

மனித உடலில் உள்ள மூளையில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் ஸ்ட்ரோக் எனும் பக்கவாதம் ஏற்படும். ஸ்கேனர்களின் உதவியுடன் மூளையில் உள்ள பிரச்சனைகளை மருத்துவர்கள் கண்டறிந்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கமான ஸ்கேனர்களை காட்டிலும், தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட ஸ்கேனர்கள் மூளையில் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக கண்டறிய பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் நோய் பாதிப்பின் தீவிரத்தை உடனடியாக அறிந்து கொண்டு, வெகு விரைவில் நோயாளிகளுக்கு சிகிச்சையை வழங்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சையைப் பொறுத்தவரை நேரத்தை மிச்சப்படுத்துவது என்பது இன்றியமையாத ஒன்றாகும். இந்நிலையில் மருத்துவர்களின் நேரத்தை மிச்சப்படுத்தி, நோயாளிகளுக்கு அதிவிரைவான சிகிச்சை அளிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவுகிறது.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை தாமதமானால், ஒரு நிமிடத்திற்கும் 12 கிலோமீட்டர் நரம்பு இழைகள் அறுபடும் என சென்னையில் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேரத்தை மிச்சப்படுத்த ஏஐ தொழில்நுட்பம் எந்த அளவிற்கு உதவுகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏஐ தொழில்நுட்பம் மருத்துவ உலகில் மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.
மூளைக்குச் செல்கின்ற ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டாலும் அல்லது ரத்தக்குழாய் வெடித்தாலோ பக்கவாதம் ஏற்படுகிறது. இந்நிலையில் பக்கவாத நோயாளிகள் வெகு விரைவில் மருத்துவமனைக்கு வர வேண்டியது அவசியம். அப்போது தான் அதற்குரிய சிகிச்சைகளை உடனடியாக மருத்துவர்களால் வழங்க முடியும். மூளையை ஸ்கேன் செய்யும் போது ஏற்படும் கால விரயத்தைக் குறைக்க தற்போது ஏஐ தொழில்நுட்பம் வந்துவிட்டது. சென்னையில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும், மருத்துவர்கள் நோயாளிகளின் நோயறிதல் நேரத்தை கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் குறைந்துள்ளன.
மருத்துவ உலகைப் பொருத்தவரை இந்த இருபது நிமிட சேமிப்பு என்பது ஆகச்சிறந்த சாதனையாகும். பொதுவாக இதற்கு முன்பு வரை ஸ்கேன் எடுக்க 30 நிமிடங்கள் தேவைப்பட்டது. ஆனால் ஏஐ உதவியுடன் தற்போது 7 நிமிடங்களே போதுமானதாக உள்ளது.
ஒரு சில ஏஐ மென்பொருட்கள் பக்கவாதத்தை அளவிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட அளவில் மதிப்பெண்களை வழங்குகின்றன. இதில் 6-க்கும் குறைவான மதிப்பெண்களைக் கொண்டிருந்தால், நோயாளிக்கு உடனடி சிகிச்சை தேவை என அர்த்தம். மேலும் ஏஐ தொழில்நுட்பம் நோய் பாதிப்பு உள்ள பகுதிகளை மிகத் துல்லியமாக காட்டுவதால், நிபுணர்கள் இல்லாத நேரங்களில் நரம்பியல் மருத்துவர்கள் சரியான முடிவை எடுக்க உதவுகின்றன.
இனி மருத்துவர்கள் அனைவரும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் மட்டுமே இந்தத் துறையில் நீடிக்க முடியும் எனவும் சென்னையைச் சேர்ந்த சில மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நிபுணர்கள் இல்லாத கிராமப்புற பகுதிகளில் ஏஐ தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும். அதே வேளையில் இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, நோயாளிகளுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும் என அரசு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.