்கள் இயங்கும்.
புதிய ஆதார் சேவை மையங்கள் திறக்கப்பட்டாலும், ஆதார் கார்டில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் அப்டேட் ஆவதற்கு அதிக நாட்கள் எடுக்கின்றன என மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் சில திருத்தங்கள் நிராகரிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
புதிய ஆதார் சேவை மையங்கள் தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள 16 மாவட்டங்களில் 79 பள்ளி முகாம்களையும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாம்களின் மூலம் பள்ளி மாணவர்கள் தங்கள் ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ள முடியும்.
முதற்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மதுரை, திருச்சி, வேலூர், திருவண்ணாமலை, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி முகாம்கள் தினந்தோறும் நடைபெறும். ஆதார் கார்டில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டிய பள்ளி மாணவர்களின் பட்டியலை பள்ளி கல்வித்துறை மூலமாக பெற்று, கூடுதலாக 100 பள்ளி முகாம்களை ஏற்படுத்தவும் தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.