வந்தாச்சு ஸ்மார்ட் பார்க்கிங்..! இனி பார்க்கிங் பிரச்சினையே இருக்காது..!
சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து நெரிசல் என்பது இன்றுவரை பெரும் பிரச்சினையாகவே உள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போக்குவரத்து துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தற்போது ஸ்மார்ட் பார்க்கிங் வசதியை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
சென்னையில் வாகனங்களைப் பார்க்கிங் செய்வதற்கு இடவசதி குறைவாகவே உள்ளது. பார்க்கிங் பிரச்சினையால் கூட சில சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தான் தற்போது ஸ்மார்ட் பார்க்கிங்கை நோக்கி போக்குவரத்து துறை நகர்கிறது.
சென்னையில் தற்போது ஸ்மார்ட் பார்க்கிங் வசதியை அமைப்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதற்கட்டமாக அண்ணா நகரில் சோதனை முயற்சியாக ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஸ்மார்ட் பார்க்கிங் குறித்த ஆய்வு முடிவுகள் தமிழக வளர்ச்சி வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதன்பிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
சென்னையில் தற்போது வரை 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளன. அதோடு 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன. இடப் பற்றாக்குறை காரணமாக வாகனங்களை பொதுமக்கள் சாலையிலேயே நிறுத்தி விடுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னையில் 100 பேரில் 47 பேர் இருசக்கர வாகனம் வைத்துள்ளனர். இந்நிலையில் பார்க்கிங் வசதியை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் போக்குவரத்து துறை மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
சென்னையில் கிட்டத்தட்ட 14 இலட்சம் கட்டடங்கள் உள்ளன. இதில் 13 இலட்சம் கட்டடங்கள் வரி செலுத்தத் தகுதி கொண்டவை. இந்தக் கட்டடங்களில் வசிக்கும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான போதுமான இடத்தை ஒதுக்கித் தர போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ளது.
சென்னையில் உள்ள அண்ணாநகரில் 3 மீட்டர் அகலமுள்ள 40 தெருக்கள் ஸ்மார்ட் பார்க்கிங் வசதிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் வாகனத்தின் வகை மற்றும் தேவை கணக்கில் கொள்ளப்படும். இதன் ஒருபுறம் மட்டும் 21/2 மீட்டர் அகலத்தில் வாகனங்கள் நிறுத்தப்படும் என்பதால் போக்குவரத்து நெறிமுறையைக் கையாள முடியும்.
ஸ்மார்ட் பார்க்கிங்கில் கார் பார்க்கிங் செய்ய ரூ.20 மற்றும் இருசக்கர வாகனத்தைப் பார்க்கிங் செய்ய ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இதன்மூலம் போக்குவரத்து துறைக்கு கணிசமாக வருவாய் கிடைக்கும். இந்தத் திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றால், உடனடியாக சென்னையின் 15 மண்டலங்களில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
ஸ்மார்ட் பார்க்கிங் மூலமாக சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். அதோடு விமான நிலையம், இரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களிலும் ஸ்மார்ட் பார்க்கிங்கை அமைக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.