

புதிய வாகனங்களை வாங்கும் போது, குறிப்பிட்ட நாட்களுக்குள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு (RTO), வாகனங்களை நேரில் கொண்டு சென்று பதிவு செய்ய வேண்டியது அவசியம். இந்நிலையில் தனிநபர் மற்றும் சொந்த பயன்பாட்டுக்கு வாங்கப்படும் கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களை இனி வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறை இன்று முதல் (டிசம்பர் 1) அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் 1,500 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் யூனிட் அலுவலகங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இங்கு தினசரி கிட்டத்தட்ட 8,000 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதில் 3,000 முதல் 4,000 வாகனங்கள் சொந்த பயன்பாட்டுக்காக வாங்கப்படும் வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய வாகனங்களைப் பதிவு செய்வதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வாகனத்தின் உரிமையாளரோ அல்லது விற்பனை பிரதிநிதியோ, வாகனத்துடன் நேரில் வர வேண்டியது கட்டாயமாகும். இந்நிலையில் புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் படி, சொந்த பயன்பாட்டுக்காக வாங்கப்படும் வாகனங்களை இனி நேரில் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் அமல்படுத்தப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “மோட்டார் வாகன புதிய சட்டத் திருத்தத்தின் கீழ், சொந்தப் பயன்பாட்டுக்காக வாங்கப்படும் புதிய வாகனங்களை, RTO அலுவலகத்திற்கு நேரில் கொண்டு வருவதில் விலக்கு அளிக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி தமிழக போக்குவரத்து துறை ஆணையரான கஜலட்சுமி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் இந்த புதிய நடைமுறை டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவித்தார். தமிழக அரசின் இந்த புதிய நடைமுறையால், இலட்சக்கணக்கான பொதுமக்கள் பயன்பெறுவார்கள் எனக் கருதப்படுகிறது.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “சொந்த பயன்பாட்டுக்கு வாங்கப்படும் புதிய வாகனங்களை பதிவு செய்ய, சம்பந்தப்பட்ட விற்பனை டீலர்கள், RTO அலுவலகத்திற்கு நேரில் வாகனங்களை எடுத்து வருவர். இதற்காக, வாகன உரிமையாளர்களிடம் தனி கட்டணமும் வசூலிப்பர். சொந்த பயன்பாட்டுக்காக வாங்கப்படும் புதிய வாகனங்களில், 70% முதல் 80% வரை இருசக்கர வாகனங்களாகவே இருக்கின்றன.
புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின் படி, பைக் மற்றும் கார் போன்ற சொந்த பயன்பாட்டு வாகனங்களை இனி நேரில் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை. ஆனால் வணிகம் மற்றும் பிற பயன்பாட்டிற்கு வாங்கப்படும் புதிய வாகனங்களைப் பதிவு செய்ய, வாகனங்களை கட்டாயம் நேரில் கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.