அடுத்த ஆண்டு ஜனவரி முதல் காவலர்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் பேருந்து பயணம் இலவசம் என்ற செய்திகள் கசிந்துள்ளன.
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்களுக்கு இலவச பேருந்து பயண வசதி கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் பல பெண்கள் நன்மையடைந்தார்கள். இந்த இலவச பயணம் திட்டம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. அந்தவகையில் இதற்கு அடுத்தப்படியாக போலிஸாருக்கும் மூத்த குடிமக்களுக்கும் இலவச பேருந்து பயணம் என்றத் திட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்ய, டிசம்பர் 21ஆம் தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவிந்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜுன் வரை பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் என்ற கணக்கில் சுமார் ஆறு மாதங்களுக்கு கொடுக்கப்பட உள்ளது.
இந்த சேவையைபெற விரும்பும் மூத்த குடிமக்கள் தங்களுடைய இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை, வயது சான்று, இரு புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டோக்கன்களை டிசம்பர் 21 ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை உரிய மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த டோக்கன்களை 42 மையங்களில் வழங்கவுள்ளனர். காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கவுள்ளனர். 21ம் தேதி முதல் இந்த மாதம் டிசம்பர் 31ம் தேதி வரை இந்த டோக்கன்கள் வழங்கப்படும்.
அதேபோல் போலிஸார் இலவச பயணம் செய்யவும் அனுமதி வழங்கப்படவுள்ளது. அரசு பேருந்துகளில் கிரேட் 2 கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான போலீஸார் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம்.
பெண்கள் இலவச பேருந்து பயணம் மூலம் மாதம் 1000 ரூபாயை சேமிக்கிறார்கள் என்று தெரியவந்த நிலையில், தற்போது இந்த திட்டமானது மூத்த குடிமக்களுக்கு பெரிய அளவில் உதவும் என்றே சொல்லப்படுகிறது. இதன்மூலம் உடம்பு முடியாதவர்கள் மருத்துவமனைக்கு செல்லும்போதெல்லாம் எளிதாக செல்லலாம். மேலும் இதன்மூலம் பல நன்மைகள் கிட்டும்.